வியாழன், 9 பிப்ரவரி, 2017

சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதத்தை பன்னீர்செல்வம் வெளியிட்டார் !

சென்னை : ‛ஆட்சி, கட்சியில் பங்கேற்க வேண்டும் என்று துளியும்
ஆசையில்லை' என ஜெ.,க்கு சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதத்தை பன்னீர் செல்வம் நேற்று(ஜன.,8) வெளியிட்டார்; வெளியேற்றம்: போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, திரும்பி வரும்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை அளித்திருந்தார். அக்கடிதத்தை பன்னீர் செல்வம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டார்.   அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டது என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கட்சியின் நற்பெயருக்கு களங்கங்கள் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன், மிகுந்த வேதனை அடைந்தேன்.


இவை எல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை.
சந்தித்த நாள் முதல் இன்றுவரை அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்
கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.
அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான். இவ்வாறு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்து விட்டேன். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.

என்னைப் பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்கு துளியும் ஆசையில்லை. பொதுவாழ்வில் பங்கு பெற வேணடும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவுக்காக அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்.''

இவ்வாறு அந்த மன்னிப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  தினமலர்

கருத்துகள் இல்லை: