வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

சசிகலாவை விட்டு பிரிந்த பிறகு உத்தமர் வேடம் போட முயற்சி ஓ.பன்னீர்செல்வம் மீது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த அனைத்திலும் சசிகலா குழுவினருக்கு துணையாக இருந்து விட்டு, இப்போது பிரிந்து வந்த பிறகு உத்தமர் வேடம்
சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை விட்டு பிரிந்த பிறகு உத்தமர் வேடம் போட முயற்சி செய்கிறார் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– விசாரணை கமி‌ஷன் தமிழகத்தின் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். ஆனால், அதன்பின்னர் 24 மணி நேரமாகியும் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளாதது ஐயத்தை ஏற்படுத்துகிறது.


ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்க முடியுமா? என்பதே ஐயமாக உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அதை மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றுவது தான் சாத்தியமான தீர்வாக அமையும் என்பது எனது கருத்தாகும். கேள்வி எழுப்பாதது ஏன்? ஜெயலலிதாவின் மரணத்திலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஐயம் இருக்குமானால் அதுகுறித்து இவ்வளவு நாட்களாக அவர் கேள்வி எழுப்பாதது ஏன்?.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிடம் நலம் விசாரிக்க வந்த மத்திய மந்திரிகள், பல மாநிலங்களின் கவர்னர்கள், முதல்–அமைச்சர்கள் உள்ளிட்ட எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களை பன்னீர்செல்வமும், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் தான் சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிவருவதாக தெரிவித்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து எந்த அடிப்படையில் இந்த தகவல்களை அவர்கள் இருவரும் தெரிவித்தார்கள். யாரோ கூறியதை அல்லது கூறும்படி சொன்னதைத் தான் தலைவர்களிடம் பன்னீர்செல்வம் கூறினார் என்றால் அதற்கான கட்டாயம் என்ன?.

மக்கள் நம்பமாட்டார்கள் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே விசுவாசமானவராக இருந்திருந்தால் அந்த உண்மையை அப்போதே பன்னீர்செல்வம் கூறாதது ஏன்?. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த அனைத்திலும் சசிகலா குழுவினருக்கு துணையாக இருந்து விட்டு, இப்போது பிரிந்து வந்த பிறகு உத்தமர் வேடம் போட பன்னீர்செல்வம் முயல்கிறார். ஆனால், அவரது நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். இதுகுறித்து நிச்சயம் ஒருநாள் விசாரணை நடத்தப்படும். அப்போது அனைத்து உண்மைகளும் வெளிவருவது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார் தினத்தந்தி

கருத்துகள் இல்லை: