வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஆளுநர் மாளிகையில் பன்னீர்செல்வம் : எம் எல் ஏக்கள் சிறை ! என் ராஜினாமாவை வாபஸ் வாங்குகிறேன் ..


மின்னம்பலம் : “சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை ஈசிஆர் ரோட்டில் உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைத்திருந்தார்கள். இருபத்தைந்து எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் என்ற கண்காணிப்பை சசிகலா பலப்படுத்தியிருந்தார். இரண்டுபேருக்கு ஒரு அறை ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அத்தனையும் செய்து கொடுக்கச்சொல்லி ரிசார்ட் நிர்வாகத்துக்கு சொல்லப்பட்டிருந்தது. இன்று வள்ளலார் தினம் என்பதால் மதுக் கடைகளுக்கும், இறைச்சிக் கடைகளுக்கும் விடுமுறை. ஆனால் அதையெல்லாம் மறந்து விதவிதமான மது பாட்டில்களும், ஆடு, கோழி, மீன் என இறைச்சி வகைகளும் அந்த ரிசார்ட்டுக்கு சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இன்று தைப்பூசம் என்பதால் சில எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் அசைவ உணவுகளை தொடவில்லையாம். அந்த ரிசார்ட்டில் இருந்த எந்த ரூமிலும் டி.வி. ஓடவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் ரிசப்சனுக்கு போன் செய்து கேட்டிருக்கிறார்கள். ‘டிஷ் கொஞ்சம் பிரச்னையாக இருக்கு. சரியாகிடும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்று மாலை வரை டி.வி. ஓடவே இல்லை. உண்மையில், டிஷ் எதுவும் பிரச்னை இல்லையாம். நேற்று எம்.எல்.ஏ.,க்களை இந்த ஹோட்டலுக்கு கூட்டிவரும்போதே எந்த அறையிலும் டி.வி. ஓடக் கூடாது என்ற கண்டிஷனும் போடப்பட்டிருக்கிறது.
அதனால், வழியில்லாமல் இப்படி ஒரு பொய்யை ஹோட்டல்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள். இது தெரிந்து பல எம்.எல்.ஏ.,க்கள் சண்டை போட்டிருக்கிறார்கள். அவர்களை கருணாஸ்தான் பேசி சமாதானம் செய்திருக்கிறார். ‘எப்பவும் வீட்டுல டி.வி. தானே பார்த்துட்டு இருப்பீங்கண்ணே.. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு சந்தோஷமா இருங்கண்ணே..’ என்று சொன்னாராம் கருணாஸ். ஆனாலும் பல எம்.எல்.ஏ.,க்கள் சமாதானம் ஆகவில்லையாம்.

இது ஒருபுறமிருக்க, அந்த ரிசார்ட்ஸ் இருக்கும் கூவத்தூருக்கு யாரும் உள்ளே வரமுடியாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட மன்னார்குடி ஆட்களின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது கூவத்தூர்.

ஒருகட்டத்தில் சொந்த வீட்டுக்கே போகமுடியாமல் சிலர் சிரமத்துக்கு உள்ளாக, அந்த ஊர்க்காரர்கள் கோபத்தில் கொந்தளித்திருக்கிறார்கள். ‘இன்னைக்கு 7 மணி வரை பொறுத்துக்கோங்க...எல்லோரையும் இங்கேயிருந்து அழைச்சிட்டுப் போயிடுறோம்...’ என்று சொல்லி ஊர்க்காரர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.

கார்டனிலிருந்து கவர்னரைச் சந்திக்க கிளம்பிய சசிகலா எம்.எல்.ஏ.,க்கள் தனக்கு ஆதரவு தெரிவித்துத் தந்த கடிதங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்திருக்கிறார்.
டெல்லியில் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த தம்பிதுரை, உற்சாகமான பதிலை சசிகலாவிடம் தெரிவித்தாராம். பன்னீர், கவர்னரிடம் பேசிய விபரங்களை கேட்டறிந்திருக்கிறார். பிறகு, ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றுவிட்டு அமைச்சர்களுடன் கவர்னர் மாளிகைக்கு கிளம்பினார்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது. “மாலை சரியாக 4.15 மணிக்கு தனது வீட்டிலிருந்து கவர்னர் மாளிகைக்கு கிளம்பிவிட்டார் பன்னீர்செல்வம். அவரோடு ஒரே காரில், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் சென்றனர். மற்றவர்கள் இன்னொரு காரில் பின்தொடர்ந்தனர். இன்று மதியம் பன்னீரைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க மதுசூதனன் வந்தார். அதிலிருந்தே அவர் பன்னீர் வீட்டில்தான் இருந்தார்.

கவர்னரிடம் என்னவெல்லாம் பேசலாம் என பன்னீருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். கவர்னரிடம் பேசவேண்டிய விஷயங்களை ஒரு டிராஃப்ட் ஆக தயார்செய்து கையில் எடுத்துக்கொண்டாராம் பன்னீர். ஆளுநர் மாளிகையில் சரியாக மாலை 4.55 மணிக்கு கவர்னரை சந்தித்திருக்கிறார் பன்னீர். ‘என்னோட ராஜினாமா கடிதத்தை நீங்க மறுபரிசீலனை செய்யணும். சட்டமன்றத்தில் எனது பலத்தை நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்புத் தரணும். அந்த ராஜினாமா கடிதம் நானே கொடுக்கவில்லை. என்னை மிரட்டி கொடுக்கவைத்தார்கள்.’ என்று பன்னீர் சொல்லியிருக்கிறார். ‘ஒரு முதல்வராக உங்களுக்கு எல்லா அதிகாரமும் உங்கள் கையில் இருந்தபோது, அவங்க சொன்னதை நீங்க ஏன் கேட்டீங்க?’ என்று கவர்னர் கேட்டிருக்கிறார். ‘எங்க கட்சியில் அவங்களை மீறி முடிவெடுக்கும் அதிகாரமும் தைரியமும் யாருக்கும் இல்லை. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை என்பது இப்போதுதான் எனக்குப் புரிந்தது. நான் முடிவெடுத்ததும் என்னோடு பலரும் வரத் தயாராகிவிட்டார்கள்.

எம்.எல்.ஏ.,க்களை எல்லாம் விட்டால் என் பக்கம் வந்துவிடுவார்கள் என அவர்களை கடத்தி வைத்திருக்கிறார்கள்.’ என்றும் பன்னீர் சொன்னாராம். ‘நான் டிஸ்கஸ் பண்ணிட்டுச் சொல்றேன்!’ என்று மட்டும் கவர்னர் சொன்னதாகச் சொல்கிறார்கள். பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது, ‘நல்லது நடக்கும்!’ என கவர்னர் பன்னீரிடம் சொன்னதாகவும், அவரது ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள்.

அதனால்தான் கவர்னரை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும், செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘நல்லது நடக்கும்’ என்று ஆரம்பித்தார் என்றும் சொல்கிறார்கள். சசிகலா சந்திப்பில் என்ன பேசப்படுகிறது? அதன்பிறகு கவர்னர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதெல்லாம் இரவுக்குள் அடுத்தடுத்து தெரியவரும்!” என்பதுதான் ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து, “ஜோதிடர்கள் சொன்ன 9ஆம் தேதி இன்று முடிகிறது. கவர்னர் பதவியேற்க அழைப்புவிடுத்தால், பன்னீர்செல்வம் பதவியேற்றதைப்போல இரவோடு இரவாக அதாவது, 10ஆம் தேதி பிறப்பதற்குள் பதவியேற்க முடியுமா? எனவும் சசிகலா தரப்பில் பேசப்பட்டு வருகிறது. எதுவும் நடக்கலாம்!” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: