வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

தமிழகத்தில் கவர்னர் ஆட்சி! - கணக்குப் போடும் மத்திய அரசு!

மின்னம்பலம் :“அரசியல் சூழ்நிலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை அதிமுக-வில் யாரும் வாயே திறக்கமாட்டார்கள். இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். எல்லோரும் பேட்டி கொடுக்கிறார்கள். எல்லோரும் சிரிக்கிறார்கள். போயஸ் கார்டனுக்கு வெளியே சி.ஆர்.சரஸ்வதி பேட்டி கொடுக்கிறார். அதே நேரத்தில், கிரீன்வேஸ் சாலையில் மதுசூதனன் பேட்டி கொடுக்கிறார். பொதுவாக, அரசியல் கட்சித் தலைவர்கள் வசிக்கும் சாலைகளில் பெயர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும். அந்த வரிசையில் கிரீன்வேஸ் சாலையும் சேர்ந்துவிட்டது. பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. பன்னீரைப் பார்க்க தினமும் ஏராளமானவர்கள் அங்கே வருகிறார்கள். முக்கியமானவர்கள் சந்திக்க உடனடியாக அனுமதி கிடைக்கிறது. கட்சியின் பல்வேறுகட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என நிறைய வருவதால், எல்லோருடைய பெயர் மற்றும் போன் நம்பர்களை வாங்குவதற்கு பன்னீர் வீட்டுக்கு வெளியே இருவர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் தங்களது வருகையைப் பதிவுசெய்கிறார்கள் அதிமுக-வினர். அப்படி வந்துவிட்டுப்போன எல்லோருக்கும், ‘உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர்’ என்ற எஸ்.எம்.எஸ். போகிறதாம். அதற்காகத்தான் போன் நம்பரும் வாங்கியிருக்கிறார்கள். முதல்வர் மெசேஜ் அனுப்பியிருக்காரு... என தொண்டர்கள் படு குஷியாகிவிட்டனர்.


இந்தச் சூழ்நிலையில், மதுசூதனன் அவைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கியிருக்கிறார் சசிகலா. இதைப் பார்த்து கொந்தளித்துவிட்டாராம் மதுசூதனன். ‘யாரை யாரு நீக்குவது. சசிகலா யார் என்பதை ஊருக்கெல்லாம் சொல்லவேண்டிய நேரம் வந்துடுச்சு. இந்த ‘சின்னம்மா’ என்னவெல்லாம் செஞ்சாங்கன்னு நான் பேசத்தான் போறேன்...’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் மதுசூதனன். பன்னீரிடமும் இது தொடர்பாக டிஸ்கசன் நடந்து வருகிறது. விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இன்னும் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார் மதுசூதனன் என்கிறார்கள்.” என்று முடிந்த அந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது. “பன்னீரும், சசிகலாவும் கவர்னரை நேற்று இரவு தனித்தனியாக சந்தித்துவிட்டார்கள். இந்தச் சந்திப்பு தொடர்பாக விரிவான அறிக்கையை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பிவிட்டாராம். ஆனால் டெல்லியிலிருந்து கவர்னருக்கு கிரீன்சிக்னல் வராததால் அவர் காத்திருக்கிறார். இன்று காலையில் முதலில் டிஜிபி ராஜேந்திரனை அழைத்துப் பேசினார். அப்போது கடந்த 4 நாட்களாக நடந்துவரும் அரசியல் மாற்றங்கள் பற்றியும், எம்.எல்.ஏ.,க்களை எங்கே வைத்திருக்கிறார்கள்? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து விரிவான ரிப்போர்ட் கொடுக்கச்சொல்லி கேட்டிருக்கிறார் கவர்னர். அவர் போனபிறகு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் பேசினார். அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பிய அரை மணி நேரத்தில் அடுத்து ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கடந்த 5ஆம் தேதியிலிருந்தே சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சசிகலா பதவியேற்பு விழாவுக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. டிஜிபி ராஜேந்திரன் கவர்னரைச் சந்தித்துவிட்டு கிளம்பிய அரை மணி நேரத்துக்குள் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்றால், நிச்சயம் கவர்னர் ஏதோ டிஜிபி-யிடம் பேசியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். பதவியேற்பு விழா இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதை கவர்னர் சொன்னதால்தான், பல்கலைக்கழக மண்டபத்தில் போடப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இது, சசிகலா தரப்பை கவலையடைய வைத்திருக்கிறது. சசிகலா தரப்பிலிருந்து மன்னார்குடிக்காரர் ஒருவர்தான் டிஜிபி-யிடம் பேசுவாராம். அவர் டிஜிபி ராஜேந்திரனிடம் பேசியிருக்கிறார். ‘நிலைமை சரியில்லை’ என்று மட்டும் ராஜேந்திரன் சொன்னதாக மன்னார்குடி ஆட்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களை கடத்திவைத்திருக்கிறார்கள் என்ற சர்ச்சை பலமாக கிளம்பியிருக்கிறது. பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு வெளியே வரும் எம்.எல்.ஏ.,க்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்... யாருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள் என்ற குழப்பமும் இல்லாமல் இல்லை. ‘எம்.எல்.ஏ.,க்களை பத்தியெல்லாம் கவலை இல்லை. எல்லோரும் நம்ம பக்கம்தான் இருக்காங்க...’ என்று திவாகரன் சொன்னாராம். அதற்கு சசிகலா, ‘நீங்க ஹோட்டலுக்குள்ள வெச்சிருக்கும் வரைக்கும் அவங்க நம்ம பக்கம்தான் இருப்பாங்க. வெளியில போயிட்டா எப்படி இருப்பாங்கன்னு நம்புறது. அதனால அவங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்து பத்திரமா பாத்துக்கோங்க.’ என்று சொல்லியிருக்கிறார். அதற்குள் நீதிமன்றம் சில கிடுக்கிப்பிடிகளைப் போட, எம்.எல்.ஏ.,க்களை வைத்தே, ‘எங்களை யாரும் கடத்தவில்லை. நாங்களேதான் இங்கே ஓய்வெடுக்க வந்தோம்’ என சொல்லவைத்தார்கள். அதிலும் பல எம்.எல்.ஏ.,க்கள், ‘நாங்க வெளியிலயும் வரல. யாருகிட்டயும் பேசவும் இல்ல. அப்படி சின்னம்மாவுக்கு ஆதரவாகப் பேசினால், ஊரே காறித் துப்புது’ என்று சொல்லிவிட்டு ஹோட்டலுக்குள்ளேயே இருந்துகொண்டார்கள். அங்கிருந்து எம்.எல்.ஏ.,க்களை எங்கே மாற்றலாம் என லொக்கேசன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மன்னார்குடிக்காரர்கள்.” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.

‘‘அப்படியானால் பன்னீர் போடும் கணக்கு என்ன?” என்று கேட்டது வாட்ஸ் அப்.
அதற்கு பதிலை அடுத்த ஸ்டேட்டஸாக போட்டது ஃபேஸ்புக். ‘‘சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும்வரை பதவியேற்க அழைக்கக் கூடாது என்பதால்தான் கவர்னர் தாமதித்து வருகிறார். தீர்ப்பு எப்படியும் சசிகலாவுக்கு எதிராகத்தான் வரும். அதனால் நிச்சயம் எனக்கு வாய்ப்புக் கிடைக்கும். அவர் பதவியேற்க முடியாத சூழ்நிலை வந்தால் எல்லா எம்.எல்.ஏ.,க்களுக்கும் நம் பக்கம் வந்துவிடுவார்கள்...’ என்று, தன்னைச் சந்தித்து ஆதரவு தெரிப்பவர்களிடம் சொல்லிவருகிறாராம் பன்னீர். அவர் நினைப்பதெல்லாம், சசிகலா எந்தக் காரணத்துக்காகவும் முதல்வர் ஆகிவிடக் கூடாது. பி.ஜே.பி. சப்போர்ட் தனக்கு இருக்கிறது. அதனால் மீண்டும் முதல்வராகிவிடலாம் என்பதே பன்னீர் கணக்கு.

பன்னீர் இப்படி சொல்லிக்கொண்டிருக்க, எம்.எல்.ஏ.,க்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடமும் விசாரித்தேன். ‘தேர்தல் முடிஞ்சு எம்.எல்.ஏ. ஆகி 10 மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள இன்னொரு தேர்தலைச் சந்திக்குமளவுக்கு கையில் பணம் இல்லை. போன தேர்தலில் அம்மா இருந்தாங்க. செலவு செஞ்சாங்க. இப்போ பணம் கொடுப்பாங்களான்னு தெரியல. அப்படியே கொடுத்தாலும் ஜெயிக்க முடியுமான்னு தெரியல. மாசம் ஒரு லட்சம் சம்பளம் வந்துட்டு இருக்கு. அதுக்குமேல எவ்வளவோ இருக்கு. அதையெல்லாம் இழக்க விரும்பல. எது நடந்தாலும் இன்னும் மிச்சம் இருக்கும் நாலு வருசத்தை எம்.எல்.ஏ-வாக ஓட்டியாகணும். சட்டமன்றத்தில் பன்னீரை 90 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்தால்தான் திமுக ஆதரவோடு அவரால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதுக்கு எல்லோரும் தயாராக இருக்காங்களான்னு தெரியாமல் போயிடக் கூடாது. அப்படி தெரியாமல் அந்தப் பக்கம் போய்ட்டால் அது கட்சித் தாவல் தடைச் சட்டத்தால் பதவி போயிடும். அப்புறம் ஆட்சியும் கவிழ்ந்துவிடும். அதனால்தான் அமைதியாக இருக்கோம். காற்றுள்ள பக்கம்தானே தூத்திக்க முடியும்’ என்று அவர்கள் லாஜிக்காக பேசுகிறார்கள்.” என்று முடிந்த அந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.

அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், “சசிகலா முதல்வராகிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசும் உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில், தனக்குச் சாதகமான பன்னீரை முதல்வராக்குவதற்கு உரிய நேரத்தைக் கொடுப்பது. அப்படியும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அவரை ஆதரிக்காவிட்டால் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்று சட்டமன்றத்தை சஸ்பெண்ட் செய்து கவர்னர் ஆட்சியைக் கொண்டுவந்துவிடுவது. அதன்மூலம், கட்சியை தமிழகத்தில் வளப்படுத்த ஏற்பாடுகள் செய்துகொள்ளலாம் என்று பிரதமர் மோடிக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் உள்ள மின்னம்பல நண்பர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், சசிகலா உறவினர்களோ, ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு எதிராக வந்து சசிகலா சிறைக்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் வேறு ஒருவரை முதல்வர் ஆக்கியே தீருவது என்று, அனைத்துக்கும் தயாராக இருப்பதாக சசிகலாவுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கும் வட்டாரம் உறுதியாகத் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை: