வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

Ayyar :யார் இந்த பன்னீர்செல்வம்?! தமிழனுக்கு அங்கீகாரம் கொடுப்போம்?

"இவரே பரவாயில்லை...!..இவர்தான் வேண்டும்..!" என்று மக்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ள தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் பற்றிய சில தகவல்கள்.
"பேச்சிமுத்து" என்ற கிராமத்து மணம் வீசும் தமிழ்ப்பெயர்தான் அவரின் இயற்பெயர். இந்த பெயர் வீட்டில் மூத்தவர் ஒருவரின் பெயராக இருந்ததால், பன்னீர்செல்வமாக மாறினார். இளவயதில் எம்ஜிஆர் பக்தராக வலம்வந்த இவர் அவரைப்போலவே "ஓபிஎஸ்" என்னும் மூன்றெழுத்துடன் அரசியல் உலகில் வலம்வரத்தொடங்கினார்.
டீக்கடை நடத்தியவர் என்று கூறும் பலருக்கு அதற்கான காரணம் தெரியாது. பல ஏக்கர்களில் விவசாயம் பார்க்கும் குடும்பத்தில் பிறந்தவருக்கு டீக்கடை நடத்தி பிழைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதே இல்லை. தாய் மூகாம்பிகை பால்பண்ணை என்ற பெயரில் பெரிய பால்பண்ணையை ஆரம்பித்த இவர், அதில் உபரியாக கிடைக்கும் பாலை வீணாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தனது நண்பர் விஜயனுடன் இணைந்து "PV கேண்டீன"் என்ற பெயரில் டீக்கடையை தொடங்கினார்.

அரசியலில் நுழைந்தது முதல் அதிமுகவைத்தவிர எந்த கட்சியையும் திரும்பிப்பார்த்ததில்லை. ஆரம்பத்தில் சாதாரண நகர்மன்ற தலைவராக இருந்தார், எம்.எல்.ஏ ஆனதும் அமைச்சர் பதவி தந்து அவரை அங்கீகரித்தார் ஜெயலலிதா. தனது பணியில் அவர்கொண்ட கடமை உணர்வும், விசுவாசமும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் அளவிற்கு காரணமாக அமைந்தது. ஜெயலலிதாவிடம் நற்பெயர் வாங்குவது எளிதான செயல் அல்ல. யாரையும் எப்போதும் எளிதில் நம்பாத ஜெயலலிதா , பன்னீரை அங்கீகரிக்க காரணம் அவரின் விசுவாசம் மட்டுமே.
தனக்கு கிடைத்திருக்கும் பதவியையை நன்மை செய்வதற்கு ஒரு வாய்ப்பாக கருதும் மனிதர்கள் மிகமிக குறைவு. அந்த குறைவான மனிதர்களில் பன்னீர்செல்வம் ஒருவர். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் மற்ற முதல்வர்கள்தான், ஆனால் தனி ஆளாக போராடி தன்னால் இயன்றதை பெற்றுத்தந்தார். ஒரு கிராமமே உணர்ச்சிவசப்பட்டு அனுமதிக்க மறுத்தபோதும் புன்சிரிப்புடன் திரும்பினார்.மக்களை நேரம்கேட்டு தவம்கிடக்க வைத்த முதல்வர்கள் மத்தியில் எளிதில் அணுகக்கூடிய முதல்வர் பன்னீர்செல்வம்தான். டிராபிக் சிக்னலில் யாரையும் காக்க வைக்காமல் முதல்வரின் வாகனம் செல்வது சென்னைவாசிகளுக்கு கனவிலும் நடக்காத காரியம்.
சட்டமன்றத்தில் அனைத்து எதிர்கட்சியினரும் எழுந்து முதல்வருக்கு வணக்கம் தெரிவிப்பது மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போதுதான் நடக்கிறது. மொத்தத்தில் தனது செயலில் கடமை உணர்வும், பணிவும் ஒன்றாக கொண்ட தமிழகத்தின் மைந்தன் ஒருவரை முதல்வரை பெற்றிருப்பது நமக்கு அரிய வாய்ப்பு. இவரையும் ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைத்து காமராசரை பறிகொடுத்தது போல விட்டுவிட்டால்...நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக்கொள்வதைப்போல் ஆகிவிடும். மற்ற முதல்வர்களை எந்த கேள்வியும் கேட்க துப்பில்லாமல்,துணிச்சலில்லாமல் வீட்டுக்குள் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்த நம்மை புரட்சி செய்ய மறைமுகமாக அனுமதித்த அவரை.... வசைபாடுவதும்,ஏளனம் செய்வதும் நன்றிகெட்டத்தனம்தான்.இந்த பதிவு ஓபிஎஸ் அவர்களை ஏசு,புத்தர் என புகழ அல்ல. நல்லது செய்ய நினைக்கும் தமிழனுக்கு அங்கீகாரம் கொடுப்போம். இந்த தலைமுறை எதற்கும் ஏமாறாத தெளிவான தமிழின தலைமுறை என்பதை நிரூபிப்போம்.
-Ayyer

கருத்துகள் இல்லை: