சனி, 11 பிப்ரவரி, 2017

லொக்கேஷன் Golden Bay Resort.. சசிகலா செங்கோட்டையனை முதல்வராக்க முடிவு!


மொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
‘‘பன்னீருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டு போகிறது. இன்று காலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதன்பிறகு பன்னீர் வீட்டுக்குப் போய்விட்டார். பாண்டியராஜன் சார்ந்திருக்கும் நாடார் அமைப்புகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பாண்டியராஜனிடம் பேசியிருக்கிறார்கள். ‘பன்னீருக்கு நாம ஆதரவு தெரிவிக்கணும். அவரு முதல்வராகத் தொடர்ந்தால், அட்லீஸ்ட் அவரைப் பார்க்கமுடியும், பேச முடியும். சசிகலா முதல்வராக ஆகிட்டால், அவர் இன்னொரு ஜெயலலிதாவாக மாறிவிடுவார். பிறகு அவரைப் பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாது. அதனால் நீங்க பன்னீருக்கு ஆதரவு தெரிவிங்க...’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் பாண்டியராஜன் யோசித்திருக்கிறார். அடுத்தகட்ட முயற்சியாக ஆடிட்டர் குருமூர்த்தியை பேசவைத்தார்கள். பாரதிய ஜனதா கட்சியில் ஏற்கனவே இருந்த பாண்டியராஜனுக்கு ‘மத்தியில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என, குருமூர்த்தி பேசிய வார்த்தைகள் வேலை செய்தன.
பிறகுதான், ‘மக்கள் நினைப்பதைச் செய்வேன்’ என்று சொன்னார். பாண்டியராஜனைத் தொடர்ந்து, இன்னும் சில தென் மாவட்டத்து அமைச்சர்களும் பன்னீர் பக்கம் சாய இருக்கிறார்கள். இதற்கிடையில், நாமக்கல் எம்.பி.,யான பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகிய இருவரும் பன்னீர் வீட்டுக்குப் போனார்கள். தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள மேலும் சில எம்.பி.,க்களை அழைத்து வரும் பொறுப்பை கே.பி.முனுசாமி, பி.ஆர்.சுந்தரம் ஆகிய இருவரிடமும் பன்னீர் ஒப்படைத்திருக்கிறாராம். இருவரும் களமிறங்கிவிட்டனர். இன்று இரவுக்குள் இன்னும் சில எம்.பி.,க்கள் கிரீன்வேஸ் ரோடு பக்கம் வரலாம்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸும் தயாராக இருந்தது. லொக்கேஷன் கூவத்தூர் காட்டியது.
‘‘மீண்டும் ஒருமுறை சந்திப்பதற்காக கவர்னரிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டார் சசிகலா. இனியும் அமைதியாக இருந்தால் ஒட்டுமொத்த கூடாரமும் பன்னீர் பக்கம் போய்விடும் என சசிகலாவுக்கு பயம் உண்டாகிவிட்டது. அதனால், ‘சொத்துக் குவிப்பு வழக்கு என்பதுதானே பிரச்னையாக இருக்கிறது. அதனால், செங்கோட்டையன் முதல்வராக இருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார் சசிகலா. பிறகுதான் போயஸ் கார்டனில் இருந்து கூவத்தூரை நோக்கி கிளம்பினார். அங்கே கோல்டன் பே ஹோட்டலில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.,க்களின் மத்தியில் அவர் பேசினார். ‘இப்படியெல்லாம் அவர் செய்வார் என நான் கனவில்கூட நினைக்கவில்லை. நானும் அக்காவும் அவரை நம்பினோம். இது, அவர் எனக்குச் செய்த துரோகம் அல்ல. அக்காவுக்குச் செய்த துரோகம். கட்சிக்கு செய்த துரோகம். போறவங்களைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. நீங்க எல்லோரும் என் பக்கம் இருப்பீங்க என்ற நம்பிக்கை இருக்கிறது. எந்தக் காரணத்துக்காகவும் கட்சி உடைந்துவிடக் கூடாது. அதை அக்காவின் ஆன்மா தாங்கிக் கொள்ளாது. நான் முதல்வராவதில் எதுவும் சிக்கல் இருந்தால் நம் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் முதல்வராக இருக்கட்டும்.’ என்று, அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. அங்கிருந்த எம்.எல்.ஏ-க்கள், ‘நீங்கதான் முதல்வராக இருக்கணும் சின்னம்மா...’ என்று கத்தியிருக்கிறார்கள். ‘உங்கள் அன்புக்கு நன்றி. கவர்னரைப் பார்க்க அனுமதி கேட்டிருக்கேன். அவர் அனுமதித்தால் நாம் எல்லோரும் கவர்னரைப் பார்க்க கிளம்பலாம்!’ என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
பதிலை ரிப்ளைசில் போட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக். ‘‘கவர்னரோ, சசிகலா தரப்பை அழைப்பதில்லை. இடைப்பட்ட நேரத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பன்னீர் பெறட்டும். பிறகு முடிவு செய்துகொள்ளலாம் என்ற முடிவில் தீர்மானமாக இருக்கிறாராம். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: