புதன், 8 பிப்ரவரி, 2017

விகடன் :பதவி கிடைக்குமா... பறிபோகுமா... ஓ.பன்னீர்செல்வம் ஜாதகம் என்ன சொல்கிறது?

பன்னீர்செல்வம் ஜாதகம் - 1பன்னீர்செல்வம்தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்னை என ஒவ்வொன்றாக அரங்கேறினாலும், அவற்றையெல்லாம் முதல்வர் பன்னீர்செல்வம் நல்லவிதமாகவே சமாளித்து வந்தார். ஆனால், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே சசிகலா பதவியேற்றதும், அவரே முதல்வராகவும் திட்டமிட்டு இருந்தார். 
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தயாரானார். இதற்கிடையில், மெரினாவில் இருக்கும் 'ஜெயலலிதா சமாதி'யில் தனது மௌனத்தை ஓ.பன்னீர்செல்வம் கலைத்தார். 

தமிழக அரசியலில் புயல்காற்று வீசத்தொடங்கிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை மூன்றாவது முறையாக விட்டுக்கொடுத்து ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. அரசியல் பந்தயத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி என்ன ரிலே ரேஸா?...  இது என்ன வகையான ஜாதக அமைப்பு? ஏன் இப்படி நடக்கிறது? என்று பெருங்குளம் ராமகிருஷ்ணனிடம் கேட்டிருந்தோம். 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு, 66 வயது பூர்த்தியாகி, 67 வயது பிறந்துள்ளது. 
நாம் இந்தக் கட்டுரையில் பார்க்க இருப்பது, 4 கிரகநிலைகள். முதலாவதாக அவருடைய பிறந்த ஜாதகம் - அடுத்த ஜாதகங்கள் அவர் மூன்று முறை முதல்வராக பதவியேற்றபோது உள்ள கிரகநிலைகளின் அமைப்பு.
1951-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் பிறந்த பன்னீர்செல்வத்தின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம், லக்னம் சிம்மம். முதலில் ஜாதகத்தில் உள்ள சில சிறப்பம்சங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. சூரியன் தனது சுய சாரமான உத்திராட நட்சத்திரத்திலும், செவ்வாய் தனது நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்திலும் சாரம் பெற்றிருக்கின்றனர்.
அரசாங்கம் சார்ந்த விஷயங்களுக்கு சில முக்கியமான கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். அரசாங்க கிரகமான சூரியன், அதிகாரத்துக்குரிய கிரகம் செவ்வாய், மதியூக கிரகமான சனி ஆகிய கிரகங்கள் இவரின் ஜெனன கால ஜாதகத்தில் வலுவாக இருக்கின்றன. மேலும், குரு ராகு சாரத்திலும் ராகு குருவின் சாரத்திலும் இருப்பது நல்ல அம்சம். 
தற்போது ராகு திசையில் சுக்கிர புத்தி நடந்து வருகிறது. இப்போது  இருக்கும் கிரக அமைப்பில் ஜெனன கால ஜாதகத்தில் இருக்கும் கேதுவை ராகுவும், ராகுவை கேதுவும் அபிகாரம் செய்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு 'கிரஹன காலம்' போல் இருக்கிறது எனச் சொல்லலாம். வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி மாறும் ராகு - கேது பெயர்ச்சிக்குப் பிறகு இவரின் ஜாதகத்தில் மிகப் பெரிய நல்ல மாற்றம் இருக்கும்.
 
முதல் முறை பதவியேற்ற நாள்: 21 செப்டம்பர் 2001 - வெள்ளிக்கிழமை. அன்றைய நாள் விசாக நட்சத்திரம்  - துலாம் ராசி. விசாகம் குருவின் நட்சத்திரம். அன்றைய நாளில் இவருக்கு செவ்வாய் திசையில் புதன் புத்தி கேது அந்தரம் நடந்தது. 
பன்னீர்செல்வம் ஜாதகம் - 2
இரண்டாவது முறை பதவியேற்ற நாள்: 29 செப்டம்பர் 2014 - திங்கட்கிழமை. அன்றைய தினம் அனுஷ நட்சத்திரம் - விருச்சிக ராசி. அனுஷ நக்ஷத்ரத்தின் அதிபதி சனி. அன்றைய நாளில் இவருக்கு ராகு திசையில் புதன் புத்தி ராகு அந்தரம் நடைபெற்றது. 
பன்னீர்செல்வம் ஜாதகம் - 3
மூன்றாவது முறை பதவியேற்ற நாள்: 06 டிசம்பர் 2016 - திங்கள் இரவு செவ்வாய்க்கிழமை. அன்று அவிட்ட நட்சத்திரம் - கும்ப ராசி. அவிட்ட நட்சத்திரம் - செவ்வாயின் நட்சத்திரம். அன்றைய நாளில்  இவருக்கு ராகு திசையில் சுக்கிரன் புத்தி சுக்கிரன் அந்தரம் நடைபெற்றது. 
பன்னீர்செல்வம் ஜாதகம் - 4
பொதுவாக   இவரது ஜாதகத்தில் இருக்கும் வலுவான கிரகங்கள் சூரியன் - செவ்வாய் - சனி - ராகு.  ஜாதகப்படி மேற்சொன்ன கிரகங்கள் ஆளும் நாளில் இவருக்கு முக்கியமான மாற்றங்கள் நிகழ்கின்றன. தற்போதிருக்கும் சூழ்நிலையில், அவர் தனது பதவியை இழந்தாலும், மீண்டும் பதவி பெறுவதற்கான சூழல் என்பது ஜூலை மாதத்துக்குப் பிறகு நிகழும். அவருடைய ஜாதகப்படி சிம்ம லக்னத்தில் பிறந்த அவருக்கு லக்னாதிபதி சூரியன் மறைந்திருக்கிறார். எனவேதான் அவரால் பதவியை பெற்றும் அதை தக்க வைக்க இயலாத நிலை ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை: