சனி, 25 நவம்பர், 2017

இரண்டாகும் தமிழ் சினிமா! அன்புச்செழியன் 'விசுவாசம்' ? பின்னணியில் அமைச்சர்கள் தொழிலதிபர்கள் .

நக்கீரன் : அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது - 'விசுவாசம்'. இந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் பலரும் தங்களது விசுவாசத்தை காட்டுகின்றனர். கடந்த 10 வருடங்களில் அவரது திரைப்படத்தின் டீசர், போஸ்டர், படத்தின் பெயர் போன்றவை வெளியாகும்பொழுது எங்கும் 'அஜித்'தின் பெயர் ட்ரெண்டாகும். ஆனால் இப்பொழுது, பல ஆண்டுகள் கழித்து படம் சாராத ஒரு விஷயத்திற்காக அஜித்தின் பெயர் சில நாட்களாக பேசப்படுகிறது. தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணம் அன்புச்செழியன் தான் என்று அசோக் கடிதத்தில் எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அஜித்திற்கும் இதற்கு முன்னர் அன்புச்செழியன் பிரச்சனை தந்துள்ளார் என்று சொல்லப்பட்டுவருகிறது. 'நான் கடவுள்' பட விவகாரத்தில் பாலாவுக்கு ஆதரவாக அன்புச்செழியன் அஜித்தை மிரட்டினார் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறினார்.


திரைத்துறையில் பெரும்பாலானோர் இந்த தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்து, அன்புச்செழியன் ஒரு மோசமான கந்துவட்டிக்காரர் எனவும், காசு கொடுக்கும்போது அன்பாகப் பேசி கொடுத்துவிட்டு, பின்னர், அதற்கு வட்டிமேல் வட்டி போட்டு கடன் பெற்றவர்களை மனரீதியாக தொந்தரவு செய்வார், குடும்பத்தை அசிங்கப்படுத்தி மனஉளைச்சல் தருவார் என்றும் கூறிவந்தனர். இப்படி இருக்கையில் திடீர் என்று ஒரு கூட்டம் அன்புச்செழியனுக்கு ஆதரவாகக் கிளம்பியுள்ளது. யார் அந்த விசுவாசிகள், என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.


தேவயானியையும் அன்பு ஒருமுறை அதிக வட்டிக்கேட்டு மிரட்டினார் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், தேவயானி அதற்கு மறுப்பு தெரிவித்து, " காதலுடன் படத்திற்காகத்தான் அவரிடம் பணம் வாங்கினோம். அதை சரியான நேரத்தில் அவரிடம் திருப்பி கொடுத்துவிட்டோம். அவர் என்னைப் பொறுத்தவரை நல்ல மனிதர், இனிமையாக பேசுபவர்" என்று நெகிழ்ந்துள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இவரைப் பற்றி, " அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாகச் சித்தரிக்கப்படுவது வேதனை அழிக்கிறது. நான் நியாயத்தின் பக்கமே...." என்று டிவிட் செய்துள்ளார். பாகுபலியை மிஞ்சும் பட்ஜெட்டில் 'சங்கமித்ரா' படம் எடுக்க உள்ள சுந்தர்.சி,"8 வருடமாக அவரிடம் பணம் பெற்றுத்தான், நான் படம் தயாரித்து வருகிறேன். இதுவரை அன்பு என்னிடம் ஒரு வெத்துப் பேப்பரில் கூட கையெழுத்து வாங்கியதில்லை. 'பணம் தர தாமதமாகும் அண்ணா' என்றால் அவரே பெருந்தன்மையாக 'பணம் வந்தவுடன் தாருங்கள்' என்பார். என் ஆதரவு எப்போதும் அன்புச்செழியனிற்கே" என்றார்.


 தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தயாரித்தும், தயாரிப்பு சங்க சர்ச்சைகளில் சிக்கியும் வந்த கலைப்புலி.எஸ். தாணு," என் படங்களுக்கு அன்புதான் பணம் கொடுக்கிறார். இதுமட்டுமல்லாது நிறைய பட பிரச்னைகளுக்காக பேசி பிரச்சனையை தீர்த்து உள்ளார். அன்பு ஒதுங்கினால் தமிழ் சினிமா இல்லை" என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர், ஆஸ்கார் பரிந்துரை வரை சென்ற வெற்றிமாறனும் அன்புச்செழியனிற்கு ஆதரவாக பேசியுள்ளார்," ஒரு பைனான்சியராக அன்பு எனக்கு பெரிய ஆதரவு" என்றுள்ளார்.

இதேபோன்று விஜய் ஆண்டனியும் ஆதரவு தெரிவித்திருந்தார். அதற்கு பதிலாக கரு.பழனியப்பன், "விஜய் ஆண்டனி... உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்! விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! என்று டிவிட் செய்துள்ளார்.

சினிமாவில் கந்துவட்டி என்பது பல வருடங்களாக இருந்து வருகிறது. பிரபல தயாரிப்பாளரும், இயக்குனர் மணிரத்தினத்தின் அண்ணனுமான 'ஜி.வெங்கடேஷ்வரன்' தற்கொலை செய்துகொண்டபோது இதே அன்புச்செழியன் பெயர்தான் அப்போதைய சினிமா வட்டாரங்களில் முனுமுனுக்கப்பட்டது. சசிகுமார் உறவினர், தயாரிப்பாளர் அசோக்கின் தற்கொலையில் அது அவரின் கடிதம் மூலமாகவே வெளியிலும் வந்தது. இந்த வழக்குக்காக அன்புச்செழியன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, வெளிநாடு தப்பிக்க முடியாத வண்ணம் 'லுக் அவுட்' நோட்டிசும் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இதற்கென ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அவரை பலர் நல்ல விதமாக சித்தரிப்பதற்கு பின்னணி அரசியல் ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முக்கியமான அமைச்சர் ஒருவரின் ஆதரவு இவருக்கு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். 'எந்தத் தவறை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம், ஏதாவதொரு அமைச்சரின் ஆசியிருந்தால்' என்று இருக்கிறது இந்த ஆட்சி... சந்தோஷ் குமார் <

கருத்துகள் இல்லை: