வியாழன், 23 நவம்பர், 2017

பன்சாலியின் "பத்மாவதி" 1963ல் தமிழில் வந்த சித்தூர் ராணி பத்மினி தான்


BBC ;கே. முரளிதரன்:   ராணி பத்மினி குறித்த சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி ;திரைப்படம், வட இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தாலும், 1963ல் தமிழில் இதே பின்னணி; கதையோடு ;வெளிவந்த சித்தூர் ராணி பத்மினிgt;திரைப்படம்,<> சிறிய சலசலப்பைக்கூட ஏற்படுத்தவில்லை.
ராஜஸ்தானின் ராணி பத்மினியின் கதை இந்தியா முழுவதும் பிரபலமான ஒன்று என்றாலும் அதுவரை அந்தக் கதை தமிழில் வெளியாகியிருக்கவில்லை என்பதால், அந்தக் கதையை படமாக எடுக்க முடிவுசெய்தார் உமா பிக்சர்ஸின் ஆர்.எம். ராமநாதன். படத்தை சித்ரபு நாராயணமூர்த்தி இயக்கினார். கதை, திரைக்கதையை ஸ்ரீதரும் இளங்கோவனும் எழுதினர்.
சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எம்.என். நம்பியார், டி.எஸ். பாலையா, கே.ஏ. தங்கவேலு என அந்த காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகர்கள் பலரும் படத்தில் இருந்தனர். 1963 பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி சித்தூர் ராணி பத்மினி வெளியானது.

ராணி பத்மினி மீது தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி கொண்டிருந்த ஆசையே இந்தப் படத்தின் கதை. அந்த காலகட்டத்தில் அன்னிய ஆண்கள் முன்பாக பெண்கள் தோன்றுவது வழக்கமில்லையென்பதால், ராணி எப்போதும் பர்தாவுடனேயே இருப்பார். <>ஒரு கட்டத்தில் ராணியை தான் பார்க்காவிட்டால், ராஜ்ஜியத்தையே அழித்துவிடப் போவதாக அலாவுதீன் கில்ஜி மிரட்ட, ஒரு ஏற்பாட்டுக்கு வருகிறார் ராணா. அதாவது ராணியின் பிம்பம் தண்ணீரில் எதிரொலிக்கும்: அந்த பிம்பத்தை கண்ணாடியில் எதிரொலிக்கச் செய்து கில்ஜி பார்த்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் அலாவுதீனைக் கொல்வதற்கும் ராணா திட்டமிடுவார். ஆனால், மற்றொருவருக்கு முகத்தைக் காண்பிப்பதில் ராணிக்கு விருப்பமில்லை. பல்லாக்கில் அவரைத் தூக்கி செல்லும்போது, தீயில் விழுந்து உயிர் துறக்கிறார் ராணி பத்மினி.
இதில் ராணாவாக சிவாஜி கணேசனும் ராணி பத்மினியாக வைஜெயந்திமாலாவும் அலாவுதீன் கில்ஜியாக எம்.என். நம்பியாரும் நடித்திருந்தார்கள். வைஜெயந்திமாலா சிறப்பாக நடனம் ஆடுவார் என்பதால் படத்தில் பல நாட்டியக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தப் படம் வெற்றி பெறவில்லை. சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா போன்ற பெரிய நடிகர்கள் நடித்திருந்தும் ரசிகர்கள் இந்தப் படத்தை வரவேற்கவில்லை.
"இந்தப் படம் வந்ததே பலருக்கும் மறந்துபோய்விட்டது. யாருடைய நடிப்பும் மிகச் சிறப்பாக இருந்ததாகச் சொல்ல முடியாது. பாடல்களும் எடுபடவில்லை" என்று நினைவுகூர்கிறார் சென்னையைச் சேர்ந்த சினிமா வரலாற்றாசிரியரான ராண்டார் கை. re>அந்த காலகட்டத்தில் இந்தியாவில் வேறெங்கும் ராணி பத்மினி குறித்து திரைப்படங்கள் வந்ததாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.
இந்தப் படம் சர்ச்சையை அல்ல, சிறிய சலசலப்பைக்கூட தமிழ்நாட்டில் ஏற்படுத்தவில்லை.
"1960களில் இந்து - முஸ்லிம் பிரிவினை என்பதே தென்னிந்தியாவில் பெரிதாகக் கிடையாது. அதுவும் ஒரு சினிமாவை வைத்தெல்லாம் இம்மாதிரியான மத ரீதியான சர்ச்சைகள் அப்போது ஏற்பட்டதில்லை" என்கிறார் எழுத்தாளரும் சினிமா வரலாற்றாசிரியருமான தியடோர் பாஸ்கரன்.
எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்தில் "எல்லோருக்கும் இடம்கொடுக்கும் அல்லாவே, எமாந்திட்டா போட்டிருவாங்க குல்லாவே" என்று சந்திரபாபு பாடுவதைப் போல இடம்பெற்றிருக்கும் பாடலைச் சுட்டிக்காட்டும் தியடோர் பாஸ்கரன், இப்போது அப்படி ஒரு பாடல் எந்தப் படத்திலும் இடம்பெற முடியாது என்கிறார்.
அந்த காலகட்டத்தில் செட்டியார், பிராமணர்கள் போன்ற சமூகத்தினரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து விமர்சித்துவந்தனர். அது பெரிய பிரச்சனையாக இல்லை என்கிறார் அவர்.
ஆனால், அதை கதையுடன் தற்போது ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள பத்மாவதி திரைப்படத்தின் கதைக்கு குறிப்பிட்ட பிரிவினர் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால், அப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்துக்கு, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை: