வியாழன், 23 நவம்பர், 2017

உடுமலைபேட்டை ஆணவக் கொலை குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு ! பாராட்டப்பட வேண்டிய தீர்ப்பு


உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த சங்கர் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரின் காதல் மனைவி கௌசல்யா உயிருடன் பிணமாக வாழ்கிறார். சமீபத்திய பரபரப்புகளில் மூழ்கிப்போன தமிழகம், நேற்று வெளியான ஒரு தீர்ப்பைக் கவனிக்கவில்லை.
படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவன் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீது நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கவனிக்கப்பட வேண்டிய அந்தத் தீர்ப்பை எழுதியவர் நீதிபதி எஸ். வைத்தியநாதன் என்பவர்.
விடுவிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி எழுதிய வரிகளில் மிக முக்கியமானவை கீழே:
''மிக முக்கியமான மாறிச்செல்லும் கட்டத்தை நமது தேசம் கடந்துகொண்டிருக்கிறது. (அதுபோன்ற சூழலில்) மிக முக்கியமான பொது நலன் குறித்த இதுபோன்ற வழக்கில் நீதிமன்றம் மௌனமாக இருக்க முடியாது. தேசத்திற்கான சாபம் இந்த சாதி முறை. அதனை எத்தனை விரைவாக அழித்து முடிக்கிறோமோ அத்தனை நல்லது. தேசத்தின் முன்னுள்ள சவால்களைச் சந்திப்பதற்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய சூழலில், சாதி தேசத்தைப் பிளவுபடுத்துகிறது.
சாதிகளைக் கடந்து திருமணம் செய்வது சாதியை அழிக்கிறது என்பதால், சாதி கடந்த திருமணங்களின் தேசத்தின் நலனுக்கானவை. இருந்த போதும் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொந்தரவு தரும் செய்திகள் வருகின்றன. சாதியைக் கடந்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த இளைஞர்களும் இளம் பெண்களும் வன்முறையால் மிரட்டப்படுகிறார்கள் அல்லது வன்முறைக்கு ஆளாகிறார்கள். எமது கருத்தில் மேற்படி வன்முறைச் செயல்கள் முற்றிலும் சட்ட விரோதமானவை. அதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வயதுக்கு வந்த எந்தவொருவரும் தனது தேர்வுப்படி எந்த ஒருவரையும் மணக்கலாம்.”
நீதிபதி மேலும் முன்சென்று, ‘நாட்டில் வயதுக்கு வந்த ஒருவர் தன் சாதி, மதத்தைக் கடந்து திருமணம் செய்ய விரும்பினால் அவர்களை யாரும் துன்புறுத்தக் கூடாது. வன்முறைக்கு ஆளாக்கக் கூடாது. அதுபோன்ற செயல்களைக் குற்றச் செயல்கள் என்று கருதி துன்புறுத்துவோரை/ வன்முறையை ஏவுவோரை தண்டிக்க வேண்டும். இதனை நிர்வாகமும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்’ எனறும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்தத் தீர்ப்பு வெளிவந்த தினத்தந்தி பத்திரிகையில் மேற்படி பத்தியைப் பற்றி கூட எந்தக் குறிப்பும் இல்லை. வாழ்க தமிழ் பத்திரிகை தர்மம்.
நீதிபதிகள் காவிக் கமண்டலங்கள் ஏந்துவது அதிகரித்து வரும் நாளில். இந்துமத வெறியர்களின் ஏவல் படையாக நீதிமன்றங்கள் மாற்றப்படும் நாட்டில், இதுபோன்ற கருத்துகளை துணிந்து பதிவு செய்த நீதிபதியைப் பாராட்டுவோம்.
கருத்து: ப .குருசாமி AIIEA, சேலம்

கருத்துகள் இல்லை: