
தமிழ் சினிமாவே ஃபைனான்ஸில்தான் இயங்குகிறது. எந்த தயாரிப்பாளரும் சொந்தக் காசை போட்டு படம் எடுப்பதில்லை. கடன்தான். அதுவும் கந்துவட்டி கடன். இந்த ஃபைனான்ஸில் முக்கிய பங்கு மதுரையை சேர்ந்த அன்புசெழியனுக்கு தான். சினிமாவில் அவரை அன்பு என்று அழைப்பார்கள். பெயர் தான் அன்பு. கடன் வாங்கியவர்களிடம் கடனை வசூலிக்க இவர் செய்யும் செயல்கள் கேட்போரையே கண்ணீர் விட வைக்கும்.
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவர் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச் சம்பவத்திலிருந்து பெயர் எடுப்பார்கள். புகழ்பெறத் தொடங்குவார்கள். இவர் தற்கொலைச் சம்பவத்தில் புகழ்பெற்ற தாதா. ''நண்பர்கள்னா உயிரக் கொடுப்பேன். எதிரின்னா தலையை எடுப்பேன்'' என்பதுதான் இவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம். திரைப்படத் துறையில் இவரிடம் ஃபைனான்ஸ் வாங்காதவர்களுமில்லை, பாதிக்கப்படாதவர்களும் இல்லை.

அடுத்ததுதான் தயாரிப்பாளர் ஜிவி மரணம். இந்தச் சம்பவத்துக்கு பிறகுதான் ஒட்டுமொத்த சினிமா துறையும் அன்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது எனலாம். விஜய்காந்தை வைத்து சொக்கத்தங்கம் என்ற படம் தயாரித்து சிக்கலில் மாட்டினார் ஜிவி. படத்தின் வினியோக விஷயத்தில் அன்பு தலையிட்டு மிரட்ட தயாரிப்பாளர் போலீஸுக்கு போனார். இங்கே காவல்துறைக்கு புகார் போன நேரத்தில் தயாரிப்பாளரின் குடும்பம் கொடைக்கானலில் டூருக்கு சென்றிருந்தார்கள். அங்கே சென்ற அன்பு அந்த குடும்பத்தை அவரது கஸ்டடிக்குள் கொண்டு வந்தார். 'ரெண்டு நாள்ல பணத்தை செட்டில் பண்ணு. இல்லைன்னா உன் பொண்டாட்டியை 'சுத்தமாக்கி' உட்கார வெச்சு மானத்தை வாங்கிடுவேன்' என்று மிரட்ட அந்த தயாரிப்பாளர் பணத்தை புரட்ட முடியாமல் தூக்கில் தொங்கினார். அன்புவின் நோக்கம் அவரது சொத்துகளை எல்லாம் அபகரிப்பதாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. உயிரைக் கொடுத்து சொத்துக்களைக் காப்பாற்றிக் கொண்டார் ஜிவி.
பணம் வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் கடைசியாக அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்படும். அவர்கள் வாங்கிய பணத்துக்கு வட்டிக்கு வட்டி என்று பெரிய தொகையை போட்டு அவர்கள் கொடுக்க வேண்டியதாக ஒரு கணக்கும் கொடுப்பார்கள். அவர்களால் அந்தப் பணத்த கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் அவங்கள தூக்கி வந்து இவருக்கு சொந்தமான பங்களாவில் இருக்கும் ரூமில் நிர்வாணமாக்கி உட்கார வைத்துவிடுவார்கள். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி ஒரே ட்ரீட்மெண்ட்தான். அவங்கள அப்படி 'சுத்தமாக்கி' உட்கார வைக்கற வரைக்கும் குண்டர்கள் செய்து முடிப்பார்கள். கடைசியாக அன்பு மட்டும் அந்த ரூமில் எதிரில் சேரில் அமர்ந்து அவர்களை அசிங்கம் அசிங்கமாக அரைமணிநேரம் திட்டுவார். அவ்வளவுதான். அவமானம் தாங்க முடியாமல் சொத்தையெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்களாம்.
அன்புச் செழியனின் அடாவடிக்கு ஒரு நல்ல உதாரணம், புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் அஜீத்தையே இவர் மிரட்டியுள்ளார் என்கிறார்கள். பாலாவின் நான் கடவுள் படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப் பட்ட அஜீத், லீ மெரிடீயன் ஹோட்டலில் இந்த அன்புச் செழியனால் மிரட்டப்பட்ட பிறகே அந்தப் படத்தில் இருந்து விலகினார் என்கிறார்கள்.
அன்புவை பொறுத்தவரை பணத்தின் மீதுதான் குறியாக இருப்பார். எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும் தொட மாட்டார். ஆனால் உடன் இருக்கும் மணிகண்டன் உள்ளிட்டோர் இந்த விஷயத்தில் படுமோசம்.
உள்ளத்தை அள்ளித்தந்த நடிகையும் தேவையான நடிகையும் சொந்தப்படம் எடுத்து அன்புவிடம் சிக்கினார்கள். மேலே சொன்ன அதே ட்ரீட்மெண்ட் தான் நடந்தது. நடிகையின் உறவினர்கள் பின்னர் பணத்தைக் கொடுத்து மீட்டனர்.
அதிமுக ஆட்சியில் இருந்தால் கார்டன் பெயரை சொல்லி தப்பிக்கும் அன்பு திமுக ஆட்சியில் மதுரை உடன்பிறப்பை சொல்லி தப்பிப்பார். அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது கல்வித்தந்தை ஆகிவிட வேண்டும் என்று துடித்தார் அன்பு. மதுரை அருகே காரியாப்பட்டியில் 180 ஏக்கர் நிலத்தை அதற்காகவே வாங்கியிருக்கிறார்.
இப்போது சசிக்குமார் உறவினர் மரணத்தில் சிக்கியுள்ளார். இதிலாவது அன்பு மீது சரியான நடவடிக்கை பாயுமா? இல்லை இதற்கு முன்னர் போல அரசியல் செல்வாக்கை வைத்து தப்பித்து விடுவாரா? என்று கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமாத்துறையினர். அன்பு மீது எடுக்கப்படும் நடவடிக்கை தான் தமிழ் சினிமாவையே காப்பாற்றும்!
- ஆர்.ஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக