செவ்வாய், 21 நவம்பர், 2017

விவேக் : அரசியல் பொறுப்பை ஏற்பேன்!

அரசியல் பொறுப்பை ஏற்பேன்!மின்னம்பலம் : சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் நடைபெற்ற ரெய்டில் அதிகம் பாதிக்கப்பட்டவர் சசிகலாவின் சகோதரர் ஜெயராமன் – இளவரசி தம்பதியினரின் மகன் விவேக்தான். ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குநராக இவர் செயல்பட்டு வருகிறார். . இவரது இல்லம், ஜாஸ் சினிமா நிறுவனம், ஜெயா டிவி அலுவலகம் போன்ற இடங்களிலும் சிபிஐ ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் குழந்தையாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.
இந்நிலையில், இந்து ஆங்கில நாளிதழுக்கு விவேக் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், "எனது தாயுடன் போயஸ் இல்லத்துக்கு வந்த என்னை ஜெயலலிதா தான் உள்ளே அழைத்துச் சென்றார். எனது தாயார் இளவரசி, சின்ன அத்தை சசிகலா, பெரிய அத்தை ஜெயலலிதா ஆகிய மூன்று வலுவான பெண்களால் வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதா என்னை பாய் என்று கூப்பிடவே விரும்புவார்.

தாய், தந்தை, எஜமான்
எனது தாயார் இளவரசி அப்பாவி, சராசரி குடும்பத்தலைவி. எனது கண்களுக்கு அவர் தாயாக மட்டுமே தெரிந்தார். அதேவேளையில், ஜெயலலிதா எனக்குத் தந்தையாக தோன்றினார். எனது குறும்புகளை சகித்துக்கொண்டு பாதுகாப்பாக இருந்தார். சசிகலா என்னை அதட்டினாலும், ஜெயலலிதா அதட்ட வேண்டாம் என்று சசிகலாவிடம் கூறுவார். எனினும், எனது அழுகை மட்டும் அவருக்கு பிடிக்காத ஒன்று. என் மீது மிகவும் பாசமாக இருப்பார். சசிகலாவை பொறுத்தவரை எஜமானராக தெரிந்தார்.
அவர் ஒழுக்க நெறியாளர், எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார். என் மீது அதிக பாசம் காட்டியவரும் அவரே, நான் ஏதாவது தவறு செய்தால் என்னை கண்டிப்பவரும் அவரே எனத் தனது குழந்தை பருவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜாஸ் சினிமாஸ் பொறுப்புகளை ஏற்கும்படி சசிகலா என்னிடம் கூறினார். பின்னர் ஜெயா டிவி பொறுப்புகளையும் கவனிக்கும் பணியும் எனக்கு வழங்கப்பட்டது. தொழில் சம்பந்தமான அனைத்து ஆலோசனைகளை அவர் எனக்கு வழங்கினார். எனது கருத்துடன் அவர் ஒத்துப்போக மாட்டார். எனது ஊழியர்கள் என்னைப் பற்றி பாராட்டிக்கூறினாலும் அவரிடமிருந்து பாராட்டு கிடைக்காது எனத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் இல்லை
இதேபோல், ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் எவ்வித சட்ட விரோத பணப் பரிமாற்றங்களும் நிகழவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சத்தியம் குழுமம் தங்களது சொத்துக்களை பிவிஆர் நிறுவனத்திடம் விற்க விரும்பியது. அவர்கள் எங்களிடம் விற்பதில் மகிழ்ச்சியாகவே இருந்தனர்.
இதற்கு முன்பாக நான் வருமானவரி ரெய்டை எதிர்கொண்டதில்லை. என்ன மாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னிடம் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். எனது மனைவி நகை தொடர்பான விளக்கங்கள் மட்டும் பாக்கியுள்ளன. அவற்றையும் விரைவில் சமர்ப்பிப்பேன் என விளக்கமளித்தார்.
அரசியல் பொறுப்பை ஏற்பேன்
இந்த ரெய்டுகளுக்கு பின்னால் அரசியல் உள்ளதா என்ற கேள்விக்கு, தான் அவ்வாறு எண்ணவில்லை எனப் பதிலளித்துள்ளார். “ இந்த ரெய்டு என்பது தொழில் ரீதியிலானது. தங்கள் பணியை அவர்கள் செய்கின்றனர். இந்த வழக்கு எப்படிச் செல்கிறது என்பதைப் பொறுத்து தான் இதன் பின் அரசியல் உள்ளதா இல்லையா என்று கூறமுடியும் என விளக்கமளித்தார்.
அரசியலில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு, “ ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டிவியை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அனைத்துமே மாறிவிட்டது. முன்பு மகிழ்ச்சியாக இருந்தேன். இப்போது இல்லை. யார் விசுவாசமானவர்கள் என்பதை அடையாளம் காண முடியவில்லை. நாளையே எனக்கு புதிய பொறுப்பு(அரசியல் பதவி) வழங்கப்பட்டால், அந்தப் பணியை நான் செய்வேன். அது எனது கடமை”.என்று பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: