வெள்ளி, 24 நவம்பர், 2017

அன்புசெழியன் ஒரு தமிழக சுவிஸ் பேங்க் ,,, சீரழிந்தவர்கள் பட்டியல்....

விகடன்: ம.கா.செந்தில்குமார் அன்புவிடம் எந்தெந்த சினிமா தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி திருப்பி செலுத்தமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது குறித்து திரைத்துறையினர் சிலரிடம் விசாரித்தோம்.
ஞானவேல்ராஜா  ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் இருந்து அவர் தொடங்கினார். “மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஞானவேல்ராஜா பேசியதில் இருந்து அவர் அன்புவின் மீது எந்தளவுக்குகோபத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ‘அவர்ட்ட போகாதீங்க. மீண்டு வெளியே வரமுடியாது. போட்டு அமுக்கிடுவார்’னு பலர் தடுத்தாங்க. அப்ப அதோட விபரீதம் எனக்குத் தெரியலை. உள்ளப்போய் அந்த ஃபைனான்ஸ் ப்ராசஸ் என்னனு அனுபவிச்சப்பிறகுதான் நிலைமை எனக்குப் புரிஞ்சுது. இன்னைக்கு புதுசா வர்றவங்களுக்கு நாங்க சொன்னாலும் அவங்களும் அதை கேட்கமாட்டாங்க’ என்று பேசியவர் கூடவே, ‘தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஃபண்டிங் பண்றதுக்கு 50 ஃபைனான்ஷியர்கள் இருக்காங்க. அந்த 50 பேர்களில் எத்தனை ஃபைனான்ஷியர்களோட பெயர் இந்தளவுக்கு சர்ச்சைக்குள்ளாகியிருக்கு? அன்புச்செழியன் என்கிற இவர் ஒருத்தரைப்பற்றித்தானே இத்தனை சர்ச்சை செய்திகள் வந்திருக்கு?’ என்றார். இவை அவரின் மனக்காயங்களில் இருந்து வரும் வார்த்தைகள். இன்று மதுரை அன்புவிடம் கடன் பட்டுள்ளவர்களில் ஞானவேல்ராஜா முக்கியமானவர்.

ஞானவேலுக்கு கடன் இருப்பது உண்மை. ஆனால் எவ்வளவு என்று தெரியவில்லை. சமீபத்தில் சில இணையதளங்களில் ‘ஞானவேல்ராஜாவுக்கு 100 கோடி கடன் உள்ளன’ என்றொரு செய்தி வந்தது. ‘அந்தச் செய்தி வரக் காரணமே அன்புதான். இனி சினிமா தயாரிப்பில் நான் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்தச் செய்தியை பரப்புகிறார்கள்’ என்கிறது ஞானவேல் தரப்பு. இவர் தற்போது சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தயாரித்துள்ளார். இது வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. கடனை மையமாகவைத்து அப்போது இந்தப் படத்துக்கு பிரச்னைகள் எழலாம் என்கிறார்கள்.
லிங்குசாமி

அடுத்து லிங்குசாமியும் அவரின் சகோதருமான போஸ். ‘தீபாவளி’, ‘பட்டாளம்’ என்று தொடங்கிய இவர்களின் தயாரிப்பில் மீடியம் பட்ஜெட் படங்களை பண்ணியவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ‘அஞ்சான்’, ‘உத்தமவில்லன்’ ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களின் தோல்விதான் இவர்களை வெகுவாக பாதித்தது. இதனால் அடுத்து வந்த ‘ரஜினி முருகன்’ படம் பல பிரச்னைகளை கடந்து ரிலீஸ் ஆனதும், ‘இடம் பொருள் ஏவல்’ படம் ரிலீஸ் ஆகாமல் தேங்கி நிற்பதற்கும் இவர்கள் அன்புவிடம் பட்ட கடன்தான் காரணம்.
விஷால்

‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற பெயரில் தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து, தான் தயாரித்த முதல்படமான ‘பாண்டியநாடு’ பட விழாவில் அன்புவை பாராட்டி இவரே பேசியிருந்தார். ஆனால் போகப்போக ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’, ‘ஆம்பள’ ‘கதகளி’ என்று இவர் தயாரித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைய இவர் அன்புவிடம் கடன்பெறுவதும் வட்டி கட்டுவதும் வாடிக்கையானது. வட்டியே பல கோடிகளை தாண்டி போய்க்கொண்டு இருந்த சமயத்தில் ஒருவரால் எவ்வளவுதான் வட்டி கட்ட முடியும்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் சர்ச்சையானது. அந்த சமயத்தில் கடன் பாக்கிக்காக அன்பு கேட்டது விஷாலின் கால்ஷீட்டை. அப்படித்தான் அன்புவின் கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரித்த ‘மருது’ படத்தில் விஷால் நடித்தார். கடனுக்காக கடமைக்கு நடிப்போம் என்றில்லாமல் அதையும் சிறப்பாகவே செய்துகொடுத்தார் விஷால். இதற்கிடையில்தான் விஷால் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு வருகிறார். ஒருவகையில் இவர் சங்கப் பதவிகளுக்கு வந்ததும் அன்பு போன்றோர் கொடுத்த அழுத்தமும் காரணம் என்று சொல்லலாம்.
கௌதம்வாசுதேவ் மேனன்

இவர் அன்புவிடம் கடன் வாங்கித்தான் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்படித்தான் இவர் சில ஆண்டுகளுக்கு முன் ‘துருவநட்சத்திரம்’ படத் தயாரிப்புக்காக அன்புவிடம் கடன் பெறுகிறார். ஆனால் அந்தத் தயாரிப்பு பணி தள்ளிக்கொண்டே போகிறது. வட்டியும் ஏறுகிறது. ஒருகட்டத்தில் அந்தப்படத்தில் இருந்து அட்வான்ஸை திருப்பித் தந்துவிட்டு சூர்யா விலகினார். அந்த சமயத்தில்தான் கௌதம்மேனன் டீமைச் சேர்ந்தவர்களுக்கு அன்புவின் அலைபேசி அழைப்புகள் தொடர்ந்தன. ஏற்கெனவே தன் பார்ட்னர்களுடன் பிரச்னையில் இருந்த கௌதமுக்கு இந்த ‘அன்பு‘வும் சேர்ந்துகொள்ள அவரும் அழுத்தத்துககு ஆளானார்.
தனுஷ்
இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா எப்படி ஃபைனான்ஷியர்களால் பிரச்னைக்கு ஆளானாரோ அதேபோல அவரின் மகனும் நடிகருமான தனுஷும் பிரச்னையை சந்தித்தார். அன்புவிடம் ஃபைனான்ஸ் பெற்றுதான் தனுஷ் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். இவர் தயாரித்த ஓரிரு படங்கள் பெரிய வெற்றியைப் பெற தவறின. அதனால் இவருக்கு சிக்கல். அப்போது தரவேண்டிய பணத்துக்காக தனுஷ் அன்புவின் தயாரிப்பில் ‘தங்கமகன்’ படத்தில் நடித்தார். பிறகு கடனில் இருந்து மீண்ட தனுஷ், அதன்பிறகு தான் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் அன்புவிடம் ஃபைனான்ஸ் பெறுவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சி.வி.குமார்
சி.வி.குமார் தயாரித்த ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற பல படங்கள் விமர்சன ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் வெற்றிபெற்றவை. ஆனால் ‘பீட்சா-2’, ‘சரபம்’, ‘எனக்குள் ஒருவன்’ போன்றவை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறத்தவறின. அதன்பிறகு வந்த ‘இறைவி’ படமும் இவரை நஷ்டப்படுத்தியது. ஆரம்பத்தில் அன்புவுடன் இருந்த நல்லுறவு அடுத்தடுத்த சில தோல்விகளால் இவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தியது. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அன்பு மீது ஏற்கெனவே புகார் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சசிகுமார்

இவரின் ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட ஆரம்பப் படங்கள் வணிக ரீதியில் வென்றன. ஆனால் கடைசியில் இவர் தயாரித்த ‘தாரை தப்பட்டை’, ‘பலே வெள்ளையத்தேவா’ போன்ற படங்கள் கடும் தோல்வியை சந்தித்தன. அதனால் இவர் அன்புவுக்கு 30 கோடியளவில் கடன் பாக்கி வைத்திருந்ததாகத் தெரிகிறது. அதைத்தொடர்ந்து ‘கொடிவீரன்’ படத்துக்கு அன்பு தரப்பினர் போட்ட தடையும் அலைபேசி உரையாடல்களும்தான் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணம்.
இவர்களைத்தவிர இன்னும் ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் அன்புவிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தமுடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக இனி வெளியே வந்து பேசுவார்கள். அப்போது ஒவ்வொருவரும் அன்பு உடனான ஒவ்வொருவிதமான அனுபவங்களை சொல்வார்கள்” என்கிற அந்தத் தயாரிப்பாளர் மேலும் சில அதிர்ச்சித் தகவல்களை சொல்கிறார்.
“விஷால், ஞானவேல்ராஜா, கௌதம்மேனன் போன்ற தயாரிப்பாளர்கள் ஒருகட்டத்துக்குமேல் அவர்களால் பணம் தர முடியாமல் தவித்தனர். அன்புவும் வெவ்வேறு விதங்களில் அவர்களிடம் கடனை திரும்பப்பெற முயன்றார். தயாரிக்கும் சினிமாக்கள் வெற்றிபெற்று வசூல் கைக்கு வந்தால்தானே அவர்களாலும் பணத்தை திருப்பி செலுத்த முடியும். ஆனால் அப்படி எந்த நல்லதும் நடக்காததால் பணம் கொடுப்பதும் நின்றுபோனது.
அன்பு மிரட்டிப் பார்த்தார். ஆனால் யாரும் மசிவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் சினிமா சங்கங்களில் இவர்களின் கை ஓங்க, அன்புவும் என்னசெய்வது என்று தெரியாமல் தவித்தார். தான் யாரென்று நிறுபிக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது. அதற்கான சந்தர்ப்பமாகத்தான் ‘கொடிவீரன்’ படத்தைப் பயன்படுத்திக்கொண்டார் அன்பு. ஆனால் அது அசோக்குமாரின் தற்கொலையில் போய் முடியும் என்று அவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார். இப்போது தலைக்குமேல் வெள்ளம்போக அவரும் தலைமறைவாகிவிட்டார். தற்போது வழக்கில் இருந்துவிடுபட அரசியல்வாதிகளின் உதவிகளை அவர் நாடி வருகிறார்” என்கிற அந்தத் தயாரிப்பாளர் மேலும் தொடர்கிறார்.

“இவை எல்லாவற்றையும்விட கடனை வசூலிக்க கொலை மிரட்டல்வரைக்கூட போயிருக்கிறது என்பதை சொன்னால் நம் தமிழ் சினிமா எந்தச் சூழலில் உள்ளது என்பதை நடுநிலையாளர்கள் புரிந்துகொள்வார்கள். அந்த பிரபல இளம் தயாரிப்பாளர் கடனை திருப்பி செலுத்த மறுக்க, ‘ஆள் அனுப்பி உன் குடும்பத்தில உள்ளவர்களை தூக்குவேன்’ என்று அன்பு தரப்பு மிரட்டியதோடு நிற்காமல் அவரை தூக்கவும் ஆள் செட் பண்ணியிருந்ததாம். இந்த விவரத்தை தெரிந்துகொண்ட அந்த இளம் தயாரிப்பாளரும் எதிர் தாக்குதலுக்கு ஆள் செட் பண்ணி காத்திருந்திருக்கிறார்.
இன்னொரு இளம் தயாரிப்பாளரையும் அன்பு தன் ஆள் பலத்தால் மிரட்ட, ‘எனக்கு எப்ப வேணும்னாலும் எதுவும் நடக்கலாம். அப்படி எதுவும் நடந்தால் அதற்கு மதுரை அன்புதான் காரணம். அப்படி நடந்தால் பதிலுக்கு அவனை தூக்கணும்’ என்று தன்னிடம் இருந்த ஒரு சொத்தையே தான் செட் பண்ணியுள்ள அடியாளுக்கு எழுதிக்கொடுத்திருப்பதாகவும் தகவல் வருகிறது. ஆனால் இது எதுவும் சினிமா என்கிற கலைக்கு நல்லதல்ல என்பது மட்டும் புரிகிறது.இதை அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது என்பதே உண்மை. ஏனெனில் சம்பந்தப்பட்ட இரு இளம் தயாரிப்பாளர்களும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதான் தனிப்பட்ட ஒருவரைக் கண்டு அனைத்துத் தயாரிப்பாளர்களையும் பயம் கொள்ளவைக்கிறது.

ஏற்கெனவே தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஷ்வரன் தற்கொலையின்போதும் அன்பு கைது செய்யப்பட்டு சில நாள்களிலேயே வெளியே வந்துவிட்டார். சசிக்குமார் போன்று அமைதியான இயல்புகொண்ட இயக்குநர் மணிரத்னமும் அன்று அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார். இன்றும் அப்படி நடந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரத்தான் செய்யும். இதற்கு தீர்க்கமான உறுதியான நடவடிக்கைகள் தேவை.
சினிமா என்பது கலையும், காசும் சேர்ந்த ஒரு பிசினஸ். இங்கு அன்பு போன்ற காசை கையாளும் கடினமான நபர்களும் கலை மட்டுமே தெரிந்த இலகுவான நபர்களும் இருப்பார்கள். தவிர யாரும் எங்கும் ஓடிப்போகப்போவது இல்லை. இத்தனை ஆண்டுகளாக சரியாக வட்டி கட்டியிருக்கிறோம். மேலும் வட்டி கட்டவில்லை, அசலைத் தரவில்லை என்றால் பேசி தீர்க்கலாமே தவிர சினிமாவையே ரிலீஸ் பண்ணாமல் தடுப்பது எந்தவகையில நியாயம்? மேலும் ஒரு படத்தை நம்பி கடன் தந்து இருக்கிறீர்கள். அந்தப் படம் விற்றால்தானே உங்களுக்கு கடனை அடைக்க முடியும். அந்த படத்துக்கே தடை போட்டால் எப்படி உங்கள் கடனை அடைப்பது? அடுத்து கலைஞர்களின் தன்மானத்தை சுரண்டி பார்க்கும், ‘தாக்கிடுவேன், வீட்டுப் பெண்களைத் தூக்கிடுவேன்’ போன்ற வார்த்தை பிரயோகங்கள் எந்த வகையில் சரியாக இருக்கும்” என்று ஆதங்கத்தோடு முடித்தார் அந்தத் தயாரிப்பாளர்.
இந்தக் கேள்விகள் அனைத்தும் நியாயம்தான். ஆனால் அவற்றுக்கான பதில்களும் தீர்வுகளும் எப்படி, எப்போது, யார்யாரிடம் இருந்து கிடைக்கப்போகின்றன என்பதுதான் நம் எதிர்க்கேள்வி.
vikatan

கருத்துகள் இல்லை: