ஞாயிறு, 19 நவம்பர், 2017

முழுமையாக பயன்படுத்தி கொண்டு சசிகலாவை நிராதரவாக விட்டுவிட்டார்’:ஜெயலலிதா மீது திவாகரன் கோபம்

ஒரு பெரிய தலைவரிடம் இருந்துவிட்டு அவர்கள் சொல்வதையெல்லாம் செய்துவிட்டு அவர்களுக்குப் பிறகு பாதுகாப்பில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால் என்ன ஆகும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். எல்லா பெண்களுக்கும் தற்போது சசிகலா ஒரு சரியான உதாரணம். சசிகலாவைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
tamilthehindu : அதிமுக அம்மா அணியின் திருவாரூர் மாவட்ட கட்சி அலுவலகத்தை மன்னார்குடியில் நேற்று திறந்து வைத்துப் பேசிய திவாகரன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டு எந்தவித பாதுகாப்பையும் அவருக்கு வழங்காமல் நிராதரவாக விட்டுவிட்டு சென்றுவிட்டார் என சசிகலாவின் தம்பி திவாகரன் வேதனை தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட அதிமுக அம்மா அணி மாவட்ட அலுவலகத் திறப்பு விழா மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. அதிமுக அம்மா அணி மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை வகித்தார். கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்த சசிகலாவின் தம்பி திவாகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
1996-ல் இருந்து சசிகலா விசாரணை வளையத்தில்தான் இருக்கிறார். ஒருநாள் கூட சும்மாவே இல்லை. ஜெயலலிதா இருந்தபோதும் விசாரணை வளையத்தில்தான் இருந்தார். ஜெயலலிதா சசிகலாவை முழுமையாகப் பயன்படுத்தினார். ஆனால், எந்தவித பாதுகாப்பையும் கொடுக்காமல் சென்றுவிட்டார்.

சசிகலா ஒரு பாடம்

உங்கள் வீட்டில் ஒருவர் ஒரு பெரிய தலைவரிடம் இருந்துவிட்டு அவர்கள் சொல்வதையெல்லாம் செய்துவிட்டு அவர்களுக்குப் பிறகு பாதுகாப்பில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால் என்ன ஆகும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். எல்லா பெண்களுக்கும் தற்போது சசிகலா ஒரு சரியான உதாரணம். சசிகலாவைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜெயலலிதாவே சொன்னார்

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக படம் எடுத்துள்ளனர். அது தொடர்பான விவரங்களை ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கலாம். ஜெயலலிதா இறக்கும் முன்பே சிகிச்சையில் சந்தேகம் உள்ளதாக திமுகவில் குற்றம் சொல்லத் தொடங்கிவிட்டனர். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அப்போதே சொன்னேன். மேலும், ஜெயலலிதாவே சொல்லியுள்ளார். ‘சசி, வீடியோ கிராப்செய்து வைத்துக்கொள், நான் போய்விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நம்மிடத்திலேயே துரோகக் கும்பல் உள்ளது’ என்று கூறியுள்ளார். அவர் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தாமல் போனதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் எங்களை தாக்கினால்தான் காலந்தள்ள முடியும் என்பதால் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 9-ம் தேதி காலை 6 மணிக்கு எங்கள் வீட்டில் ஆரம்பித்த வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று முன்தினம் (17-ம் தேதி) நள்ளிரவுக்குப் பின்னரும் போயஸ் கார்டன் வரை நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் அவர்களின் கடமையை செய்துள்ளனர். எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம், தலைமைச் செயலக அலுவலகத்திலும், தலைமைச் செயலாளர் வீட்டிலும் ஏற்கெனவே சோதனை நடத்தினர்.
சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் நடைபெற்ற சோதனை மீதான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரணை நடக்கும். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, பொருட்களை வைத்துக்கொண்டு கருத்துகளை கேட்பார்கள். அந்த நடவடிக்கைகளை ஒரே நாளில் முடிக்க முடியாது.

போயஸ்கார்டன் தொடர்பில்லை

போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனையின்போது, பென் டிரைவ் கைப்பற்றப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. நான் போயஸ் கார்டன் தொடர்பை விட்டு பலநாட்கள் ஆகிறது. என்னுடைய வீட்டிலோ அல்லது கல்லூரியிலோ அதுமாதிரி பென் டிரைவ் அல்லது சிடி கைப்பற்றப்படவில்லை.
வருமான வரியை பிடிப்பதற்காகத்தான் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த சோதனையின்போது, ரொம்ப பேர் சிடி கேட்டனர் என்று சொல்கின்றனர். தினகரன் ஒரு சிடி இருப்பதாக சொல்லியிருந்தார். அது மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சசிகலாவின் ஹேண்ட் கேமராவில் எடுக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்திலும் எடுத்தனர். இந்நிலையில், வருமான வரி சோதனைக்கு வந்திருந்த அதிகாரிகள் தங்களது பணியைச் செய்தனர். இந்த சோதனையின் பேரில் உள்ளே வந்த சிலர் அந்த வேலையைப் பார்த்திருக்கலாம்.

அப்பாவிகளின் வீடுகளிலும்

சசிகலா ஆதரவாளர்கள் வீட்டில் மட்டுமல்ல, ஆதரவாளர்கள் அல்லாத அப்பாவிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுள்ளது. 17-ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு நடைபெற்ற வருமான வரி சோதனைக்குப் பிறகு நான் விவேக்கை தொடர்பு கொள்ளவில்லை. போயஸ் கார்டனில் அவர் அதிகாரிகளுக்கு உதவி செய்து வருகிறார். வருமான வரி சோதனைக்குப் பிறகு எனக்கு தேதி குறிப்பிட்டு சம்மன் வழங்கப்படவில்லை. தேவைப்பட்டால் ஆஜராக வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மின் பகிர்மான கழகத்தில் ஊழல் நடந்துகொண்டுதான் உள்ளது. ஊழல்தான் மிகப்பெரிய பிரச்சினை. அதிமுக ஆளுங்கட்சியாக 2011-ல் வந்தபோது நாங்கள் எல்லாம் கட்சியை விட்டு நீக்கப்பட்டோம். என் மீது 8 பொய் வழக்குகள் போடப்பட்டன. நான் 3 மாதம் ஜெயிலில் இருந்தேன். மீண்டும் ஓராண்டு கழித்து கைது செய்யப்பட்டு, ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டேன்.
இங்கு தொடங்கியதுபோல மற்ற மாவட்டங்களிலும் கட்சி அலுவலகம் தொடங்கி விட்டோம். ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு நிறைய பேருக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மாற்று அணியில் இருந்தவர்களே என்னை சந்தித்து சால்வை அணிவித்துள்ளனர். ஓர் இரவிலேயே இந்த மாற்றம் உருவானதற்கு காரணம் ஜெயலலிதாவின் வீட்டிலேயே சோதனை நடத்தியதுதான். ஒரு சில அமைச்சர்களைத் தவிர அதிக அமைச்சர்கள் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை.

தீவிர அரசியலில் இருந்தேன்

எம்.ஜி.ஆர். இறந்து ஜா, ஜெ என கட்சி பிரிந்திருந்தபோது நான் தீவிர அரசியலில் இருந்தேன். நான்தான் ஜெயலலிதாவை மாநிலம் முழுவதும் அழைத்துச் சென்றேன். அதிமுக மாணவர் அமைப்பில் இருந்ததால் மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் ஜெயலலிதாவுக்கு உதவி செய்துள்ளேன்.
நானும், தினகரனும்தான் ஜெயலலிதாவுடன் இடது, வலது கரங்களாக இருந்தோம். 3 இடங்களில் நடந்த தாக்குதல்களில் என் உயிரே போயிருக்கும். 18 தையல் போடுமளவுக்கு என் மண்டை உடைந்தது. ஜெயலலிதாவை அடித்த அடியை நான் வாங்கியிருந்தேன். அப்போதே நான் செத்திருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, எல்லோரும் பதவியில் இருக்கும்போது நான் எந்த பதவி சுகத்தையும் அடைந்ததில்லை.
திமுக தொடர்ந்த வழக்கில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி பழனிசாமி அரசுக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் எங்களது ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.தமிழகத்தைப் பொறுத்தவரை மற்றுமொரு சுதந்திரப் போராட்டம் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

கடலில் இறங்கிவிட்டோம்

1996-ல் ப.சிதம்பரத்தால் போடப்பட்ட வழக்கில் தற்போது எம்.நடராஜனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ததையடுத்து நடராஜன் மருத்துவ ஓய்வில் உள்ளார். கடலில் இறங்கி விட்டோம், அலைக்கு பயப்பட்டால் முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை: