புதன், 22 நவம்பர், 2017

சிறுமி ஆத்யாவை படுகொலை செய்த போர்டிஸ் மருத்துவமனை !

அனுமதிக் கட்டணம் – ரூ 1,250 
இரத்த வங்கி – ரூ 61, 315 
 பரிசோதனைக் கட்டணம் – ரூ 29, 290 
மருத்துவர் கட்டணம் – ரூ 53, 900 
மருந்துகள் – ரூ 3, 96, 732.48 
உபகரணங்களுக்கான கட்டணம் – ரூ 71,000 
சோதனைகளுக்கான கட்டணம் – ரூ 2, 17, 594 
மருத்து முறைகளுக்கான கட்டணம் – ரூ 2, 85, 797 
 மருத்துவ உபகரணங்கள் – ரூ 2, 73, 394 
இதர செலவுகள் – ரூ 15, 150 
அறை வாடகை – ரூ 1, 74,000 
தள்ளுபடி – ரூ 20,000 மொத்தம் – ரூ 15, 79, 322.48
வினவு :
ழு வயதான ஆத்யாவுக்கு கடந்த ஆகஸ்டு 27, 2017 அன்று திடீரென காய்ச்சல் வந்துள்ளது. துவண்டு போன ஆத்யாவின் பெற்றோர் அவளை தில்லியை அடுத்துள்ள துவராகாவில் உள்ள ராக்லாண்டு மருத்துவமனையில் ஆகஸ்ட் 29 -ம் தேதி சேர்க்கிறார்கள். ஆகஸ்டு 31 -ம் தேதி ஆத்யாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமி ஆத்யா
ராக்லேண்டு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு வசதி தமது மருத்துவமனையில் இல்லையென்றும், குருகாவ்னில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கும் படியும் கூறியுள்ளனர்.

அதே நாளில் போர்டிஸ் மருத்துவமனையில் தங்களது குழந்தையைச் சேர்த்து விட்டதாகச் சொல்கிறார் தந்தை ஜெயந்த். சேர்த்த அன்றே ஆத்யாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்திய போர்டிஸ் மருத்துவர்கள், அடுத்த மூன்று நாட்களுக்கு மயக்கநிலையிலேயே குழந்தையை வைத்துள்ளனர். நான்கைந்து நாட்களாகியும் குழந்தையின் நிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடியாமல் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே நின்று கண்ணாடி வழியே மயக்க நிலையில் இந்த தங்கள் பிள்ளையைப் பார்த்துக் கொண்டே இருந்துள்ளனர் அவளது பெற்றோர்.
செப்டெம்பர் 14 -ம் தேதி வரை குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. மேலும், அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பதே தெரியாத நிலையில் தொடர்ந்து இன்குபேட்டரில் வைத்து லட்சக்கணக்கில் காசைக் கறந்துள்ளது போர்டிஸ் மருத்துவமனை. ஒவ்வொரு நாளும் சுமார் நாற்பது ஊசிகளை அந்தக் குழந்தையின் உடலில் ஏற்றியுள்ளனர் – ஒவ்வொன்றுக்கும்  பல்லாயிரம் ரூபாய் கறந்துள்ளனர்.
சாதாரண மருந்துக் கடைகளில் 500 ரூபாய் விலையில் விற்கப்படும் மெரோலான் எனும் மருந்தை 4,491 ரூபாய் விலையில் விற்றுள்ளனர். சிப்லா நிறுவனத்தால் மெரோகிரிட் எனும் வணிகப் பெயரில் தயாரிக்கப்படும் இதே மருந்தின் விலை 3,100 – இதற்கு 65,362 ரூபாய் பில் போட்டுள்ளனர். இவ்விரண்டு மருந்துக் குப்பிகளையும் சுமார் 21 முறை ஆத்யாவின் உடலில் ஊசி மூலம் ஏற்றியுள்ளனர். ஆத்யா போர்டிஸ் மருத்துவமனையில் இருந்த 14 நாட்களில் 2700 கையுறைகளைப் பயன்படுத்தியதாகச் சொல்லி அதற்காக 17,142 ரூபாய் பில்லில் சேர்த்துள்ளனர்.
போர்டிஸ் மருத்துவமனையில் சேர்த்த ஏழாவது நாளில் ஆத்யாவின் மூளை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவளது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருவதாகவும் தெரிவித்த மருத்துவர்கள், செப்டெம்பர் 9,10,11 -ம் தேதிகளில் அவளுக்கு டயாலிசிஸ் செய்துள்ளனர். இந்த நாட்களில் ஆத்யாவின் உண்மையான பிரச்சினை என்ன, அவளது உடல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவளது பெற்றோருக்குத் தெரிவிக்க எந்த மருத்துவரும் முன்வரவில்லை. செப்டெம்பர் 14 -ம் தேதியன்று ஆத்யாவின் மூளை 70 -ல் இருந்து 80 சதவீதம் செயலிழந்து விட்டதாகவும், ஏதாவது ஒரு வாய்ப்பில் அவள் தேறிவந்தாலும் அவளால் இயல்பாக செயல்பட முடியாதெனவும் தெரிவித்துள்ளனர்.
ஜெயந்திடம் இவ்வாறு தெரிவித்த மருத்துவர்கள், அதே நேரம் அவளது தாயைத் தனியே சந்தித்து ஆத்யாவின் உடலில் உள்ள பிளாஸ்மா முழுவதையும் மாற்றும் சிகிச்சை ஒன்றை முயற்சித்துப் பார்க்கலாம் என்றும் அதற்கு 20 லட்சம் வரை செலவாகும் என்றும் சொல்லி மேலும் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே 15.79 லட்சம் வரை செலவழித்த பின்னும் 80 சதவீத மூளை செயலிழந்து போன குழந்தையின் உடலை வைத்துக் கொண்டு மேலும் பணம் பறிக்க திட்டமிடுவதை உணர்ந்த அவளது பெற்றோர், வெண்டிலேட்டரில் இருந்து தனது குழந்தையின் உடலை எடுத்து விடுமாறு கூறியுள்ளார்.
தந்தை ஜெயந்தின் கோரிக்கையானது மருத்துவர்களின் பரிந்துரைக்கு எதிரானது என எழுதி வாங்கிக் கொண்ட மருத்துவர்கள், இறுதியில் ஆத்யாவைக் குற்றுயிரும் குலையுயிருமாக அவளது பெற்றோரிடம் ஒப்படைக்க சம்மதித்துள்ளனர். அதற்கு முன் சல்லி பைசா பாக்கியில்லாமல் மொத்தமாக வசூலித்துக் கொள்ளவும் தயங்காத மருத்துவமனை, ஆத்யாவை எடுத்துச் செல்ல தங்களது மருத்துவமனை ஆம்புலன்சைக் கூட வழங்கவில்லை.
செப்டெம்பர் 14 -ம் தேதியன்று மதியம் 2 மணிக்கே வெண்டிலேட்டரில் இருந்து ஆத்யாவை வெளியே எடுத்து விட்ட போர்டிஸ் மருத்துவமனை, அன்றைக்கு இரவு 11:30 மணிக்குத் தான் அவளது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மீண்டும் ராக்லேண்டு மருத்துவமனைக்கே தங்கள் பிள்ளையை எடுத்துச் சென்றுள்ளனர் அந்தப் பெற்றோர். அங்கே ஆத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்துள்ளனர்.
ஆத்யாவுக்கு ஆன்யா என்றொரு சகோதரி உண்டு. இருவரும் இரட்டைக் குழந்தைகள். தற்போது தனது சகோதரிக்கு என்னவானது என்று கேட்டு அழும் ஆன்யாவைச் எப்படிச் சமாதானம் செய்வதென்றே தமக்குத் தெரியவில்லை என்கிறார் ஜெயந்த். ஆத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் அவளது தாய் தீப்தி கருவுற்றிருந்திருக்கிறார். போர்டிஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட மனவுளைச்ச்சல் தாளாமல் தீப்தியின் வயிற்றிலிருந்த கரு சிதைந்து போயிருக்கிறது.
அடுத்தடுத்து நடந்த இழப்புகளால் சோர்ந்து போயிருந்த அந்தக் குடும்பம், தற்போது போர்டிஸ் மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தொடர முடிவெடுத்துள்ளது; சமூக வலைத்தளங்களிலும் தங்களுக்கு நேர்ந்த அநீதியைக் குறித்து எழுதி வருகின்றனர்.
போர்டிஸ் அளித்த கடைசி பில்லின் சுருக்கமான விவரங்கள் கீழே :
அனுமதிக் கட்டணம் – ரூ 1,250
இரத்த வங்கி – ரூ 61, 315
பரிசோதனைக் கட்டணம் – ரூ 29, 290
மருத்துவர் கட்டணம் – ரூ 53, 900
மருந்துகள் – ரூ 3, 96, 732.48
உபகரணங்களுக்கான கட்டணம் – ரூ 71,000
சோதனைகளுக்கான கட்டணம் – ரூ 2, 17, 594
மருத்து முறைகளுக்கான கட்டணம் – ரூ 2, 85, 797
மருத்துவ உபகரணங்கள் – ரூ 2, 73, 394
இதர செலவுகள் – ரூ 15, 150
அறை வாடகை – ரூ 1, 74,000
தள்ளுபடி – ரூ 20,000
மொத்தம் – ரூ 15, 79, 322.48

***

ருத்துவ சேவையைக் கார்ப்பரேட் தொழிலாளாக கருதும் இது போன்ற கிரிமினல் கும்பல்கள், ஒருபுறம் நவீன மருத்துவம் சாதாரண ஏழை மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்கின்றனர். ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளின் மேல் இருக்கும் பாசம் மற்றும் நோய்களைக் குறித்து இருக்கும் அறைகுறைப் புரிதலை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்வதையே கார்ப்பரேட் மருத்துவமனைகள் செய்கின்றன. சமீபத்தில் தான் அபோல்லோ மருத்துவமனையிடம் சிக்கிக் கொண்ட ஹேமநாதனின் கதையைக் கேள்விப் பட்டோம்.
கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளின்  லாப வேட்டையை உத்திரவாதப்படுத்தும் பொருட்டு, தொடர்ந்து வரும் மத்திய மாநில அரசுகளும் அரசு மருத்துவமனை வலைப்பின்னலைத் திட்டமிட்டு சிதைத்து வருகின்றது. “கையில் காசு உடலில் உயிர்”  என்பதையே தாரக மந்திரமாக கொண்ட தனியார் மருத்துவமனைகளே கதியெனும் நிலைக்கு மக்கள் திட்டமிட்டு ஆளாக்கப்படுகின்றனர். நவீன மருத்துவம் கற்கப்படும் நிலையில் இருந்தே (மருத்துவக் கல்லூரிகளில் இருந்தே) ஏழைகள் நுழைந்து விடக்கூடாது என்பதை உத்திரவாதப்படுத்தவே நீட் போன்ற தேர்வுகளையும் அறிமுகம் செய்துள்ளனர்.
மருத்துவ கார்ப்பரேட் கிரிமினல்கள் மக்களுக்கு நவீன மருத்துவத்தை அந்நியப்படுத்தி வைத்திருப்பதால் வேறு வழியின்றி விஞ்ஞானமல்லாத, விஞ்ஞானத்தால் உறுதி செய்யப்படாத மருத்துவ முறைகளை நோக்கி ஏழைகள் நெட்டித் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு நவீன மருத்துவம் அழைத்து வரும் செலவுகளைக் கண்டு மிரண்டு போகும் மக்கள், சேலம் லாட்ஜு வைத்தியர்கள், ஹீலர் பாஸ்கர் போன்ற பித்தலாட்டக்காரர்களை நாடிச் சென்று ஏமாந்து போகின்றனர்.
தற்போது ஆத்யாவின் நிலை சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இருப்பதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் விசாரணை செய்யப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், மறந்தும் கூட அவரது வாயில் இருந்து அரசு மருத்துவமனை வலைப்பின்னல் மீண்டும் வலுப்படுத்தப்படும் என்று வரவில்லை. வரவும் வராது. ஏனெனில், இந்த மொத்த அரசும் அதன் ஒவ்வொரு உறுப்புகளுமே தனியார் கார்ப்பரேட் கிரிமினல் கும்பல்களின் லாப வேட்டைக்கு விளக்குப் பிடிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும், குற்றமிழைக்கும் தனியார்மருத்துவ மனைகளுக்கெதிராகவும் உடனுக்குடன் தெருவில் இறங்கிப் போராடுவது அவசியம்.
மேலும் :

கருத்துகள் இல்லை: