வியாழன், 23 நவம்பர், 2017

சத்தியபாமா கல்லூரி மாணவி தற்கொலை! - விடுதிக்கு தீவைப்பு!!


நக்கீரன் : சென்னை சத்தியபாமா பல்கலைக் கழக விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, மாணவர்கள் விடுதிக்கு வெளியே தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்த மாணவி ராகமோனிகா. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் இன்று காலை நடந்த தேர்வில் சக மாணவியின் விடைத்தாளைப் பார்த்து எழுதியுள்ளார். இதனைக் கவனித்த பேராசிரியர் ஒருவர் ராகமோனிகாவை தேர்வறையை விட்டு வெளியேற்றியதாகவும், ஆடைகளைக் களையச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாணவி ராகமோனிகா பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவியில் இந்தத் தற்கொலையின் காரணமாக ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுதி வளாகத்திற்கு வெளியே தீவைத்தனர். மேலும், கல்லூரி வளாகத்திற்குள் மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதி வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் தீவைத்துள்ள நிலையில், அந்தப் பகுதி புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. மிகப்பெரிய இழப்புகள் ஏற்படும் என அஞ்சப்பட்ட நிலையில், சத்தியபாமா பல்கலைக்கழக நுழைவுவாயில், விடுதி உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை தற்பொழுது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: