திங்கள், 20 நவம்பர், 2017

ஓடி ஒழிக்கும் நிர்மலா சீதாராமன்? பதிலுக்காகக் காத்திருக்கும் கேள்விகள்!

மின்னம்பலம் :சித்தார்த் வரதராஜன் சிறப்புக் கட்டுரை: பதிலுக்காகக் காத்திருக்கும் கேள்விகள்!இந்தியா ஃபவுண்டேஷன் குறித்து நவம்பர் 4 அன்று ‘தி வயர்’ வெளியிட்ட கட்டுரை அந்த அமைப்பின் நிதிச் செயல்பாடுகள், அரசியல் செயல்பாடுகள் ஆகியவை குறித்த ஆதாரபூர்வமான கேள்விகளை முன்வைத்திருந்தது (https://thewire.in/193873/exclusive-think-tank-run-nsa-ajit-dovals-son-conflict-interest-writ-large/). ஸ்வாதி சதுர்வேதி எழுதிய அந்தக் கட்டுரையில் மூன்று கோணங்களில் இது தொடர்பான முரண்பாடுகள் இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்தன.
முதலாவதாக, இந்தியா ஃபவுண்டேஷனின் நிறுவனர் - இயக்குநரான சவுரியா டோவலின் நடவடிக்கை குறித்தது. இவர், சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு வர்த்தகரின் ஆதரவுடன் நடத்தப்படும் நிதிச் சேவைகள் நிறுவனத்தின் பங்குதாரர். இந்த நிறுவனம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகிறது. இந்தத் துறைகள், முக்கியக் கடமைகளைக் கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. இந்தியா ஃபவுண்டேஷனின் நடவடிக்கைகளில் இந்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஈடுபட வைக்கும் அளவுக்கு சவுரியா டோவல் செல்வாக்குப் படைத்துள்ளார்.

இரண்டாவது பிரச்னை, ஒரு ஃபவுண்டேஷனின் இயக்குநர்களாகச் செயல்படும் அமைச்சர்களின் அதிகாரபூர்வமான செயல்பாடு குறித்தது. குறிப்பாக, இந்திய மற்றும் வெளிநாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படும் இந்தியா ஃபவுண்டேஷனைச் சார்ந்து அவர்கள் செயல்படுவது முறையானதா?
மூன்றாவது கோணம், அரசியல் அடிப்படையிலானது. பொதுத் துறை நிறுவனங்களின் ஆதரவு, சில சமயங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசுத் துறைகளின் ஆதரவு என்ற வடிவத்தில் மக்களின் வரிப்பணத்தை, ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புடைய சிந்தனையாளர் குழு பெறலாமா?
அக்டோபர் 31ஆம் தேதி அன்றும் நவம்பர் 1ஆம் தேதியும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் டோவலின் மகனும் இந்தியா ஃபவுண்டேஷனின் இயக்குநருமான சவுரியா டோவலுக்கு, இந்தியா ஃபவுண்டேஷனின் செயல்பாடுகள் குறித்த கேள்விப் பட்டியலை தி வயர் அனுப்பியது. இந்த ஃபவுண்டேஷனுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது என முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கு, “மாநாடுகள், விளம்பரம், இதழ்” என சுருக்கமாக டோவல் பதிலளித்திருந்தார். மத்திய அமைச்சர்களை இயக்குநர்களாகக் கொண்டுள்ள ஒரு தன்னார்வ அமைப்புக்குக் கிடைக்கும் நிதி குறித்த கேள்விக்கான இந்த பதில் முழுமையானதல்ல.
வாட்ஸ்அப் மூலம் நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டும் இந்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. நிதி ஆதாரம் குறித்த கேள்விக்கு உரிய நபர் பதிலளிப்பார் என உறுதியளித்திருந்த இந்தியா ஃபவுண்டேஷனின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரான ராம் மாதவ்வும் எந்தப் பதிலும் அளிக்காமல் மவுனம் சாதித்தார்.
தி வயர் முன்வைத்த கேள்விகள்:
நவம்பர் 1ஆம் தேதி சவுரியா டோவலிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் பின்வருமாறு:
எந்த அதிகார அமைப்பிடம் உங்கள் அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்டுள்ளது?
இதன் அறங்காவல்கள் யார் யார்?
எஃப்.சி.ஆர்.ஏ. முதன்முறையாக எப்போது இந்தியா ஃபவுண்டேஷன் பெற்றது? எஃப்.சி.ஆர்.ஏ. இணையதளத்தில் இந்தப் பதிவு 2017இல் ‘புதுப்பிக்கப்பட்டதாக’க் கூறப்பட்டுள்ளது.
முதன்முறையாக 2017இல் இந்தியா ஃபவுண்டேஷன் எஃப்.சி.ஆர்.ஏ. பதிவு பெற்றிருந்தது என்றால், பதிவுக்கு முந்தைய ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதற்கும், நன்கொடைகள் பெறுவதற்கும் முன்கூட்டிய எஃப்.சி.ஆர்.ஏ. அனுமதி பெற்றிருந்தீர்களா? அப்படி அனுமதி பெற்றிருந்தால், அந்தத் தகவல்களை வழங்குவீர்களா?
2017ஆம் ஆண்டுக்கு முன்னரே இந்தியா ஃபவுண்டேஷன், எஃப்.சி.ஆர்.ஏ. பதிவு பெற்றிருந்தால், ஒவ்வோர் ஆண்டும் ஏன் இந்த ஃபவுண்டேஷன் எஃப்.சி. வரவு, செலவு விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை? அப்படித் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அவை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும். ஆனால், உங்களது இந்தியா ஃபவுண்டேஷன் தொடர்பான இந்த விவரங்கள் ஏதுமே கிடைக்கவில்லை. ஒருவேளை, நீங்கள் வரவு செலவு விவரங்களைத் தாக்கல் செய்திருந்து, எஃப்.சி.ஆர்.ஏ. அதிகாரிகள் ஏதாவது சில காரணங்களால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்றால், அந்த விவரங்களை தயவுசெய்து எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தியா ஃபவுண்டேஷனுக்கு விளம்பரங்கள், நிகழ்ச்சிகளுக்கான ஸ்பான்சர்ஷிப் ஆதரவு முதலானவற்றின் மூலம் பணம் கொடுத்த வெளிநாட்டு நிறுவனங்களின் பட்டியலையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி உதவி தரும் இந்திய தனியார் நிறுவனங்களின் பட்டியலையும் எங்களுக்குத் தர முடியுமா?
வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்தியா ஃபவுண்டேஷன் சேவை ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தால், அதற்கான கட்டணத்தை எப்போது பெற்றது? அப்படிப் பெற்றிருந்தால், அந்த ஒப்பந்த நகலின் மாதிரி வடிவம் தர முடியுமா?
வருவாய் நிலவரத்தை எடுத்துக்கொண்டால், விளம்பரங்கள், மாநாடுகள் / நிகழ்ச்சிகள் / இதழுக்கான கார்ப்பரேட் ஸ்பான்சர் உதவி வாயிலாக பணம் கிடைப்பதாக அறிகிறோம். ஆனால், இட வாடகை, ஊதியம் முதலான அன்றாட செலவுகளுக்குப் பணம் எப்படிக் கிடைக்கிறது?
நீங்களோ அல்லது ராம் மாதவ்வோ ஊதியமோ அல்லது வேறு எந்த முறையிலான சம்பளமோ இந்தியா ஃபவுண்டேஷனிடமிருந்து பெறுகிறீர்களா?
இந்தியா ஃபவுண்டேஷனின் வருடாந்திர நிதி நிலை அறிக்கையை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? வெளிப்படைத்தன்மையைக் கருத்தில்கொண்டு, தணிக்கை செய்யப்பட்ட சமீபத்திய வரவு, செலவு அறிக்கையைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இந்தியா ஃபவுண்டேஷன், 12ஏஏ மற்றும் 80ஜி உரிமம் பெற்றுள்ளதா?
இந்தியா ஃபவுண்டேஷன் இணையத்தில் காணப்படும் இயக்குநர்கள் பட்டியல் தற்போதைய நிலவரம்தானா? அல்லது புதிய இயக்குநர்கள் சேர்ந்துள்ளனரா அல்லது பட்டியலில் இடம்பெற்றுள்ள யாராவது வெளியேறியிருக்கிறார்களா?
அரசு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், அமைச்சர்கள் முதலான வழிமுறைகளிலிருந்து நன்கொடை / நிதி உதவி பெறப்பட்டிருந்தால், அந்தத் தகவலை தயவுசெய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
நவம்பர் 1ஆம் தேதி அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கேள்விப் பட்டியல் அனுப்பப்பட்டது. இதன் நகல்கள் அவரது அமைச்சக அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டன, இதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
பாதுகாப்புத் துறை அமைச்சரும் இந்தியா ஃபவுண்டேஷனின் இயக்குநருமான நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பப்பட்ட கேள்விப்பட்டியல் வருமாறு:
இந்தியா ஃபவுண்டேஷன் வருவாய் ஆதாரங்கள் என்ன?
போயிங் மற்றும் டி.பி.எஸ். இந்தியா ஃபவுண்டேஷன் நிகழ்ச்சிகளுக்கு கடந்த காலங்களில் ஸ்பான்சர் செய்துள்ளது என்று தெரிகிறது. இனியும் செய்யலாம். வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெறும் ஒரு ஃபவுண்டேஷனின் இயக்குநராக இருப்பது, அதுவும் குறிப்பாக அந்நிறுவனங்கள் நீங்கள் பணியாற்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை தற்போது பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டிருப்பது முறையல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

எஃப்.சி.ஆர்.ஏ. கிளியரன்ஸ் பெற்றுள்ள, பதிவு எண். 231661683 கொண்ட, கடைசியாக 6/6/2017 அன்று புதுப்பிக்கப்பட்ட, இந்தியா ஃபவுண்டேஷனின் இயக்குநர் நீங்கள். இந்தியா ஃபவுண்டேஷன் இதற்கு முன் எஃப்.சி.ஆர்.ஏ. பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், எஃப்.சி.ஆர்.ஏ. வலைதளம் பராமரித்துவரும் கட்டாய எஃப்.சி. வருமானவரித் தாக்கல் கடந்த நான்கு நிதி ஆண்டுகளில் (அதாவது நிதி ஆண்டுகள், 2013-14, 2014-5, 2015-16 மற்றும் 2016-17) இந்தியா ஃபவுண்டேஷன் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்பது தெரிகிறது. எஃப்.சி.ஆர்.ஏ-இன் கீழ், இந்தியா ஃபவுண்டேஷன் எப்போது முதலில் பதிவு செய்யப்பட்டது என்பதை உங்களால் சொல்ல முடியுமா?
இந்தியா ஃபவுண்டேஷன் இப்போதுதான் முதன்முதலாக எஃப்.சி.ஆர்.ஏ. பதிவு செய்துள்ளது என்றால், அதற்கு முந்தைய ஆண்டுகளில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவிகள் பெற்றது எஃப்.சி.ஆர்.ஏ-இன் கீழ் சட்டபூர்வமானதுதானா?
சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளின் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் வெளிநாட்டு நிதி உதவி பெறுவதை எஃப்.சி.ஆர்.ஏ. தடைசெய்கிறது. குறைந்தபட்சம் எஃப்.சி.ஆர்.ஏ-வின் குறிப்பிடும் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் – போயிங் மற்றும் டி.பி.எஸ் - இந்தியா ஃபவுண்டேஷன் நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர் செய்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும். இவை இரண்டுமே எஃப்.சி.ஆர்.ஏ. படி ‘வெளிநாட்டு பங்களிப்புகள்’தான். நீங்கள் இந்தியா ஃபவுண்டேஷன் இயக்குநர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராகவும் இருப்பதால், ஓர் இயக்குநராக இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில் வெளிநாட்டு பங்களிப்புகளை ஏற்றுக்கொண்டது எஃப்.சி.ஆர்.ஏ. விதிமுறைகளை மீறிய செயலாகாதா?
நீங்கள் ஒரு எம்.பி. மற்றும் / அல்லது ஓர் அரசு ஊழியராக இருந்துகொண்டே எதிர்காலத்தில் இந்தியா ஃபவுண்டேஷனுக்காக நீங்கள் பெறப்போகும் வெளிநாட்டு நிதி உதவிகள் எஃப்.சி.ஆர்.ஏ. விதிகளை மீறுவதாகாதா?
இதேபோன்ற கேள்விகள் நவம்பர் மாதம் 1ஆம் தேதி சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்ஹா மற்றும் எம்.ஜே. அக்பர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டன. இவர்கள் மூவரில் யாருமே பதில் கூறவில்லை. சுருக்கமான கேள்விகள் நவம்பர் 2ஆம் தேதி, பிரதம மந்திரியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ராவுக்கும் அனுப்பப்பட்டது. ஆறு இயக்குநர்களுக்கும் பதில் அனுப்ப மூன்று வேலை நாள்கள் அவகாசம் கொடுத்த பின் தி வயர் நவம்பர் 3ஆம் தேதியன்று இந்தக் கட்டுரையை வெளியிட்டது.
இந்தியா ஃபவுண்டேஷனின் வலைதளம், பிரவுசர்கள், உள்துறை அமைச்சகத்தின் எஃப்.சி.ஆர்.ஏ. வலைதளம், சவுர்ய டோவலின் ஜெமினி நிதி சேவைகள், அக்டோபர் 30இல் சதுர்வேதிக்கு சவுரியா டோவல் அனுப்பிய சுருக்கமான பதில்கள், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு இவர் அளித்த பேட்டி ஆகியவற்றிலிருந்து இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் பெறப்பட்டிருந்தன. இவற்றோடு, முன்னாள் பாதுகாப்பு செயலர் மற்றும் முன்னால் கேபினட் செயலர் ஆகியோரின் கருத்துகளையும் தி வயர் சேர்த்திருந்தது.
தி வயர் கட்டுரை வெளிவந்த 24 மணி நேரம் கழித்து, நவம்பர் 4ஆம் தேதி, இந்தியா ஃபவுண்டேஷன் தன் இணையதளத்தின் அதன் முகப்புப் பகுதியில் தி வயர் கட்டுரைக்கான பதிலை பதிவு செய்தது. அந்த பதிலின் விவரங்கள்:
இந்தியா ஃபவுண்டேஷன் கூறுவது என்ன?
தி வயர்-இல் வெளிவந்த கட்டுரை இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு இடையேயான முரண்பாடுகள் குறித்து ஆதாரமற்ற முறையில் எழுதியுள்ளது.
அதன் கேள்விகள், ஊக அடிப்படையிலானவை. இந்தியா ஃபவுண்டேஷனின் மரபு, புகழ், நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையிலான இந்த ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா ஃபவுண்டேஷன் கண்டிக்கிறது.
இந்தியா ஃபவுண்டேஷன், 2009ஆம் ஆண்டிலிருந்து தேசத்தை முன்னேற்றுவது, அதன் கலாசாரம் சமூக விழிப்புணர்வை வளர்ப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டுவரும் முதன்மை அமைப்பு.
இதன் இயக்குநர்கள், அவர்கள் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாவதற்கு முன்பாகவே இந்தியா ஃபவுண்டேஷனுடன் தொடர்புகொண்டிருந்தவர்கள்.
கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பின்வருமாறு:
எந்த ஓவர்சீஸ் தனியார் கார்ப்பரேட் அல்லது தனியாரிடமிருந்தும் ஃபவுண்டேஷன் எந்த வெளிநாட்டு நிதியையும் ஒருபோதும் பெற்றதில்லை.
ஃபவுண்டேஷனும் அதன் இயக்குநர்களும் எந்த நிறுவனத்தின் வர்த்தகம் அல்லது தனிப்பட்ட வளர்ச்சிக்காக, நலன்களுக்காக, அது உள்ளூரோ அல்லது வெளிநாட்டு நிறுவனமோ எந்த முனைப்பையும் மேற்கொண்டதில்லை. அதன் கூட்டங்கள் கலாசாரம், புவிசார் அரசியல், பெரிய அளவிலான பொருளாதாரம் போன்றவை தொடர்புடையவை.
ஃபவுண்டேஷனின் சட்டபூர்வமான தேவைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுச் செயல்பட்டு வருகிறது. மேலும், ஃபவுண்டேனின் நடவடிக்கைகள் பொதுவானவை, வெளிப்படையானவை, தனது விதிமுறைகளை உண்மையாகக் கடைப்பிடித்துவருகிறது.

சவுரியா டோவல்
இயக்குநர் இந்தியா ஃபவுண்டேஷன்
பதில்களின் போதாமை
தி வயரில் வெளிவந்த கட்டுரையைப் படித்த யாருக்குமே சவுரியா டோவலின் பதில்கள் மேலும் கேள்விகளுக்குத்தான் இடமளித்துள்ளன என்பது தெளிவாகத் தெரியும்.
போயிங் மற்றும் டிபிஎஸ் இந்தியா ஃபவுண்டேஷனின் இந்தியன் ஓஷன் நிகழ்ச்சியின் ஸ்பான்சர்கள் என்பதை இந்தியா ஃபவுண்டேஷனின் விளம்பரங்கள், புகைப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. – ஸ்பான்சர்ஷிப்பின் தன்மை அல்லது எவ்வளவு, இந்தியா ஃபவுண்டேஷனுக்கா அல்லது அதன் ஒரு ‘பார்ட்னருக்கா, யாருக்குத் தரப்பட்டது என்பது தெரியவில்லை என ஸ்வாதி சதுர்வேதியின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டோவல் கூறியுள்ளதுபோல வெளிநாட்டு நிதி பெறப்படவில்லை என்பது உண்மை என்றால், எந்த ஸ்பான்சர்ஷிப்பும் வழங்காமலேயே போயிங், டிபிஎஸ் மற்றும் மகல் ஆகிய நிறுவனங்கள் ‘ஸ்பான்சர்கள்’ எனப் பட்டியலிடப்பட்டுள்ளது ஏன்? அல்லது இவை வழங்கிய ‘வெளிநாட்டு நிதியை இந்தியா ஃபவுண்டேஷன் பெறாமல் அதன் ஒரு பார்ட்னர் அமைப்பு பெற்றதா? எப்படி இருந்தாலும், எந்த மாதிரியான ஸ்பான்சர்ஷிப் பெறப்பட்டது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இந்தியா ஃபவுண்டேஷனுக்கு உள்ளது.
இந்தியா ஃபவுண்டேஷன், விண்ணப்பித்து, எம்.ஹெச்.ஏ.விடமிருந்து ஜூன் மாதம் 2017 அன்று எஃப்.சி.ஆர்.ஏ. சான்றிதழ் (எண். 231661683) பெற்றது என்று கூறப்பட்டுள்ளது. அரசு சாரா அமைப்புகள் எஃப்.சி.ஆர்.ஏ. சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நோக்கமே வெளிநாட்டு தனியார் கார்ப்பரேஷன்கள், தனியார்கள், அரசுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வெளிநாட்டு நிதி உதவி பெறத்தான் என்ற நிலையில் டோவல் கூறுவதைப் போல இதுவரை ஃபவுண்டேஷன் எந்த வெளிநாட்டு நிதியையும் பெற்றதில்லை என்றாலும்கூட எதிர்காலத்தில் நிதி பெறும் நோக்கம் இருப்பதையே இந்த அமைப்பு சான்றிதழ் பெற்றுள்ளதைக் காட்டுகிறது என்பதும் தெரிகிறது.
அரசியல் தொடர்பு குறித்த கேள்வி
‘இதன் இயக்குநர்கள் அமைச்சர்களாவதற்கு முன்பே, நாடாளுமன்ற உறுப்பினர்களாவதற்கு முன்பாகவே இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்போடு இணைந்திருந்தார்கள்’ என்று டோவல் கூறியுள்ளார்.
ஏற்கெனவே இணைந்திருந்தார்கள் என்பது எந்த வகையிலும் இதன் முரண்பாட்டு சூழலைத் தணித்துவிடாது. இந்த அமைப்பிலும் இருந்துகொண்டு, அமைச்சர்களாகவும் இருப்பது முறையல்ல என்பதை சில அமைச்சர்கள் உணர்ந்திருந்தார்கள். 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம்தேதி அவுட்லுக் இதழில் வெளிவந்த, இந்தியா ஃபவுண்டேஷன் அறிக்கையில் அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு நிர்மலா சீதாராமன், லாபம் தரும் அலுவலாக இருக்கலாம் என்பதால் ஃபவுண்டேஷன் இயக்குநர் பதவியைத் துறந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அமைச்சர்கள், கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப் பெற்று – அது இந்திய அல்லது வெளிநாடு எதுவாக இருந்தாலும் - அரசு கொள்கைகள் விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஒரு சிந்தனையாளர் குழுவின் இயக்குநர்களாக செயல்படுவது ஏற்புடையாகுமா? இந்த இயக்குநர்கள் அமைச்சர்களான உடனேயே தங்கள் இயக்குநர் பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
சிந்தனையாளர் குழு ஜனநாயகத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று டோவல் கூறுவது சரிதான். இந்தியா ஃபவுண்டேஷனுக்கும் இப்படிப்பட்ட பங்கு வகிப்பதற்கு உரிமை உள்ளது. ஆனால், அமைச்சர்கள் இயக்குநர்களாக இருப்பதையும், இந்த சிந்தனையாளர் குழுவில் நிதி தொடர்பாக வெளிப்படைத்தன்மை என்பது முற்றிலுமாக இல்லை என்பதாலும் டோவல் இது குறித்து, ஊடகங்கள் கண்டும் காணாதது போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
இந்தியா ஃபவுண்டேஷனின் வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்து முழுமையாக, குறைந்தபட்சம் 2014ஆம் ஆண்டிலிருந்தாவது சவுரியா டோவல் வெளியிட வேண்டும். மேலும், அவருக்கு வெளிநாட்டு நிதி பெறுவதில் எந்த ஆர்வமும் இல்லை என்று கூறிக்கொண்டே எஃப்.சி.ஆர்.ஏ. உரிமம் ஏன் பெற்றது என்பதையும் விளக்க வேண்டும். எகனாமிக் டைம்ஸ் இதழில் 2015இல் இவர் அளித்த பேட்டியில், “நாங்கள் பல்வேறு வழிகளில் ஸ்பான்சர்ஷிப் பெற்று நிதி உதவி பெறுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குநர்களாக அமைச்சர்கள் இருப்பதால், இவர் எந்த வழிகளில் யாரிடமிருந்து ஸ்பார்சர்ஷிப்கள் மற்றும் நன்கொடைகளைப் பெறுகிறார்கள் போன்ற விவரங்களைக் கண்டிப்பாக வெளியிட வேண்டும்.
நன்றி:thewire.in
தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

கருத்துகள் இல்லை: