புதன், 19 ஜூன், 2013

புலம்புகிறான் கொடியவன் :சிறுமிகளை துன்புறுத்தி கொலை செய்யும்போது போகாத மானம் Forbes magazine எழுத்தால் போய்விட்டதாம்

சவுதி இளவரசர்  ரிசானா போன்ற சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியும், இல்லை வேலை சரியாக செய்யவில்லை என்று கொலையும் செய்வது இந்த அமெரிக்க அடிமை ஷேக்குகளின் வாடிக்கை.
தம் நாட்டு குடும்பங்களுக்காக உழைக்கும் பெண்களுக்கு நியாயமான ஊதியத்தையும் உரிமைகளையும் மறுப்பது சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலாலுக்கு மான நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் இஸ்லாமிய, எண்ணெய் வளத்தில் மிதக்கும் ஷேக்குகளின் ஆபாசமான நியாயம்.
வ்வொரு ஆண்டும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை. நம்மூர் கோவில் கொடை முடிந்து நடக்கும் ஆலமரத்தடி பஞ்சாயத்து கூட்டத்தில் புரவலர்கள் பெயர் வாசிப்பது போன்றது இந்த பத்திரிகையின் பட்டியல். இதில் இடம் பிடிக்கவில்லை என்றாலும், இல்லை கடந்த ஆண்டை விட ரேங்க் பட்டியல் இறங்கினாலும் அந்த பணக்காரர்களுக்கு தூக்கம் மட்டுமல்ல, கௌரவமும் போய்விடும்.
சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால்
உலகெங்கும் பல கோடி மக்கள் ஏழையினும் ஏழையாய் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கும் காலத்தில் அந்த ஏழ்மையை உருவாக்கிய இந்த ஏகாம்பரர்கள் தமது சொத்துக் கணக்கை வைத்து கவுரவம் பார்ப்பது ஆபாசமானது.
இந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் தன் சொத்து மதிப்பு $20 பில்லியன் (ரூ 1.16 லட்சம் கோடி) என்று குறிப்பிட்டிருப்பது தவறானது, வேண்டுமென்றே மத்திய கிழக்கில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பை ஃபோர்ப்ஸ் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்று மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுதி அரேபிய இளவரசர் அல்வாலீத் பின் தலால். அவர் மன்னர் அப்துல்லாவின் மருமகனும் சவுதி அரச பரம்பரையை உருவாக்கியவரின் பேரனும் ஆவார்.

நம்மூரில் சொத்துக்களையும் வருமானத்தையும் குறைத்துக் காண்பித்து கருப்புப் பணம் மூலம் வருமான வரியிலிருந்து தப்பி வரும் முதலாளிகளோடு இதை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நமது நாடு போலி ஜனநாயகம் என்பதால் இங்கே மன்னராட்சி என்பது திருட்டுத்தனமாகவே நடைபெறும். மாறாக சவுதி என்பது அப்பட்டமான சர்வாதிகார மன்னராட்சி என்பதால் அங்கே சொத்துக் கணக்கு என்பதுதான் அதிகாரத்தின் அளவு கோல். அந்தக் காலத்தில் ஆண்டான்கள் அடிமைகளின் எண்ணிக்கையை வைத்து பெருமை பேசியது போல ஷேக்குகள் பில்லியன் கணக்கில் டாலரை முன்வைத்து பெருமையை பேச வைக்கிறார்கள்.
ஃபோர்ப்ஸ் கணக்கிட்டதை விட தனது சொத்து மதிப்பு $9.6 பில்லியன் (ரூ 58,000 கோடி) அதிகம் என்கிறார் இளவரசர். உலகப் பணக்காரர்கள் வரிசையில் அவரை 26-வது இடத்தில் வரிசைப்படுத்தியது மோசடியானது என்கிறார். அவருக்கு வங்கி-நிதி நிறுவனம் சிட்டி குரூப், ஊடக முதலாளி முர்டோச்சின் நியூஸ் கார்ப், ஐ போன் புகழ் ஆப்பிள் ஆகியவற்றில் பெரும் அளவிலான பங்குகள் உள்ளனவாம். நியூயார்க்கில் உள்ள பிளாசா ஹோட்டல், லண்டனில் உள்ள சவாய் ஹோட்டல், பாரிசில் உள்ள ஜார்ஜ் V ஹோட்டல் ஆகியவற்றிலும் அவருக்கு சொத்துரிமை இருக்கிறதாம்.
தெற்காசிய தொழிலாளர்கள்கிறித்தவ அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இவ்வளவு பணத்தை முதலீடு செய்வதற்கு அல்லா குர் ஆனின் எந்த அத்தியாயத்தில் அனுமதி தந்திருக்கிறார்? ஈராக்கிலும், ஆஃப்கானிலும், பாக்கிலும் அப்பாவி முசுலீம்களை கொன்று குவிக்கும் ஏகாதிபத்தியங்களின் நிறுவனங்களில்தான் சவுதி ஷேக்குகள் முதலீடு செய்து வட்டி பெறுகிறார்கள். அவையெல்லாம் ஏழை முசுலீம்களைக் கொன்று வரும் இரத்தப்பணம் என்பது ஷேக்குகளுக்கு பொருந்தாது போலும். ஒருவேளை மெக்காவில் இருக்கும் அல்லாவே சவுதி ஷேக்குகள் கட்டுப்பாட்டில்தான் கைதியாக இருக்கிறாரோ என்னமோ?
சவுதியில் வேலை செய்யும் தெற்காசிய தொழிலாளர்கள்
பாசிசமும், கோமாளித்தனமும், ஆடம்பரமும் கலந்து உருவான இந்த சவுதி இளவரசர் போட்ட வழக்கை சென்சேஷனாக மாற்றி ஆதாயம் பார்க்கிறதுஃபோர்ப்ஸ் பத்திரிகை. அதன் பொருட்டும், தனது மதிப்பீடு எப்போதும் தவறானதில்லை, கணக்கு சரிதான் என்று சாதிக்கிறது. சவுதி அரேபிய அரச பரம்பரையினரின் சொத்து விபரங்கள் குழப்படியாக இருப்பதாக மார்ச் 25 தேதியிட்ட இதழில் சிறப்புக் கட்டுரை எழுதியிருக்கிறது. உலகெங்கும் சொத்துக்களை குவித்துள்ள சவுதி ஷேக்குகள் தமது சொத்து விவரங்களை சரியாக வைத்திருக்கவில்லையோ என்னவோ! இத்தகைய பணக்காரர்களின் ஆசை நாயகிகளுக்கும் கணக்கில்லை, அடுக்கு மாளிகைகளுக்கும் கணக்கில்லை என்றால் ஃபோர்ப்ஸ் பத்திரிகை என்ன செய்யும்?
மார்பிளால் இழைக்கப்பட்ட ரியாதில் உள்ள 420 அறைகள் கொண்ட இளவரசர் அல்வாலீத் பின்தலாலின் மாளிகை, அவருக்குச் சொந்தமான அரியணை பொருத்தப்பட்ட போயிங் 747 ஜெட் விமானம், ரியாதுக்கு அருகில் 5 வீடுகள், 5 செயற்கை ஏரிகள், ஒரு மினி கிராண்ட் கேன்யன் இவற்றைக் கொண்ட 120 ஏக்கர் பரப்பிலான சொகுசு வாசஸ்தலம் போன்ற இளவரசர் கவலைப்படாத வஸ்துக்களையெல்லாம் கணக்கில் கொண்டுதான் சொத்துக் கணக்கைப் பற்றி விவரித்திருப்பதாக முன்மொழிகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. இதே சவுதி அரேபியாவில் பாலைவன வெயிலில் உழைத்தும், பரிதாபமான கூடாரங்களில் மந்தைகளைப் போல வாழ்ந்தும் காலம் தள்ளும் தெற்காசிய தொழிலாளிகளும் முசுலீம், சவுதி இளவரசரும் முசுலீம் என்றால் நாம் ஏன் அல்லாவை நம்ப வேண்டும்?
ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆசிரியர் ராண்டால் லேன், கட்டுரையை எழுதிய கெர்ரி டோலன், கட்டுரைக்கு கூடுதல் விபரங்கள் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்த பிரான்சின் மெக்கென்னா ஆகியோர் மீது அல்வாலீத் பின்தலால் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை நியூயார்க்கில் இருந்து வெளியானாலும், லண்டன் உயர் நீதிமன்றத்தில் உயர் ‘புத்திசாலி’த்தனமாக வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுதி இளவரசர். அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தால், தகவல் தவறானது என்றும் தவறு என்று தெரிந்தே அவதூறு செய்வதற்காக வெளியிடப்பட்டது என்றும் குற்றம் சாட்டுபவர் நிரூபிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து சட்டப்படி தகவல் மானநஷ்டம் ஏற்படுத்தும்படியானது என்று மட்டும் நிரூபித்தால் போதும், குற்றம் சாட்டப்பட்டவர்தான் தனக்கு தவறான நோக்கம் இல்லை என்று நிரூபிக்க வேண்டும்.
ஹாலிவுட் படங்களில் காமடி பணக்காரர்களாக வரும் சவுதி ஷேக்குகள் இப்படியெல்லாம் யோசித்து அமெரிக்காவை விட்டு இங்கிலாந்தில் வழக்கு போடுமளவு அறிவாளிகளோ, இல்லை ஆவரேஜான பேர்வழிகளோ இல்லை. ஒரு வேளை தான் யோசிப்பதற்கு கூட ஏதாவது இந்திய அம்பிகளை வாடகைக்கு அமர்த்தி வைலைக்கு வைத்திருக்கிறாரோ சவுதி இளவரசர்?
தனது சொத்து மதிப்பை குறைத்து மதிப்பிட்டதால் மானம் போய் விட்டதாக புலம்பும் இந்த ஷேக்கின் அரசுதான் சவுதி அரேபிய குடும்பங்களில் வீட்டு வேலை செய்யப் போகும் இந்தியப் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலை செய்யப் போகும் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் கொடுக்க வேண்டும், பாதுகாப்புக்காக தூதரகத்தில் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை இந்திய அரசு விதித்தது. அதை அடுத்து சவுதி அரேபிய குடும்பங்கள் இந்தியப் பெண்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தி விட்டன. இப்போது இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் சவுதி ஷேக்குகளின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டதால் இந்திய பெண்களை மீண்டும் வேலைக்கு எடுக்க ஆரம்பித்திருக்கிறது சவுதி அரேபியா. வீட்டு வேலை செய்ய பெண் பணியாளர்களை அனுப்பும் மற்ற மூன்று நாடுகளுடனும் இதே போன்ற ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் போடப்படும் என்கிறது சவுதி அரசு.
அப்படி வரும் ரிசானா போன்ற சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியும், இல்லை வேலை சரியாக செய்யவில்லை என்று கொலையும் செய்வது இந்த அமெரிக்க அடிமை ஷேக்குகளின் வாடிக்கை.
தம் நாட்டு குடும்பங்களுக்காக உழைக்கும் பெண்களுக்கு நியாயமான ஊதியத்தையும் உரிமைகளையும் மறுப்பது சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலாலுக்கு மான நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் இஸ்லாமிய, எண்ணெய் வளத்தில் மிதக்கும் ஷேக்குகளின் ஆபாசமான நியாயம்.
இத்தகைய ஷேக்குகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்களை அரேபிய பாலைவனத்தில் குடையில்லாமல் ஒட்டகம் மேய்க்கச் செய்து நல்வழிப்படுத்தும் வேலையினை அல்லா செய்ய மாட்டார். தொழிலாளிகள் செய்வார்கள். அதுவரையிலும் ஷேக்குகள் ஆட்டம் போடலாம்.
_________________________________________
- அப்துல் vinavu.com

கருத்துகள் இல்லை: