இந்தக் காற்று எங்கேயிருந்து உற்பத்தியாகி வருகிறது
என்று தெரியவில்லை. எப்போதும் வீசிக் கொண்டேயிருப்பதன் நோக்கம்
என்னவென்றும் தெரியவில்லை. எங்கிருந்தோ எப்படியோ எதற்காகவோ வருகிறது.
மரங்களைப் பிடித்து உலுக்குகிறது, தலை மயிரைச் சிலுப்புகிறது. இந்த
மரங்களைப் பாருங்கள்; நானும் இந்தப் பூங்காவை எனது சின்ன வயதில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன், இவையும் சும்மாவே இருப்பதில்லை. இவற்றுக்கு
அலுப்பே ஏற்படாதோ? இந்த மரங்களைச் சுற்றி ஓடியாடும் இந்தச் சிறுவர்களும்
தான். இவர்களுக்கெல்லாம் அலுப்பே வராதா?
தம்பி, நீங்கள் கொஞ்சம் வசதியாக சாய்ந்து உட்காருங்கள். என்னுடைய கதை பெரிது. என்ன சொன்னேன்?ஆங்… சிறுவர்கள். பாருங்களேன், ஓவென்று கத்திக் கொண்டு இலக்கின்றி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். எதற்கு ஓடுகிறார்களோ தெரியவில்லை. இவர்கள் மரங்களைக் கவனிக்கும் அளவுக்கும் கூட இங்கேயே அமர்ந்திருக்கும் என்னைக் கவனிப்பதில்லை. மரியாதை தெரியாதவர்கள். சரி, அவர்களை விடுங்கள்; நான் என்னைப் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள்.
நான் அய்யம்பெருமாள். முன்பொரு காலத்தில் இந்தப் பெயரை உச்சரிக்க வாயே வராது ஊர்க்காரப் பயல்களுக்கு. எனக்கு இரண்டு பெண்டாட்டிகளும், பதிமூணு பிள்ளைகளும் உண்டு. அதில் எட்டு பையன்கள், அஞ்சு பெட்டைகள். என்ன முகத்தைச் சுளிக்கிறீர்கள்?எங்கப்பாருக்கு மூணு பெண்டாட்டிகளும், ரெண்டு கூத்தியாள்களும் உண்டு, தெரியுமா? நான் ரெண்டாம் தாரத்தின் நான்காவது மகன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பதினேழு வயது வித்தியாசம். அப்பாவிடம் அம்மப்பா காசு வாங்கியிருந்தார். திருப்ப முடியவில்லை; மகளைக் கொடுத்து விட்டார். அப்பா கடைசியாக சேர்த்துக்கொண்ட கூத்தியாளுக்கும் அப்பாவுக்கும் இருபத்தியெட்டு வயசு வித்தியாசம்.
அது போகட்டும். நான் என்னுடைய பத்தொன்பதாவது வயதில் பட்டாளத்தில் சேர வேண்டுமென்று ஆசைப்பட்டேன். வேலையும் கிடைத்தது. பங்காளி தான் சொன்னான், அங்கே மீசை மட்டும் தான் முறுக்காக வைத்துக்கொள்ள முடியுமாம். மற்றபடி அதிகாரிகளுக்கு குனிந்து கொடுத்தால் தான் பிழைப்பு ஓடுமாம். இந்த அய்யம்பெருமாளை யார் என்று நினைக்கிறீர்கள்? என் பூட்டனுக்குப் பூட்டன் ராஜா. என் ரத்தம் ஆண்ட ரத்தம். முடியாது என்று சொல்லி வந்து விட்டேன். நிறுத்துங்கள், நீங்கள் அப்படிச் சிரிக்கக் கூடாது.
அதன் பின் என்னுடைய இருபதாவது வயதில் போலீசில் சேர்ந்தேன். அன்றைக்கெல்லாம் கான்ஸ்டபிள் அய்யம்பெருமாள் என்றால் நடுங்குவார்கள். இப்போதைய தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள். தீட்டிய பீச்சுவாவை விட எனது பூட்சுகளின் பளபளப்பு கண்ணைப் பறிக்கும். அதைப் போட்டுக் கொண்டு நடக்கும் போது வரும் டக் டக் சத்தம் இருக்கிறதே… மலம் கட்டிக் கொண்டவனுக்குக் கூட அந்த சத்தத்தைக் கேட்டால் பேதி புடுங்கும். ராயக்கோட்டை ஸ்டேசனில் தான் எனக்கு போஸ்டிங் கிடைத்தது. அது போக்கிரிப் பயல்களுக்கு பேர் போன ஏரியா. அப்போது சீனிவாச அய்யங்கார் தான் அங்கே இன்ஸ்பெக்டராக இருந்தார். கெட்டிக்கார மனுஷன். எவனையும் கை நீட்டி அடித்து தீட்டுப்பட்டுக் கொள்ள மாட்டார். அந்த ஸ்டேசனில் இந்த அய்யம்பெருமாள் தான் எல்லாம்.
இருவத்திரெண்டு வருசம் அந்த ஸ்டேசன்ல தான் சர்வீசு. தப்பு செய்யாதவனைக் கூட ஒத்துக்கிட்டு கைநாட்டுப் போட வைக்கிறதுல நான் கில்லாடின்னு அய்யாவே சொல்லுவாரு. லாடம் கட்றதுன்னா என்னான்னு தெரியுமா தம்பி? துணிமணியெல்லாம் உரிஞ்சிட்டு மர டேபிள் மேலே குப்புறப் படுக்க வைக்கணும். சரியா முட்டாங்காலுக்குப் பின்னேயும் பொடனிலயும் லத்திக் கம்ப வச்சி அழுத்திப் பிடிச்சிக்கிடணும். லாடம் கட்றதுக்குன்னே தனி லத்தி வச்சிருந்தேன். தெனமும் காலைல விளக்கெண்ண போட்டு வெயில்ல வச்சிடுவேன். வெயில் சாய அது நல்லா முறுக்கேறி இருக்கும். சாதா லத்திக் கம்பை விட இது கொஞ்சம் மொத்தமாவும், நீளமாவும் இருக்கும்.
சாயங்காலம் ஆறு மணி தான் சரியான டைம். அஞ்சு நிமிசம் அடி; அஞ்சு நிமிசம் கேப்பு. நமக்கும் ரெஸ்டு வேணுமில்லையா? ரத்தம் வராது.பெருசா வீக்கம் தெரியாது. கோர்ட்டுல சொன்னாலும் எடுபடாது. ஆனா, உள்ளங்கால்ல இருக்கிற நரம்பு மொத்தமும் அப்டியே சிதைஞ்சி போயிரும். அப்பால அவனால வாழ்நாள் முழுக்க நேரா நிற்கவே முடியாது.சப்பாணி தான். இன்னிக்கும் ராயக்கோட்டைக்குப் போனீங்கன்னா வயசான கேசுங்க எதுனாச்சியும் குட்டிச் சுவத்தாண்ட தடுமாறிட்டே போவும். அது கிட்டே போயி அய்யம் பெருமாளுன்னு சொல்லிப் பாருங்க தம்பி.
லாடத்துக்கு ஒத்து வராத கேசுங்களுக்கு வேற வைத்தியம் வச்சிருந்தேன். அது குப்புறப் போட்டு லத்தியால புட்டத்தில அடிக்கிறது. உள்ளே தசையெல்லாம் கூழாகிடும். ஒக்கார முடியாது, மல்லாந்து படுக்கவும் முடியாது, நிண்டு கிட்டே தான் எல்லாம். சாவுற வரைக்கும் நிண்டு கிட்டே தான் பீ பேளணும். என்னோட இருவத்திரெண்டு வருச சர்வீசுல நான் கேட்டதுக்கு இல்லைன்னு எந்த அக்கீஸ்டும் சொன்னதில்லே.எவனைப் புடிச்சாந்தமோ அவந்தான் குத்தவாளி. நிஜத்துல தப்பு செஞ்சவன் மாட்டலைன்னா கூடப் பராவாயில்ல. மாட்டியவன் கதியைப் பாத்தாலே உறக்கத்துல கழியணும். அடுத்த முறை தப்புத் தண்டா செய்யும்போது அய்யம்பெருமாளோட மூஞ்சி கண்ணு முன்னாடி வரணும்.வரும்.
நீங்க படிச்சவரு தானே? ஏன் தப்பு நடக்குதுன்னு சொல்லுங்க பார்க்கலாம். பயம் இல்லாம போனது தான் தப்பு நடக்கக் காரணம்.போலீசோட வேலை தப்பைத் தடுக்கறதில்லை தம்பி. பயத்தை உண்டாக்கறது. பயம் வந்தாலே ஒழுக்கமும் வந்துடும்.பயம் வர வைக்கணும்னா எவனை வேணும்னாலும் அடிக்கலாம். அடிச்சே கொல்லலாம். நல்லவனோ கெட்டவனோ, போலீசுனா எவனா இருந்தாலும் நடுங்கணும். இதை நான் அப்பவும் நம்பினேன், இப்பவும் நம்பறேன், இனியும் நம்புவேன். இதுக்காகவே என்னோட போலீசு வேலையே போனிச்சி. வேலையில்லாதப்பவும் நான் போலீசாவே இருந்தேன். அந்த முறுக்கு தான் என்னை இங்கே கொண்டாந்து அநாதையா போட்டிருக்கு. இருந்தாலும் சொல்றேன், நாங்கெல்லாம் அடிக்கறதுக்காவே பிறப்பெடுத்தவங்க. போலீசு திமிரு எவனுக்கு ரத்தத்துல ஓடுதோ அவந்தான் போலீசாக முடியும்.
வேலை போச்சின்னு சொன்னேன்ல? இருங்க! அந்தக் கதைய சொல்றேன். ராயக்கோட்டைல அப்ப கொஞ்ச நாளா தொடர்ந்து களவு போயிட்டிருந்தது. இது புது ஆளுங்க, எவன்னு தெரியலை; ஸ்டேசனுக்கு ஒழுங்கா மாமூல் தந்திட்டு களவாங்கற பழக்கமான ஆளுங்க கிடையாது. தெரிஞ்ச பயன்னா அரெஸ்டு கணக்கு காட்டலாம், அடிச்சதுல கொஞ்சத்த மீட்டுக் கொடுக்கலாம். எவன்னு தெரியாம யாரைப் பிடிக்க முடியும்?அதான் தொடர்ந்து ராத்திரி ரவுண்ட்ஸ் போக ஆரம்பிச்சோம். ஒரு மாசம், பகல்லயும் டூட்டி பாத்துட்டு ராத்திரியும் ஊரைச் சுத்தி வந்திட்டு, சுத்தமா கண்ணுல தூக்கமில்லே. உடம்பே சூடேறிப் போனிச்சி. அது கூட பரவால்ல! மேலதிரிகாரிங்க கூப்பிட்டு கெட்ட வார்த்தைலயே திட்றான். பிடிச்சே ஆவனும், எவனையாச்சும் பிடிச்சி நிப்பாட்டியாகணும்.
எவனாச்சியும் ஆப்புடுவானான்னு கண்ணுல வெறியோட அலைஞ்சி திரிஞ்சோம். ஒருத்தனும் சிக்கலை. ஒரு மாசம் இப்படியே போச்சி. அப்ப ராயக்கோட்டைல வாரா வாரம் மாட்டுச்சந்தை நடக்கும். அந்த மைதானத்துக்குப் பக்கம் தான் எனக்கு டூட்டி.ஒ ரு நாள் ராத்திரி மாட்டுச் சந்தை மைதானத்துக் கொட்டகை பக்கத்துல ஒரு உருவம் சுருண்டு படுத்திருந்தது. எழுப்பி யாருன்னு கேட்டேன், பேந்தப் பேந்த முழிச்சான்.ஸ்டேசனுக்கு கொண்டாந்துட்டேன். ரெண்டு ரவுண்டு அடிய போட்டப்புறம் சூரமங்கலத்தான்னு சொன்னான். மாடு புடிக்க வந்தானாம், கெடைக்கலையாம். வெள்ளனைக்குத் தான் ஊருக்கு வண்டியாம், அதான் அங்கனயே படுத்திருந்தானாம்.
சரிடா! களவானிப் பயல்ல ஒருத்தன்னு ஒத்துக்கோ, கோர்ட்டுல மூணு மாசமோ ஆறு மாசமோ போடுவாங்க. பொறவு வந்து பாத்துக்கலாம்னு படிச்சிப் படிச்சி சொல்லிப் பாத்தேன், கேட்கலை. நீங்களே சொல்லுங்க தம்பி, ஒரு மாசம் தேடியும் ஒருத்தனும் ஆப்புடலைன்னா எவ்வளவு கேவலம். எவனாச்சியும் போலீசுக்கு பயப்படுவானா? இவன உள்ளே போட்டா ஒரிஜினல் களவாணி தைரியமா வெளியே தலைகாட்டுவானில்லே, பிடிக்கலாமில்லே? பக்குவமா சொல்லிப் பார்த்தோம், கேட்கலை. சோறு வாங்கிக் குடுத்து கெஞ்சிப் பார்த்தேன், கேட்கலை. அந்த ஆத்திரத்துல தான் லேசா பொடனில ஒரு தட்டு தட்டுனேன்.சுருண்டு விழுந்தவன் எந்திரிக்கவே இல்ல.
அவன் விதி அவ்வளவு தான்னு எழுதியிருக்கும் போல. நான் என்னா செய்ய முடியும்? போய்ச் சேர்ந்துட்டான். அப்புறம் அது பிரச்சினையாச்சி. தற்கொலைன்னு சொல்லிப் பார்த்தோம். ஜட்ஜைய்யா ஏத்துக்கிடலை.வேலை போச்சி, சம்பளமும் போச்சி.ஊருக்கு வந்திட்டேன். ஆனாலும் கூட வேலை பார்த்த எவனும் என்னை மறக்கல. வேலை போயி இத்தினி வருசமாகியும் மறக்காம மாசா மாசம் வசூலாகிற மாமூல்ல இருந்து ஒரு பங்கைக் கொண்டாந்து கொடுத்துட்டுப் போறாங்க. அன்னிக்கு ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தா டிபார்ட்மெண்டு மானம் போயிருக்கும். ஆனா நான் சொல்லல; அந்த நன்றிய அவங்களும் மறக்கல.
அப்பாரு சம்பாதிச்ச சொத்து, மாசா மாசம் மாமூலு, எனக்கென்ன கவலை? எவன்கிட்டேயும் சாப்பாட்டுக்கு போயி நிக்க வேண்டிய நிலைல நான் இல்லை. போலீசா இருந்து ஊரையே ஆட்டி வச்சவன், கெவருமெண்டு சம்பளம் வாங்கினவன், நான் எதுக்கு இன்னொருத்தன் கிட்டே கைநீட்டி நிக்கணும்? அதான் வேற வேலைக்குப் போகல. அப்புறம் ஏன் இப்படி பிச்சைக்காரக் கோலத்துல மரத்தடில கிடக்கிறேன்னு தானே கேட்க வர்றீங்க? சொல்றேன்.
எனக்கு ரெண்டு பொண்டாட்டியும் பதிமூணு பிள்ளைகளும் இருக்காங்கன்னு சொன்னேனில்ல? நான் ஊர்க்கு வந்த பின்னே ஒவ்வொருத்தருக்கா கலியாணம் நடந்தது. எந்தக் கலியாணத்துக்கும் நான் ஏற்பாடு செய்யலை, கலியாண வேலைகளும் செய்யலை. நான் போலீஸ்காரன், எவங்கிட்டயும் தேவைன்னு போயி நிக்க முடியுமா? என் முன்னே நடுங்கிட்டு நின்ன இந்த ஊர்க்காரப் பயலுவ முன்னாடி நான் போய் நிக்கவா? முடியாதுன்னு சொல்லிட்டேன். எல்லாம் என் பெஞ்சாதிங்க தான் பாத்துக்கிட்டாங்க. கல்யாண நாளுக்கு பட்டை சந்தனமெல்லாம் பூசிக்கிட்டு மண்டப வாசல்லே சேர் போட்டு உக்காந்து கிட்டா போதாதா? இப்படியே ஒரு பத்துப் பதினஞ்சி வருசம் போச்சி.
இந்தப் பதினைஞ்சு வருசத்திலே ரெண்டு பெஞ்சாதிகளும் பூவும் பொட்டுமா போய்ச் சேந்துட்டாளுங்க. நமக்கும் வயசாகி நரம்பு தளர்ந்து ரத்தம் சுண்டிப்போக ஆரம்பிச்சது. அப்பத் தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. என்னதான் முறுக்கு இருந்தாலும், கெவுருதி இருந்தாலும் வயசான காலத்துல நம்ம பாத்துக்கிட ஆளு வேணுமில்லே?கிடைல கெடந்துட்டா யாரு வந்து பீ மூத்திரம் வாரிப் போடுவா? அதான் ரெண்டாம் சம்சாரத்தோட கடேசி மவளை கூடமாட ஒத்தாசையா வச்சிக்கிடலாம்னு முடிவு பண்ணேன். அவளுக்கு தகைஞ்சு வந்த எந்த வரனும் அமைஞ்சிடாம பாத்துக்கிட்டேன். நான் தானே பெத்தேன், என்னை கவனிச்சிக்கிடறது தானே அவளுக்கு முக்கியம், இதுல எந்தத் தப்பும் இல்லைன்னு எனக்குத் தெரியும். ஆனா என் மவனுவளுக்குப் புரியலை.
இப்படித்தான் ஆறு மாசம் முன்னே அவளப் பார்த்திட்டுப் போன பையன் வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடுதாசி போட்டேன். இதே மாதிரி தான் அதுக்கு முன்னே நாலைஞ்சி வரனை நிப்பாட்டி இருக்கேன். ஆனா, இந்தப் பையன் வீட்டுக்காரவுங்க கடுதாசியோட வீட்டுக்கு வந்துட்டாங்க. மூத்த மவனுக்கு அதில இருக்கறது என்னோட கையெழுத்து தான்னு தெரிஞ்சி போச்சி. நான் பார்க்க வளந்த பய, அன்னிய வரைக்கும் என் முன்னே நேரா நிக்க பயந்த பய. ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசத் தெரியாதவனுக்கு எங்கேருந்து தான் அப்படி ஒரு கோவம் வந்திச்சின்னு தெரியலை. துருப்பிடிச்ச பழைய பம்பு ஸ்டவ்வ எடுத்தி அடிச்சிட்டான்.
நான் எத்தனையோ பேர அடிச்சிருக்கேன். எத்தனையோ பேர் என்கிட்டே கதறியிருக்காங்க. ஆனா வலின்னா என்னான்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சது. தோள் பட்டை நொறுங்கிடிச்சி; கால்ல கூட எலும்பு முறிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். வேற எங்கேயெல்லாம் அடி விழுந்திச்சின்னு எனக்கு சொல்லத் தெரியல. எல்லா இடத்திலேயும் வலிக்கிற மாதிரியும் இருக்கு, வலிக்காத மாதிரியும் இருக்கு. எழுந்து நிக்க முடியலை, நகர முடியலை, உடம்பை அசைக்கக் கூட முடியல. ஒரு மாசம் அப்படியே புழக்கடைலயே கிடந்தேன்.திங்கிறது, பேள்றது, மோள்றது எல்லாம் அங்கேயே தான். தரையோட தரையா கெடந்ததுல முதுகுல புண் விழுந்து புழு பூத்திருச்சி. அதுக்கு மேல என்னை வீட்ல வச்சிக்க முடியாதுன்னு இங்கே இழுத்துட்டு வந்து போட்டுட்டாங்க. அதிலேர்ந்து இப்ப அஞ்சி மாசமா இதோ இந்த மரத்தோட மேடை தான் நம்ம ஜாகை.
இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ தெரியல. இந்தக் கட்டை சாய்ஞ்சா காரியம் பண்ண ஆளில்லே, பஞ்சாயத்துக்காரன் தான் வந்து அள்ளிட்டுப் போவணும். ஆனா இந்த நிலைமைக்காக நான் வருத்தப்படலை.கூனிக் குறுகிப்போக மாட்டேன். என் மீசைய பாத்தீங்கள்ல? அதான் நான். இந்த அய்யம் பெருமாள் மண்ணு பாக்க தலை வணங்க மாட்டான். இந்த தெருவே அதிர நடந்து போயிருக்கேன். என்னோட பூட்சு சத்தம் கேட்டு நடுங்கின பயலெல்லாம் இப்ப எச்சில் இலை மாதிரி அசிங்கமா பாக்கறான். அதான் அழுவையா வருது.
ஏதோ உங்கள்ட்ட சொல்லணும்னு தோணிச்சு, சொல்லிட்டேன். நான் செய்ததுல ஏதும் குத்தம் சொல்றா மாதிரி இருக்கா தம்பி?
அந்த மனிதர் சொல்லி முடித்து விட்டு என் முகத்தையே பார்த்தார். பின் மிக நீளமாக ஆயாசமான ஒரு பெருமூச்சை விட்டார். ஒரு இயலாத கோணத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த அந்த மரத்தினடியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு மேடையில் கிடந்தார். கடந்த சில மாதங்களாகவே இதே இடத்தில் இதே கோணத்தில் இப்படியே தான் கிடக்கிறார். அந்தப் பூங்காவில் காலை நேர நடைப்பயிற்சிக்கு வரும் எவரும் அந்த இடத்தைக் கடக்கும்போது ஒரு கெட்ட வீச்சத்தை உணர்வார்கள். அது அவரிடமிருந்து தான் வந்து கொண்டிருந்தது. பேச்சில் அவரிடம் தொனித்த அந்தத் திமிரை அவரது தோற்றத்தில் காண முடியாது. கெச்சலாய், கசக்கிப் போட்ட கந்தல் துணி போல் கிடந்தது அவருக்கே கட்டுப்படாத அவரது உடல்.கடந்து செல்லும் எல்லோருடைய முகத்தையும் ஏதோ சொல்ல வருவது போல் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டேயிருப்பார்.
தொய்ந்து போயிருந்த அவரது உடலில் இருந்து வெள்ளை நிற புழுக்கள் நெளிந்து வெளியேறியவாறே இருந்தன. அந்த உடலுக்குள் இன்னும் இயங்கிக் கொண்டிருந்த அசிங்கம் பிடித்த மனதின் அழுக்குப் படிந்த எண்ணங்களின் நாற்றம் தாங்காமல் அவை தப்பியோட முயற்சிப்பதைப் போலவே இருந்தது. உடலை விட்டு வெளியேறும் புழுக்களெல்லாம் வெப்பம் தாளாமல் மரத்தின் வேர் அருகே சென்றடைந்ததும் தானாகச் செத்து வீழ்ந்து கொண்டிருந்தன. செத்த புழுக்கள் உரமாவதாலோ என்னவோ மரம் உற்சாகமாய் அசைவது போல் தோன்றியது. நடைப்பயிற்சிக்குப் பின் நான் அமர்ந்து ஓய்வெடுக்கும் வழக்கமான மேடை எதிர்புறத்தில் தான் இருக்கிறது; இன்றைக்கு ஏதோவொரு உந்துதலில் தான் இங்கே அமர்ந்தேன். கேட்க வேண்டிய தேவையேதும் இன்றி அவர் முகத்தைப் பார்த்ததும் தானாகவே சொல்லத் துவங்கி விட்டார்.
தன் வாழ்க்கையின் நியாயங்கள் என்று அவரே கருதியவற்றை லட்சக்கணக்கான முறை தனக்குள்ளேயே திரும்பத் திரும்ப சொல்லி ஒத்திகை பார்த்திருக்க வேண்டும். என்னிடம் இந்தக் கதைகளையெல்லாம் சொன்னது எனது ஒப்புதலை எதிர்பார்த்தல்ல, அது ஒரு அனிச்சை செயலாகத் இருக்கக் கூடும். அல்லது, என்னிடம் இருந்து வந்திருக்கக் கூடிய ஒரு சிறிய தலையசைப்பையாவது அவர் எதிர்பார்த்திருக்கலாம். அது அவருக்கு இந்தக் கட்டத்தில் ஓரு தேறுதலை வழங்கியிருக்கலாம். அப்படியொரு தேறுதல் கிடைக்காத ஏமாற்றம் அவரது முகத்தில் தொனித்தது. பேசி முடிந்த பின் நீண்ட நேரம் எனது முகத்தை இமை தட்டாமல் உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். எதிர்பார்த்தது அதற்கு மேல் கிடைக்காது என்பது உறுதியான பின் வேறெங்கோ வெறித்துப் பார்க்கத் துவங்கினார்.
காலை மணி ஏழு. தினசரி அலுவல்களின் நீண்ட வரிசை மூளையில் ஒரு சிறு அணிவகுப்பு நடத்தத் துவங்கவே, அவரிடம் ஒன்றும் சொல்லாமல் எழுந்தேன். பூங்காவை விட்டு வெளியேறினேன்.
“”ஏய் கிழவி, ரோட்டுல கடை போடக் கூடாதுன்னு ஒனக்கு எத்தினி வாட்டி சொல்றது” பூங்காவின் வெளியே சாலையோற பூக்காரக் கிழவியிடம் வீரம் காட்டிக் கொண்டிருந்தார் யாரோ ஒரு அய்யம்பெருமாள். எண்ணெ ய் காணாத நரைத்த தலையை சங்கடமாய்ச் சொறிந்து கொண்டே கருத்துச் சுருங்கிய முகத்தில் எந்தச் சலனமும் காட்டாமல் ஒரு இருபது ரூபாய்த் தாளை மடக்கி நீட்டினாள் அந்தக் கிழவி.
பூங்காவிலிருந்த நூற்றாண்டுகளைக் கடந்த அந்த மரம் காற்றில் மெல்லச் சடசடத்துத் தலையசைக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு அது காத்திருக்கும், நம்பிக்கையோடு.
-மாடசாமி. vinavu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக