திங்கள், 17 ஜூன், 2013

கருணா பேட்டி: புலிகள் அத்தனை சக இயக்கத்தினரையும் கொன்று குவித்தனர்.

Karunaஇலங்கையில் ‘துக்ளக் - 10
வந்து பார்த்து விட்டு, விமர்சனம் செய்யுங்கள்! – முன்னாள் புலித் தளபதி கருணா பேட்டி
இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி, செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள், எஸ்.ஜே.இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் அங்கு தாங்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் இதுவரை பகிர்ந்து கொண்டார்கள். இந்த இதழில் இலங்கை மீள் குடியேற்றத் துறை அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், ‘துக்ளக் இதழுக்கு அளித்த பேட்டியுடன் இக்கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.
அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் என்றால், தமிழகத்தில் பலருக்கு இவரைத் தெரியாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா என்றால்தான் பலருக்கும் தெரியும். கருணா என்பது புலிகள் இயக்கம் அவருக்குச் சூட்டிய பெயர். புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிச் சரணடைந்த அவருக்கு, இலங்கை அரசு, நியமன எம்.பி. பதவியையும், இணை அமைச்சர் பொறுப்பையும் வழங்கியுள்ளது. கருணா என்ற பெயரை தற்போது யாரும் அங்கு பயன்படுத்துவதில்லை.

  • கேள்வி: இன்று அரசாங்கத்துடன் இணக்கமாகப் போகும் நீங்கள், ஆரம்பத்தில் ஏன் ஆயுதம் தூக்கினீர்கள்?
பதில்: தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய 1980 காலகட்டத்தில் அதற்கான தேவை உண்மையிலேயே இருந்தது. எங்களிடம் இளமையும், வேகமும் இருந்தது. அதனால்தான் நாங்கள் ஆயுதம் தூக்கினோம். அப்போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எங்களுக்கு முழு ஆதரவு தந்தார். உண்மையிலேயே இந்திரா காந்தியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.
  • கேள்வி: பின்னர் ஏன் விலகினீர்கள்?
பதில்: இந்திய அரசும், தமிழக அரசும் அப்போது எங்களுக்குப் பெரிதும் ஆதரவாக இருந்தன. ஆனால், விடுதலைப் புலிகள் அதற்குரிய பதில் மரியாதையைச் செலுத்தத் தவறி விட்டனர். ராஜீவ் காந்தி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தபோது, அதைப் புலிகள் இயக்கம் ஏற்றிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. மாறாக, இந்திய ராணுவம் இலங்கை வந்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டோம். மற்ற எல்லா தமிழ்ப் போராளிகள் இயக்கங்களும் இந்திய அரசின் ஆலோசனையை ஏற்று, வடகிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்புக்குச் சம்மதித்து, இந்திய ராணுவத்தின் பக்கம் இருந்தன. ‘தனி நாடு வேண்டாம்; தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் பெற்றுத் தருகிறோம்’ என்ற இந்தியாவின் அருமையான திட்டத்தை, அன்று நாங்கள் மட்டும் எதிர்த்து, இந்திய ராணுவத்துடனேயே போரிட்டோம். இதனால் வடகிழக்கு இணைந்த மாகாணசபை என்ற அரிய வாய்ப்பு கைநழுவிப் போயிற்று. அந்தத் தவறு போதாது என்று புலிகள், பழிவாங்கும் நடவடிக்கையாக ராஜீவ் காந்தியைக் கொலை செய்தனர். அந்த நிமிடம் முதல் இந்திய அரசு, இலங்கை விவகாரத்தைப் பொறுத்து பின்வாங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு ஸ்காண்டிநேவியன் நாடுகளின் பேச்சுவார்த்தையில் சமஷ்டி முறைத் தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆஸ்லோவில் (நார்வேயின் தலைநகரம்) வைத்து ஒரு உடன்பாடும் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். ஒரு மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையை முறியடித்து, ‘ஓயாத அலைகள்’ போர் நடவடிக்கை மூலம் புலிகள் ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற நேரத்தில், அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதனால், அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க அந்தப் பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். Karuna23
மேற்கத்திய நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முடிவானது. ஆஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர். ஆனால், பிரபாகரன் இதை ஏற்கவில்லை. ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டீர்கள்’ என்று எங்களைக் கடிந்து கொண்டார். அங்குதான் எனக்கும், பிரபாகரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு பெரிதாக வெடித்தது.
அப்போதும் நான் அவருக்கு எடுத்துச் சொன்னேன். ‘இதுவரை போராடியது வேறு. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் உலக நாடுகள் எடுத்துள்ள முடிவு, நமக்கு இனிச் சாதகமாக இருக்காது. அந்தச் சம்பவத்தை ஒட்டி, உலக நாடுகள் அத்தனையும் பயங்கரவாத தடுப்பில் ஒருமித்த முனைப்புக் காட்டத் துவங்கி விட்டன. அதற்குப் புலிகள் இயக்கமும் விதிவிலக்கல்ல. 26 நாடுகள் ஏற்கெனவே இயக்கத்திற்குத் தடை விதித்து விட்டன. சமரசத்தின் மூலம் சமஷ்டி அதிகாரத்தைப் பெறுவதே நல்லது’ என்று வாதிட்டேன். ஆனால், பிரபாகரன் கேட்கவில்லை. எங்களது ஆஸ்லோ பேச்சுவார்த்தையை இந்தியாவும் மேற்பார்வையிட்டது. நம்பியார் என்ற அதிகாரியை அதற்காக நியமித்திருந்தார்கள். இந்தியாவும் அந்தத் தீர்வை வரவேற்றது. ஆனால், பிரபாகரன் மட்டும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் நான் வெளியேறினேன். பிரபாகரனின் பிடிவாதத்தால் தொடர்ந்து அழிவுகளும், முள்ளிவாய்க்கால் சம்பவமும் நடந்து முடிந்து விட்டன.
  • கேள்வி: ஆக, இனி இலங்கையில் தனிநாடு என்பது சாத்தியமில்லையா?
பதில்: சிறந்த மாகாண சபை ஆட்சி முறையைக் கொண்டு, இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக உலகில் வாழ்ந்து காட்டுகிறது. அதை ஏன் இலங்கையிலும் செய்து காட்ட முடியாது? தனி நாடு என்ற கோரிக்கையை இனி உலகம் ஏற்காது. அதற்கு எந்த நாடும் ஆதரவும் தெரிவிக்காது. இதைத் தமிழக மக்களும், இளைஞர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது ஆதரவு மற்றும் எழுச்சியை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். இங்குள்ள தமிழர்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது நல்ல விஷயம்தான். அதைச் சரியான முறையில் செய்து நல்ல ஒரு அதிகாரப் பகிர்வைத் தமிழர்கள் பெறுவதற்கும், நல்ல அபிவிருத்திப் பணிகளை பெறுவதற்குமான முயற்சியாக மாற்றினால், தமிழகத்தில் ஒரு மாகாண சபையின் கீழ் எப்படி தமிழர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களோ, அதே போல் இங்குள்ள தமிழர்களும் வாழ முடியும்.
  • கேள்வி: இலங்கை அரசு மீது வைக்கப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இலங்கை அரசை மட்டும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் பயனில்லை. எந்த நாட்டு அரசாங்கமாக இருந்தாலும், தனது நாட்டில் நடக்கும் ஒரு சச்சரவை, ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்கும் அதிகாரமும், கடமையும், உரிமையும் அந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. இந்தியா உட்பட எந்த நாடாக இருந்தாலும் தனி நாடு கேட்கும் இயக்கங்களை ஒழிக்கவே முயற்சி எடுக்கும். இலங்கையில், அவ்வாறு ஒழிக்கும் முன்பு பல சமரசத் திட்டங்களுக்கு வாய்ப்பு தந்தார்கள். ஆனால், புலிகள் எதற்கும் உடன்படவில்லை. எனவே, எந்தச் சமரசத்திற்கும் தயாராக இல்லாத புலிகள் இயக்கம்தான் அழிவுகளுக்குப் பொறுப்பாக முடியும்.
நீங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கெல்லாம் போய் வந்ததாகச் சொன்னீர்கள். நீங்களே நேரடியாகப் பார்த்திருப்பீர்கள். மக்கள் இப்போதுதான் உயிர் பயம் நீங்கி நிம்மதியாக வாழத் துவங்கியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஏறக்குறைய பழைய நிலை வந்து விட்டது. வடக்கு மாகாணத்தில் மறுகட்டுமானப் பணிகளும், மீள் குடியமர்த்தும் பணிகளும் நடந்து வருகின்றன. 30 ஆண்டுகால அழிவை இரண்டு, மூன்று வருடங்களில் சரி செய்துவிட முடியாது. கண்ணி வெடிகள் உள்ளிட்ட ஆயுதக் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியே இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும், எனது மீள்குடியேற்ற அமைச்சகம் மிகத் துரிதமாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எல்.எல்.ஆர்.சி. என்ற கமிட்டி, போர் அழிவுகளைப் பற்றி எல்லாப் பகுதிகளுக்கும் சென்று விசாரித்து, ஆராய்ந்து ஒரு வெளிப்படையான அறிக்கையைத் தந்திருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் பட்டியல், காணாமல் போனவர்கள் பட்டியல், அழிவுகளின் மதிப்பீடு, போர்க்குற்றங்கள் என எல்லாத் தளங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அந்தக் கமிட்டி, தனது கண்டுபிடிப்புகளையும், பரிந்துரைகளையும் தந்துள்ளது. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் இப்போது திட்டமிட்டு வருகிறோம். தற்போது போர் முடிந்து விட்டது. பிடிபட்ட புலிகள் கூட மன்னிக்கப்பட்டு அல்லது குறைந்த தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய எல்லோரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். சண்டைக்குச் சண்டை, பழிக்குப் பழி என்று கிளம்பினால் குரோதம்தான் அதிகமாகும். இதை இலங்கை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இங்குள்ள மக்களும் கோபத்தை மறந்து, ராணுவத்திடம் நெருங்கி, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் துவங்கி விட்டனர்.
இந்த நிலையில், இந்திய மக்கள் புதிய போராட்டங்களைத் துவக்கி, குழப்பங்களைKaruna-20 உருவாக்குவது நல்லதல்ல. அது இங்குள்ள மக்களைத்தான் மேலும் பாதிக்கும். போரில் அழிந்தது தமிழர்கள் மட்டுமில்லை. முஸ்லிம்களும் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளனர். ராணுவ இலக்கு அல்லாத எத்தனையோ பொதுஇடங்களில் புலிகள் வெடித்த குண்டுகள் மூலம், எவ்வளவோ அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களின் இறப்புகளுக்கு நியாயம் கேட்கப் போனால், சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தங்கள் அழிவுகளுக்குப் பதில் கேட்பார்கள்.
தமிழ் மக்களுக்கு, பழையபடி வீடுகள் கட்டிக் கொடுத்து, அவர்களுக்குப் பொருளாதார வழி வகைகள் செய்து, தங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் கொண்டு செலுத்தவும், அடுத்த தலைமுறையைச் சிறந்த முறையில் உருவாக்கவும் உதவுவதுதான் இன்றைய அவசரத் தேவை. இலங்கை அரசாங்கம் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வட பகுதிக்கு ஒதுக்கி உள்ளது. இதில் 10 சதவிகிதம் கூட சிங்கள மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படவில்லை. விரைவில் வட மாகாண சபைத் தேர்தலும் வரவிருக்கிறது. எனவே, தற்போது நிலவும் அமைதி தொடர்வதற்கும், தமிழர் சம உரிமையும், அதிகாரமும் பெற உதவுவது மட்டுமே இன்றைய தேவை என்பதை இந்திய மக்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
  • கேள்வி: புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இன்னமும் தமிழீழ கோரிக்கையைக் கைவிடவில்லையே?
பதில்: புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தே பழைய நினைப்பில் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. இங்கு வந்து பார்க்க வேண்டும். போருக்குப் பிறகு, பல புலம் பெயர்ந்த தமிழர்கள் இங்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் இங்கேயே தொழில் செய்யவும் துவங்கியுள்ளனர். இதை நான் வரவேற்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக நுட்பமான அறிவு பலத்துடன், ஏராளமான பண பலத்துடன் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் இங்கு திரும்பி வரவேண்டும். இங்கு தொழில் செய்து, இங்குள்ள தமிழர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். வசதியோடு இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், ஆளுக்கு ஒரு வீடு கட்டித் தர முன் வந்தாலே, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவ வேண்டிய தேவையே இராது. அவ்வளவு பேர் வசதியாக வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் இங்குள்ள தமிழர்களுக்கு உதவ நினைத்தால், பொருளாதார ரீதியில் உதவ வேண்டும். அவர்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதால், ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக, இங்குள்ள மக்கள் மீது குரோதம்தான் வளரும்.
  • கேள்வி: போர் முடிந்து நான்காண்டுகள் ஆகியும் இன்னும் ராணுவ நெருக்கடி தொடர்ந்து இருப்பதான குற்றச்சாட்டு பற்றி?
பதில் : தேசியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் வட, கிழக்குப் பகுதிகளில் மட்டுமில்லாமல், இலங்கையின் பல பகுதிகளிலும் ராணுவம் இருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் கூட சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ராணுவம் இருக்கிறது. நாகப்பட்டினத்தில் கப்பல் படைத் தளம் இருக்கிறது. இது மக்களின் உரிமையைப் பறிப்பதாகாது. இங்கு படிப்படியாக ராணுவம் விலக்கப்படும். இந்த நான்கு வருடத்தில் எவ்வளவோ விலக்கப்பட்டிருக்கிறது. பல முகாம்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்திலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்திலும் மீண்டும் ‘ஈழ’ கோஷம் எழுவதால், எந்த அரசாங்கத்துக்கும் சந்தேகம் எழவே செய்யும். மீண்டும் புலிகள் வந்து விடுவார்களோ, ஆயுதப் போராட்டம் உருவாகி விடுமோ என்ற ஐயப்பாடு கிளம்பவே செய்யும். எனவேதான் மீண்டும் ‘தமிழீழம்’, ‘பதிலடி’ என்றெல்லாம் குரல் எழுப்ப வேண்டாமென்று தமிழக மக்களையும், புலம் பெயர்ந்த தமிழர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அதனால் இங்குள்ள தமிழர்களின் சுதந்திரம் தான் பாதிக்கப்படும்.
  • கேள்வி: நீங்கள் வெளியே வராமல் இருந்திருந்தால், ஈழம் கிடைத்திருக்கும் என்று பேசப்படுகிறது. நீங்கள்தான் வெளியே வந்து, புலிகளின் ரகசியங்களை எல்லாம் அம்பலப்படுத்தி விட்டீர்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே?
பதில்: ‘காட்டிக் கொடுத்தேன், ரகசியங்களை அம்பலப்படுத்தினேன்’ என்பதெல்லாமKaruna22் பொய்க் கதை. நான் இயக்கத்தில் இருந்தபோது, பல ராணுவ நடவடிக்கைகளை முறியடித்து பல பெரிய வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறேன் என்பது உண்மை. குறிப்பாக, ஆனையிரவைக் கைப்பற்றியதெல்லாம் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆபரேஷன் என்று கருதப்பட்ட அந்த ராணுவ நடவடிக்கைகளை முறியடித்ததில் நான் பெரும் பங்கு வகித்தேன். ஆனால், நான் வெளியே வராமல் போயிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நானும், எனது ஆதரவாளர்களும் வெளியேறாமல் இருந்திருந்தால், இன்னும் பல ஆண்டுகள் சண்டை வேண்டுமானால் நீடித்திருக்கலாம். ஆனால், ஈழம் என்றுமே கிடைத்திருக்காது.
ஆரம்பத்தில் இயக்கத்தில் மக்கள் விரும்பிச் சேர்ந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், கட்டாயமாக ஆள் பிடிக்க ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. எந்த ஒரு போராட்டமும் வெல்வதற்கு மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால், எந்தக் குடும்பமும் தன் கணவனோ, மகனோ, தந்தையோ போரில் ஈடுபட்டுச் சாவதை விரும்பாது. ஆனால், புலிகள் அதைக் கட்டாயப்படுத்தினார்கள். ஆண்கள் குறைந்தபோது, பெண்களையும் ராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்தார்கள். இதனால் மக்கள் விரக்தியடைந்தனர். அந்த நேரத்தில்தான் நார்வே, சமரசத்திற்கு வந்தது. நான் பிரபாகரனிடம் பேசினேன். ‘இதுவரை ராணுவ வெற்றிகளைத்தான் பெற்று வருகிறோம். இதை அரசியல் வெற்றியாக மாற்றி கொள்ள நாம் முன் வரவேண்டும். ராணுவ வெற்றியை வைத்து நாம் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் மேலும் பிற நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு மீண்டும் போருக்கு வரும். திரும்பவும் சண்டைதான் போட வேண்டும். என்றைக்கும் நிம்மதியோ, விடுதலையோ இருக்கப் போவதில்லை. எனவே, அரசியல் தீர்வுக்கு போவோம்’ என்று சொன்னேன். ஆனால், அவர் ‘தனி நாடு’ என்ற சிந்தனையை விட்டு வெளியே வரவில்லை.
இங்கு பல்கலைக் கழகப் படிப்புக்குத் தேர்வாவது மிகப் பெரிய விஷயம். நான் அதற்குத் தேர்வானேன். ஆனால், அங்கு சேருவதற்கு முன்பாக, புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து விட்டேன். சேரும்போது என் எண்ணம் என்னவாக இருந்தது என்றால், ‘ஒரு நான்கைந்து ஆண்டுகள் போராடினால் தமிழீழம் கிடைத்து விடும். அதன் பிறகு படிப்பு, வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்பதுதான். ஆனால் 25 ஆண்டுகள் போராடியும் தீர்வோ, வெற்றியோ கிடைக்கவில்லை என்ற போது, சலிப்புதான் வந்தது. மக்களும் புலிகளுக்கு எதிராக மாறத் துவங்கினார்கள். உலக நாடுகளும் புலிகளுக்கு எதிராக மாறின. இந்தியாவும் புலிகள் ஆதரவை விலக்கிக் கொண்டது. முதல் சந்ததி முடிந்து, இரண்டாவது சந்ததி உயிர்களை இழக்கத் துவங்கியாகி விட்டது. புலிகள் மூன்றாவது சந்ததியையும் அழிக்காமல் விட மாட்டார்கள் என்று தோன்றியது. தனிநாடு சாத்தியமில்லை என்பதைப் புரிந்து, தனது வெற்றிகளை அரசியல் வெற்றியாக மாற்ற புலிகள் உடன்படாததால்தான் நான் வெளியேறினேன்.
கொஞ்சம் விமர்சித்தாலும் அவரைத் துரோகி என்று முத்திரை குத்துவதோடு, அவரைக் கொலை செய்யவும் புலிகள் தயங்கவில்லை. ஏராளமான தமிழ்த் தலைவர்களை அந்த இயக்கம் கொன்று போட்டது. திம்பு பேச்சுவார்த்தையில் இந்திய அரசு, ‘எல்லா தமிழ்த் தலைவர்களும் இணைந்து செயல்படுங்கள். பெரிய வெற்றி கிடைக்கும்’ என்று அறிவுரை கூறியது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத புலிகள், அத்தனை சக இயக்கத்தினரையும் கொன்று குவித்தனர். சகோதரப் போராளிகளைக் கொன்று குவிப்பதை, புலிகளின் தளபதிகள் பலரே ஏற்கவில்லை. மக்கள் மத்தியிலும் அது புலிகளின் பெயரைக் கெடுத்தது. பிரபாகரனுக்குக் கிடைத்த குறுகிய கால வெற்றிகள் அவரை மதி மயக்கி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். நான் யதார்த்த நிலையை உணர்ந்து வெளியேறினேன். இன்று சிங்கள மக்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்களோ, அதே சுதந்திரத்துடன் தமிழர்களும் வாழ வேண்டும் என்பது மட்டும்தான் எனது இலக்காக உள்ளது. தனிநாடு என்று பேச ஆரம்பித்தால், அது இங்குள்ள மக்களுக்கு நலன் பயக்காது.
  • கேள்வி: இலங்கை ராணுவம், தமிழர் நிலங்களைக் கைப்பற்றி வைத்துக் கொண்டதாக ஒரு பெரிய குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
பதில்: இலங்கை காணிச் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலங்களின் விபரம் அரசு ஏஜென்டிடம் (கலெக்டர்) உள்ளது. அதை மீறி, ஒரு துண்டு நிலத்தைக் கூட யாரும் யாருக்கும் கொடுத்து விட முடியாது. அப்படிப் பிடுங்கிக் கொடுத்தாலும் கூட, அவர் நீதிமன்றத்திற்குச் சென்று ஜெயித்து விட முடியும். எனவே, நிலங்கள் பறிபோவதாகச் சொல்வது பொய். கண்ணி வெடிகள் இருக்கும் பகுதி இன்னமும் ராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அங்கு பணிகள் முடிந்த பிறகுதான், நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும். அதே போல், ராணுவ முகாம்கள், தொழிற்திட்டங்கள், புதிய சாலை வசதிகள், மின் திட்டங்கள் போன்ற அபிவிருத்தி மற்றும் நாட்டுத் நலத் திட்டங்களுக்காக ஒரு அரசாங்கம், மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முடியும். அதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது. உதாரணத்திற்கு, கிழக்கு மாகாணத்தில் சாம்பூர் பகுதியில் மூதூர் என்ற இடம் உள்ளது. அங்கு இந்திய அரசாங்கம், இலங்கைக்காக நிலக்கரி அனல் மின் திட்டத்தைச் செய்து தரவுள்ளது. இதற்காக அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத் தேவை பூர்த்தியாவதுடன், ஆயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கவுள்ளது. இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்துவது உலகெங்கும் நடப்பதுதானே?
  • கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு போலீஸ் அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசால் ஏற்கப்படும் வாய்ப்புள்ளதா?
பதில்: இந்திய மாடலில் மாகாண சபை அதிகாரம் என்று பேசும்போது, இங்கும் இந்தக் கோரிக்கை எழுகிறது. இந்தியா ஒரு பெரிய நாடு. அங்குள்ள மாகாண அமைப்பை இங்கு அப்படியே காப்பி அடிக்க முடியாது. இன்று சென்னையில் புறநகரையும் சேர்த்தால், இரண்டு கோடி அளவுக்கு மக்கள் தொகை இருக்கும் என்கிறார்கள். ஆனால், இலங்கையின் மொத்த மக்கள் தொகையே இரண்டு கோடிதான். இங்கே இந்தியாவைப் போல மாகாணத்திற்கு போலீஸ் அதிகாரம் தர இயலாது. அமெரிக்காவில் மேயரிடம் போலீஸ் அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் அது போல் முனிஸிபாலிட்டி அமைப்புகள் கேட்டால் போலீஸ் அதிகாரத்தைத் தர முடியுமா? அதுபோன்ற நிலைதான் இங்கே.
இலங்கை சிறிய நாடு. குறைந்த மக்கள் தொகை. அதனால் மாகாண சபைக்கு போலீஸ் அதிகாரம் வழங்கி விட முடியாது. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு போலீஸ் அதிகாரம் கொடுத்தால், இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் கொடுக்க வேண்டி வரும். அது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய சிக்கல்களை ஏற்படுத்தலாம். கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். எனவே, அது இங்கு சாத்தியப்படாது. அதற்கு என்ன செய்யலாம்? தமிழர்களை போலீஸ் படையில் இணைப்பது, தமிழ் அதிகாரிகளை தமிழர் பகுதிகளில் பணி செய்ய அனுமதிப்பது போன்ற விஷயங்கள் ஒரு நல்ல தீர்வாக அமையும். அதைதான் இப்போது செய்து வருகிறோம். கிழக்கு மாகாணத்திற்கு ஸீனியர் டி.ஐ.ஜி. என்றால் சங்கர் என்ற தமிழர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு டி.ஐ.ஜி. என்றால் இந்திரன். அவரும் தமிழர்.
தமிழர்கள் போலீஸில் சேரும் வகையில் கிழக்கு மாகாணத்தில் போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயங்குகிறது. இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் அதில் சேர்ந்துள்ளனர். ராணுவத்திலும் தமிழர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாறுதல்களை நாம் வரவேற்று, அதைக் கூடுதலாக்க முயற்சித்து, இந்த தேசத்தில் எல்லோரும் சேர்ந்து அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ, உலகத் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கு இடையூறு செய்யக்கூடாது.Karuna24
ஆரம்பத்தில் ராணுவத்தைப் பார்த்து மக்கள் பயந்தார்கள். இப்போது அந்தப் பயமில்லாமல் வாழ துவங்கி விட்டார்கள். இலங்கையில் ஒட்டு மொத்தமாகத் தமிழ்ப் பேசும் மக்கள் என்று பார்த்தால் 28 சதவிகிதம் பேர் இருக்கலாம். மீதி 72 சதவிகிதம் பேர் சிங்கள மக்கள்தான். 72 சதவிகித சிங்கள மக்களை மீறி, சுமார் 28 சதவிகித தமிழ் மக்களுக்கு எந்த அரசாங்கமும் விசேஷ சலுகைகளை அள்ளி வீசி விடாது. இந்த யதார்த்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், படிப்படியாக தமிழருக்கு உரிய உரிமையைப் பெற்று விடலாம். அதற்குச் சாத்திய கூறுகள் நிறைய உள்ளன. தமிழ் மக்களால் ஒரு தமிழ் ஜனாதிபதியைக் கொண்டு வர முடியாது. ஆனால், ஒரு ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் தமிழர்கள் பங்கு வகிக்க முடியும். அவர்களை எந்தக் கட்சியாலும் உதாசீனம் செய்ய முடியாது. அந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.
  • கேள்வி: இலங்கை அரசு மீது வைக்கப்படும் இன அழிப்புக் குற்றச்சாட்டு குறித்து?
பதில் : இன அழிப்பு என்பது சுத்தப் பொய். சரணடைந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ராணுவம் அழித்து விடவில்லை. மீள் குடியேற்றம் செய்துள்ளது. 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை. வழக்குகளைச் சந்தித்து விட்டு, சுதந்திரமாக வாழ்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் முக்கியப் பிரமுகர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இன்று நன்றாக இருக்கிறார்கள். சூசையின் குடும்பத்தினர் நன்கு வாழ்கிறார்கள்.3 லட்சம் மக்களை, முள்ளிவாய்க்கால் பகுதியில் 20 ஆயிரம் புலிகள் பிடித்து வைத்திருந்தார்கள். அரசாங்கம் மிக நிதானமாகத்தான் சண்டை பிடித்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் பேரையும் கொன்று விடவில்லை. முடிந்தளவு மக்களை வெளியேற்றிய பிறகே, புலிகளை அழித்தார்கள். புலிகளிலும் 10 ஆயிரம் பேருக்கு மேல் சரணடைந்தனர். கடைசி நேரத்தில் கூட சரணடையுமாறு புலிகளிடம் வேண்டுகோள் வைத்தார் அதிபர் ராஜபக்ஷ. ஆனால், அவர்கள் கேட்கவேயில்லை. மக்களின் தீர்வுக்காகத்தான் யுத்தம் - மக்களையே தீர்த்துக் கட்டுவதற்கு யுத்தமல்ல என்பதைப் பிரபாகரன் புரிந்து கொள்ளத் தவறி விட்டார். தமிழனின் வீரத்தைச் சொல்வதற்காக, ‘தமிழன் வாளோடு பிறந்தவன் என்று சொன்னதெல்லாம் போதும். இனி இங்கு பிறக்கும் தமிழன் ‘வாழ்வோடு பிறக்கட்டும்.
  • கேள்வி: தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
பதில்: நீங்கள் எனது கருத்துக்களையோ, அரசாங்கக் கருத்துக்களையோ அப்படியே நம்பத் தேவை யில்லை. அதே நேரம் இணையத்தில் பார்ப்பதையும், புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு சிலர் சொல்வதையும் நம்பாதீர்கள். இலங்கை நாடானது சுற்றுலாவுக்காக எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுள்ள நாடு. சுற்றுலாப் பயணியாக வாருங்கள். இலங்கை முழுக்கச் சுற்றுங்கள். உண்மை நிலையை நீங்களே கண்டறிந்து பின் ஒரு முடிவை எடுங்கள். மக்களாகட்டும், மாணவர்களாகட்டும், அரசியல் தலைவர்களாகட்டும் யாரும் இங்கு வரலாம். மக்களைச் சந்தித்துப் பேசலாம். ஒருமுறை வந்து பார்த்து விட்டுப் பிறகு விமர்சனம் செய்யுங்கள். குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றோர் இங்கு வந்து, இங்குள்ள தமிழ் மக்களையும், தமிழ்த் தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என்று அன்போடு அழைப்பு விடுக்கிறேன். இங்குள்ள மக்களும் சந்தோஷப்படுவார்கள். அங்குள்ள மக்களுக்கும் உண்மை நிலை தெரியவரும்.
(முற்றும்)

கருத்துகள் இல்லை: