எஸ்.ஆர்.எம். குழுமத்தில் வருமானவரித் துறையினர் நடத்திய அதிரடி
சோதனையில் ரூ.6 3/4 கோடி ரொக்க பணமும், ஏராளமான ஆவணங்களும் சிக்கி உள்ளன. இதுதொடர்பாக சென்னை வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு (தலைமையகம்) இணை இயக்குனர் சஞ்சய் வி.தேஷ்முக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- என்ஜினீயரிங், மருத்துவம், பல் மருத்துவம், மேலாண்மை கல்வி
நிறுவனங்களை நடத்தி வரும் மற்றும் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்துறையில் ஈடுபட்டு வரும் முன்னணி குழுமத்தில் (எஸ்.ஆர்.எம். குழுமம்) சென்னை வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 18-ந்தேதி அன்று தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகளின்போது, ரூ.6 3/4 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நன்கொடை வாங்கிய ஆவணங்கள், செலவு அதிகரித்து காட்டப்பட்ட தஸ்தாவேஜுகள், அறக்கட்டளை பணத்தை வேறு இனங்களுக்கு திருப்பிவிடப்பட்ட ஆவணங்கள் சிக்கின. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை, திருச்சி, டெல்லி, காசியாபாத், சோனேபேட் (அரியானா), பெங்களூரு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். வருமானவரி புலனாய்வு கூடுதல் இயக்குனர் எஸ்.முரளி, துணை இயக்குனர் ஆர்.சம்பத் குமார் ஆகியோர் தங்கள் குழுவினருடன் இந்த சோதனை நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தினர்.
இவ்வாறு சஞ்சய் தேஷ்முக் கூறி உள்ளார்.
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பச்சமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
வருமானவரித் துறையினர் எங்கள் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தியது உண்மைதான். ஆனால், அவர்கள் கைப்பற்றியதாக சொல்லப்படும் ரூ.6 3/4 கோடி பணம், எஸ்.ஆர்.எம். நிறுவனத் தலைவர் வீட்டிலோ அல்லது அலுவலகங்களிலோ, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திலோ, கல்வி நிறுவனங்களிலோ கைப்பற்றப்படவில்லை.
அந்த தொகை வேந்தர் பிலிம்ஸ் படக்கம்பெனியில் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அந்த சினிமா நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த நிறுவனம் எனது கட்சிக்காரர்கள் என் பெயரில் நடத்தும் நிறுவனம் ஆகும். எனவே, கைப்பற்றப்பட்ட தொகைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு டி.ஆர்.பச்சமுத்து கூறினார்.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக