புதன், 19 ஜூன், 2013

வருசத்துக்கு நாமக்கல் பள்ளிகளில் வசூலிக்கிற தொகை ரூ.1,205 கோடி

மாநிலத்திலேயே முதலிடங்களைப் பிடிக்கும் நாமக்கல் மாவட்டப் பள்ளிகளில், கடந்த 13-ம் தேதியன்று திடீரென அதிரடி சோதனை!10, +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் சான்றிதழைக்கூட மாணவர்கள் வாங்கிமுடிக் காத நிலையில், இந்த ரெய்டால் ஒரே பரபரப்பு! நாமக்கல் சின்னகரையில் உள்ள கிரீன் பார்க், காவெட்டிப்பட்டியில் உள்ள குறிஞ்சி, பரமத்தி ஒன்றியத்தில் உள்ள எஸ்.கே.வி ஆகிய  தனியார் பள்ளிகளில்தான், அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 45 வருமானவரித் துறை அதிகாரிகள், மூன்று குழுக்களாகப் பிரிந்து ரெய்டில் இறங்கினர். முன்கூட்டியே எந்தத் தகவலும் கசியாதபடி, அதிரடியாகவே, மூன்று பள்ளிகளுக்குள்ளும் புகுந்தார்கள், ரெய்டு அதிகாரிகள். நுழைந்தவுடனே, உள்ளே இருந்த எல்லாருடைய செல்ஃபோன்களையும் ஆஃப் செய்ய வைத்தனர். தரைவழித் தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்துவிட்டனர். ரெய்டு முடியும்வரை, உள்ளே யிருந்து ஒருவரையும் வெளியே விடவில்லை. அவர் களுக்குத் தெரியாமல், அங்கு எதுவும் நடக்காதபடி பார்த்துக்கொண்டனர்.


உள்ளே மட்டுமின்றி, சில அதிகாரிகள், பெற்றோர் களைப் போல, பள்ளி வாசலில் நின்றுகொண்டனர். உள்ளேயிருந்து பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு வெளியே வரும் பெற்றோர்களிடம், அப்பாவியைப்போல, "எவ்வளவு கட்டினீங்க?' எனக் கேட்க... வெளியூரில் இருந்துவந்த பெற்றோர்களும், வெள்ளந்தியாக, ‘’ இவ்வளவு பணம் கட்டினோம்’’ என பதில் கூறியிருக்கிறார்கள். அதை அப்படியே பதிவு செய்துகொண்டது, வெளியில் இருந்த டீம்.

விவகாரம் தெரியாமல் உள்ளே சென்றுவிட்ட பெற்றோர்களை விரட்டி யடிக்காத குறையாக, வெளியில் அனுப்பியிருக் கிறார்கள், தனியார் பள்ளிக்காரர்கள். உதாரணத்துக்கு, திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் வைத்துள்ள ஒருவர், 10-ம் வகுப்பில் 494 மதிப்பெண் வாங்கிய தன் மகளைச் சேர்ப்பதற்காக, வந்திருந்தார். ரூ.65 ஆயிரம் கல்விக்கட்டணம் கட்டிய அவர், விடுதிக் கட்டணமாக ரூ.1.1 லட்சம் கட்டவேண்டும். ஆனால், அதற்குள் சோதனைக் குழுவினர் வந்துவிடவே, அவரை பள்ளியில் இருந்து தள்ளிக்கொண்டு போனதைப்போல வெளி யில் அனுப்பினார்கள். வளாகத்தை விட்டு வெளியே வந்தவர், "ஊருக்கும் போகமுடி யாது; நமக்கு வெளியில் தங்கிப் பழக்கமும் இல்லை' எனப் புலம்பியபடி, வேறுவழியில் லாமல் அன்று நாமக்கல்லிலேயே தங்கினார். இவரைப்போல, எத்தனையோ பெற்றோர் களுக்கு, அன்று இதுதான் கதி! 

பணம் கட்ட வரும் பெற்றோர்களிடம் மொத்தக் கட்டணத்தையும் பள்ளி நிர்வாகம் முதலிலேயே வசூலிப்பதில்லை. அடையாள மாக, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம்வரை வாங்கிக்கொண்டு, ஒரு சீட்டு தருகிறார்கள். அதில், இன்னொரு தேதி குறித்து, அன்றைக்கு வந்து கட்டணத்தைச் செலுத்துமாறு செய்கிறார்கள். கட்டணம் செலுத்தியதற்கு ஆதாரமாக, ஒரு துண்டுச் சீட்டில் மட்டுமே எழுதித்தருகிறார்கள். இதுபோன்ற துண்டுச் சீட்டுகள் சிலவற்றையும், வெளியில் இருந்த ரெய்டு டீம் சேகரித்துக்கொண்டது.

ஒருவழியாக, சோதனைகளை முடித்துக் கொண்டு, இரவு 10 மணி அளவில், வருமான வரித் துறை அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி னார்கள்.

விவகாரத்தின் பின்னணியைத் துருவினோம்... கொந்தளிக்கிறார்கள், விவரம் அறிந்த கல்வி ஆர்வலர்கள்.

""முட்டைக்கும் லாரிக்கும் பேர்வாங்குற இந்த மாவட்டத்துக்கு, +2 தேர்வுல முதல் இடங்கள் வந்தபோது, எங்களுக்கெல்லாம் சந்தோசமாதான் இருந்தது. இந்த தனியார் பிராய்லர் கோழி’ பள்ளிக்கூடங்களோட உள்சங்கதி தெரிஞ்சதும், ..ச்சீ..னு ஆகிடுச்சு. பிராய்லர் கோழியை வளக்கிறதப்போல, இந்த பள்ளிக்கூடங்கள்ல, +2 பாடத்தையே +1-ல இருந்தே நடத்துறாங்க. அதாவது, +2 பாடத் தையே 2 வருசமும் நடத்துறாங்க...''’என்று தொடக்கத்திலேயே அதிர்ச்சி தந்தவர்கள், தொடர்ந்து விவரிக்கிறார்கள்.

""இந்தப் பள்ளிக்கூடங்கள்ல, சாதாரணமா ஒரு மாணவனுக்கு படிப்புக்கட்டணம், விடுதிக்கட்டணம் உள்பட சுமார் ரூ.3 லட்சம் வாங்குறாங்க. இது குறைஞ்சபட்சம்தான். பள்ளிக்கூடத்துக்கு ஏற்ப வித்தியாசம் இருக்கும். சினிமாத் துறையைப் போல, முதல் இடம் வாங்குற பள்ளிக்கூடத்துக்காக வருசாவருசம் அப்படியொரு கூட்டம் மொய்க்கும். தொலை தூரமா இருந்தாலும், பல மாவட்டங்கள்ல இருந்தும் இங்க வந்து பிள்ளைகளைச் சேக்கிறாங்க. பெரும்பாலும், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் பிள்ளைங்க தான். ’இந்தப் பசங்களை எம்.பி.பி.எஸ். சீட் வாங்குற அளவுக்குப் படிக்க வைக்கிறது, இவங்க வேலை. "50 லட்சம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கப்போறீங்களா, 6 லட்சம் கட்டி மார்க் வாங்கியே மருத்துவப் படிப்புல சேர்க்கிறீங்களா'னு இவங்க சொல்றத, இங்க வர்ற எல்லா பெற்றோரும் வேதவாக்கைப் போல உறுதியா நம்புறாங்க. இந்த மாதிரி பள்ளிக்கூடங்கள்ல பெருங்கூட்டமா மாணவர்கள் சேர்றதுக்கு இதுதான் காரணம்''’என்று தொழில் ரகசியத்தைப் போட்டு உடைக்கிறார்கள், கல்வி ஆர்வலர்கள். 

சோதனை நடத்திய வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவரைப் பிடித்தோம். புள்ளிவிவரமாக அவர் சொன்னதும், நமக்கு தலை சுற்றியது. ""இப்போ சோதனை நடத்தப்பட்ட பள்ளிகளைப்போல 15 பள்ளிகள் மாவட்ட அளவில் முன்னிலையில் இருக்கு. இந்த  பள்ளிகள்லயும் மொத்தம் 12 ஆயிரத்து 48 (12,048) மாணவர்கள் +2 படிக்கிறாங்க. ஒரு மாணவருக்கு வருசத்துக்கு ரூ.3 லட்சம் கட்டணம்னா, இந்த 15 பள்ளிகள்லயும் சேர்த்து, மொத்தம் ரூ.361.44 கோடி வசூலிக்கிறாங்க. அதாவது, சராசரியா ஒரு பள்ளியில  ரூ.24 கோடி வசூல் ஆகுது. இது போன்ற பிராய்லர் பள்ளிகள், இந்த மாவட்டத்துல 50 ஆவது இருக்கும். எல்லா பள்ளிகளையும் சேர்த்து கணக்கிட்டா, வருசத்துக்கு இவங்க வசூலிக்கிற தொகை ரூ.1,205 கோடி''’என்றவர்...

""இது குறைந்தபட்சக் கணக்குதான். 10-ம் வகுப்பு மார்க்கைப் பொறுத்தும், கட்டணம் நிர்ணயிப்பதும் நடக்கிறது. 490-ஐ விட அதிகம் பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் என்றால், 485-490 வாங்கியவர்களுக்கு ரூ.4 லட்சம் என்றெல்லாம் வசூலித்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு முன்னிலை பெற்ற ஒரு பள்ளியில், தேர்வு முடிவு வந்தபிறகு, கட்டணத்தை ரூ.1.5 லட்சத்தில் இருந்து 1.75 லட்சம் ஆக உயர்த்தியிருக்கிறார்கள். இன்னொரு பள்ளியிலோ, கட்டணம் வசூலித்து முடித்த பிறகு, எல்லா மாணவர்களிடமும் ரூ.20 ஆயிரம் கூடுதலாக வசூலித்துள்ளனர். வசூலாகும் பணத்தை எண்ணிப் பார்ப்பதற்காக வங்கிப் பணியாளர்கள் பலரும் லீவ் எடுத்துக்கொண்டு வருவார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. வசூல் பணத்தை, வேறு ஏதோ சரக்கை எடுத்துச் செல்வதைப்போல லாரிகளில் எடுத்துக்கொண்டு போவார்களாம்''’என்று சொல்லி, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தார் அந்த வருமான வரித் துறை அதிகாரி.

நீதித்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி, கடந்த வாரம் தன் வாரிசை நாமக்கல் பள்ளி ஒன்றில் சேர்க்கப்போனபோது, பேரம் முடிந்து கடைசியாக, ரூ.1.7 லட்சத்துக்குக் குறையாது என்று கறாராக சொல்லிவிட்டார்களாம், சம்பந்தப்பட்ட பள்ளியில். இப்படி ஒரு சேதி, அதிரடி சோதனையின் பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறது.

பிரச்சினை குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் கண்ணன் நம்மிடம்,“ ""மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு     கட்டண நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிராய்லர் வகை பள்ளிகள் அதை ஒரு பொருட் டாகவே மதிப்பது இல்லை. கோவை மண்டலத் திலேயே நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிகமான தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அதிலும் இந்த மாதிரிப் பள்ளிகள் கணிச மானவை. 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு, அவர்களையே மீண்டும் அதிக மதிப்பெண் பெறவைப்பதாக இவர்கள் கூறுவது ஒரு சாதனையா? குருட்டு மனப்பாடம் மட்டுமே செய்யவைப்பதால், இங்கு படிக்கும் மாணவர்களால், ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனத் தேர்வுகளில் வெற்றிபெற முடிவதில்லை என்பது பெருமையா? அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 25 சதவீதம் ஏழை மாணவர் களையும் சேர்ப்பதில்லை.

அதே சமயம், திட்டமிட்டு, அரசுப் பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை வலிந்து சேர்த்துக்கொண்டு, அந்த மாணவன் தொடர்ந்து அரசுப் பள்ளியிலேயே படித்து அதிக மதிப்பெண் பெறுவதைத் தடுக்கும் வேலையிலும் ஈடுபடுகிறார்கள். சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்றுள்ளதாக மோசடியாகவும் விளம்பரம் செய்கிறார்கள். இனியாவது, அரசு இதில் தலையிட்டு உறுதியான நட வடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார், ஆவேசத் துடன்.

தனியார் பள்ளிகள் தரப்பில் பேசியவர்கள், ""இது வழக்கமான நடவடிக்கைதான். சட்ட விரோதமாகவோ மாணவர் விரோதமாகவோ நாங்கள் எதுவும் செய்யவில்லை. கல்வியை சேவையாகத்தான் செய்து வருகிறோம்''’என்று ஒரேயடியாக மறுக்கிறார்கள்.

யார் என்ன சத்தியம் செய்தாலும், அரசியல் சாசனம் கூறும் கல்வி பெறும் உரிமையை யார், எந்த வகையில் தடுத்தாலும், அதைக் கடுமையாகத் தண்டிக்கத்தானே வேண்டும்!

-சே.த. இளங்கோவன்
thanks Nakkeeran

கருத்துகள் இல்லை: