
காரைக்குடி:சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த
சுதர்சனநாச்சியப்பன் (காங்.,),
மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை
அமைச்சராகி உள்ளார். நிதி அமைச்சர் சிதம்பரத்தையும் மீறி, இவர்
அமைச்சரானதற்கு, டில்லி குழுவின் ரகசிய அறிக்கையே காரணம்.சிவகங்கை
ஏரியூரை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், சிவகங்கை தொகுதி எம்.பி., -இருமுறை
ராஜ்யசபா எம்.பி., என, தொடர்ந்து பதவியில் உள்ளார். தற்போது ராஜ்யசபாவில்,
கட்சி கொறடா பதவியும் ஒட்டிக்கொண்டது. பெரிதும் எதிர்பார்த்த, மத்திய
அமைச்சர் பதவி மட்டும், இதுவரை நழுவி வந்தது. ஏற்கனவே, சிவகங்கை தொகுதியை
சேர்ந்த சிதம்பரம், நிதி அமைச்சராக உள்ளார். ஒரே மாவட்டத்தில், இரு அதிகார
மையங்களை, காங்., மேலிடமே தவிர்த்தது. இருமுறை அமைச்சரவை விரிவாக்கத்தில்,
இவர் பெயர் பரிசீலனையில் இருந்தும், நிராகரிக்கப்பட்டது. மேலும், மாநில
காங்., தலைவர் பதவியும், பல முறை நழுவிப் போனது. இதற்கான காரணம், சிதம்பர
ரகசியமாகவே இருந்தது. தற்போது தடைகளை மீறி, அமைச்சர் பதவி கிடைத்ததற்கு, பல
காரணங்கள் கூறப்படுகின்றன.அவற்றில் முக்கியமான ஒன்று அவருக்கு இலங்கை விவகாரங்களில் நல்ல புரிந்துணர்வு உண்டு என்பதுமாகும்
கடந்த
நான்கு மாதங்களுக்கு முன், கட்சியின் துணைத் தலைவர் ராகுலால் அனுப்பப்பட்ட
குழு, கட்சிக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில், ரகசிய சுற்றுப்பயணம்
செய்தது. உறுப்பினர்கள், அடித்தட்டு மக்களை சந்தித்து குறைகளை
கேட்டறிந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி வந்த குழு, சங்கராபுரம்
பகுதியில், விறகு அள்ளிக் கொண்டிருந்த, காங்., கரை வேட்டி கட்டிய
முதியவரிடம் விசாரித்தனர். அவர், ""தீபாவளியின் போது ஊராட்சித் தலைவர்
சார்பில், வேட்டி, காலண்டர் தருவர்,'' என, கூறியுள்ளார். அவர் வீட்டில்
காலண்டரை பார்த்தபோது, சோனியா, ராகுல் படம் சிறியதாகவும், அமைச்சர்
சிதம்பரத்தின் படம் பெரியதாகவும் இருந்தது.
சிவகங்கையில்,
கட்சி உறுப்பினர்களிடம், ""நாங்கள் நிருபர்கள்' எனக்கூறி, விபரங்களை
கேட்டனர். அதில், "பல ஆண்டுகளாக உறுப்பினர் கார்டு வழங்கவில்லை; அமைச்சர்
சிதம்பரத்தை பார்ப்பதே அரிது. எங்களை மதிப்பது இல்லை. தொகுதியில் வங்கிகள்
திறப்பு தவிர, வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடக்கவில்லை' என குற்றச்சாட்டுகளை
அடுக்கினர்.சமீபத்தில், தமிழகத்தில் நடந்த மாணவர் காங்., தேர்தலில், வாசன்,
சிதம்பரம் மகன் கார்த்தியின் அணியினர் மோதலில் ஈடுபட்டு, முறைகேடுகள்
அரங்கேறின. இதை அடிப்படையாகக் கொண்டு, "தங்கள் கோஷ்டியை வளர்க்கவே, தமிழக
தலைவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சோனியா, ராகுலை
முன்னிறுத்துவதில்லை' என்ற அறிக்கை, ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கோஷ்டி
அரசியலை ஒழிக்க, அதற்கு அப்பாற்பட்டவர்களுக்கு பதவி கொடுக்கும்
எண்ணத்தில், ராகுல் திட்டமிட்டார். இதன்படி, கோஷ்டி சேராத திருநாவுக்கரசர்,
இளைஞர் காங்., முன்னாள் தலைவர் டாக்டர் செல்லக்குமார், நாமக்கல்
ஜெயக்குமார் ஆகியோருக்கு, அகில இந்திய செயலாளர் பதவி வழங்கப்பட்டது.கோஷ்டி
கானம் பாடாத, சுதர்சன நாச்சியப்பனுக்கு அடித்தது, இணை அமைச்சர் யோகம்.
சிவகங்கை தொகுதியில்,1999 ல், த.மா.கா., சார்பில் போட்டியிட்ட, சிதம்பரத்தை
தோற்கடித்தவர் என்பதும், பதவி கிடைக்க பக்கபலமாக இருந்தது. தற்போது,
சிதம்பரம் அணியினரால் புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகள் சிலர், சுதர்சன
நாச்சியப்பனை தேடிச் சென்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக