வெள்ளி, 21 ஜூன், 2013

ஏசுவின் மகிமை கருணையிலா கடப்பாரையிலா ?

கடவுளின் கோபம் ஆக ஊழல், பாசிசம் எனும் இரண்டு பக்கங்கள்தான் கடவுள் எனும் நாணயத்தின் ஒளியை பரவச் செய்கின்றன
தினசரிகளின் வெள்ளிக்கிழமை மலர்கள் ஆன்மீகத்திற்கும், ஜோசியத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டிருப்பவை. நேரம் கிடைக்கும் போது இவற்றை கொஞ்சம் சிந்தனையுடன் புரட்டினால் உங்கள் இறை நம்பிக்கை தள்ளாடுவது உறுதி. இத்தகைய ஆன்மீக மலர்களில் இந்து மதத்திற்கு 90 சதவீதமும், மீதியில் இஸ்லாம், கிறித்தவத்திற்கும் இட ஒதுக்கீடு செய்யப்படும். இதையே நாத்திகத்திற்கும் பின்பற்றினால், ஏன் இந்து மதத்தை மட்டும் அதிகம் விமரிசிக்கிறீர்கள் என்று கேட்பார்கள் நமது அம்பிகள். ஆனால் கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்பதில் மத அடையாளங்களுக்கு முக்கியமில்லை. சாரத்தில் எல்லா மதங்களும் இறைவனின் பெயரால் மக்களை தவறாக வழிநடத்துகின்றன.
தினமணி, வெள்ளி மணியில் வி ரூஃபஸ் என்பவர் கடவுளின் சொல் என்ற பகுதியில் ஒரு கதையைச் சொல்கிறார்.
 கடவுளின் கோபம்
பாவங்கள் எப்படிப் பெருகுகின்றன? “தங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் மன்னர்கள் மக்களை வாட்டி வதைத்தும் கொடுமைகள் செய்தும் தங்கள் நெறிகளில் பிறழ்ந்தும் போகின்றபோது பாவங்கள் பெருகுகின்றன.” என்கிறார் ரூஃபஸ். ஒரு மன்னரின் கொடுமைகளுக்கு அவனிடம் மட்டும்தானே பாவம் பெருக வேண்டும், மக்களிடையே பாவங்கள் பெருக வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஏழை பாவம் செய்தால் அதன் விளைவு அவனோடு மட்டும் போகையில் ஒரு ராஜா செய்தால் மட்டும் அவன் பாவங்களை முழுச் சமூகமும் சுமப்பதில் என்ன அறம் உள்ளது?
பரவாயில்லை, இப்படி பாவங்கள் பெருகும் போது இறைவன் சும்மாயிருக்கவில்லை.
உதவி செய்யவே விரும்புகிறான். அதன்படி இறையடியார்களை தேர்வு செய்து அவர்களை இறைவாக்கினர்களாக பதவி உயர்வு கொடுக்கிறான். இறையடியார்களை கடவுளின் ஏஜெண்டுகள் என்றால் இறைவாக்கினரை அந்த ஏஜெண்டுகளின் மெசேஜை சந்தைப்படுத்தும் விளம்பரக் கம்பெனிகளாக அழைக்கலாம். அல்லது இறையடியார்கள் ரிலீசாகப் போகும் திரைப்படம் என்றால் வாக்கினர்களை டீஸர் என்று புரிந்து கொள்ளலாம்.
சரி, இந்த இறைவாக்கினர்களின் பணி என்ன? அவர்கள் பாவம் செய்யும் மன்னனையும், மக்களையும் எச்சரிப்பார்களாம். வேலை வெட்டி இல்லாமல் அந்தப்புரத்தில் குடியிருக்கும் மன்னனையும், ஓடி உழைத்து தேய்ந்து திருவோடாக இருக்கும் மக்களையும் இந்த இறைவாக்கினர்கள் ஒரே மாதிரி எச்சரிப்பதை என்னவென்று சொல்வது? இவ்வளவிற்கும் எந்த நாட்டு மன்ன்னும் மக்களால் ஓட்டு போட்டு தேர்வு செய்யப்படுவதில்லை. அதனால்தான் மன்னராட்சிக்கும், ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சிக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இந்த அறிவு கூட இறைவனுக்கு இல்லை என்றால் என்ன செய்வது? மக்களின் விருப்பு-வெறுப்புக்கு அப்பாற்பட்டு ஆயுத வலிமையால் மன்னனாக இருப்பவன் செய்யும் பாவத்திற்கு அந்த பரிதாபத்திற்குரிய மக்கள் என்ன செய்வார்கள? இல்லை மன்னன் பாவம் செய்தால் மக்கள் அனைவரும் தற்கொலை செய்ய வேண்டுமா?
இயேசுவுக்கு டீஸர் வேலை பார்த்தவர்களில் எலியா என்பவர் முக்கியமானவராம். அவருக்கு என்ன முக்கியத்துவம் என்று தெரியவில்லை. ஒருவேளை ஏசு திரைப்படத்தின் டிரெய்லரை ஹெச் டி தொழில் நுட்பத்தில் ஒளிபரப்பியவராக இருக்குமோ? இஸ்ரயேல் மன்னனாக ஆகாபு ஆட்சி செய்த காலத்தில்தான் இந்த எலியா வாழ்ந்தாராம்.
எலியா
இறைவாக்கினர் எலியா
ஆகாபு தீமைகளோடு ஆட்சி செய்த படியால், சினம் கொண்ட எலியா, “நான் பணிபுரியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை. என் வாக்கினாலன்றி வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாது” என்று சாபம் விடுகிறார். இந்த சாபத்தையும் கொஞ்சம் கட்டுடைத்துப் பார்ப்போம். நமது புராணங்களில் உள்ள பார்ப்பன முனிவர்களானாலும் சரி, இஸ்ரவேலின் இறைவாக்கினர்களாக இருந்தாலும் சரி இவர்கள் ஏன் மழை பெய்யக் கூடாது என்று மட்டும் சாபம் விடுகிறார்கள்? உங்கள் நாட்டில் இரண்டு மாதத்திற்கு வெயிலே அடிக்காது, வெறும் இருட்டுதான் என்று ஏன் சாபம் இடவில்லை?
இப்படி சாத்தியமில்லாதவற்றை சாபம் விட்டால் சடுதியில் கடவுளின் இடம் காலியாகி ஏஜெண்டுகளுக்கும் கமிஷன் வராது. எல்லா நாடுகளில் ஏதாவது சில காலங்களிலோ இல்லையோ தொடர்ச்சியாக சில ஆண்டுகளோ மழை பெய்யாமல் இருப்பதும், வறட்சி ஏற்படுவதும் வழக்கம். ஆக இயற்கையாக நடக்கும் இந்த மாற்றங்களைத்தான் ஏஜெண்டுகள் தமது அல்லது இறைவனின் பவர் போல காண்பித்து மக்களை மிரட்டுகிறார்கள்.
இயற்கைக்கு மாறானவற்றை ஏன் இவர்கள் கூறவில்லை? பசித்தவன் உண்பான், உண்டால் மலம் கழியும். இவர்களோ பசித்தவனிடம் அவனுக்கு எதுவும் கிடைக்காது என்பதை உறுதி செய்து விட்டு அவன் மலம் கழிக்க மாட்டான் என்று சாபம் விடுவார்கள். மாறாக இதே சாபத்தை மூன்று வேளை முக்குபவனிடம் விடுவார்களா? மாட்டார்கள். தென்னை மரத்திலிருந்து தேங்காய் கீழேதான் விழும், மேலே போகாது என்ற உண்மைகளை சாபமாக மடை மாற்றி விடுவதற்கெல்லாம் ஒரு ஆண்டிப் பண்டாரம் ஆக்ஸ்ஃபோர்டில் படிக்க வேண்டிய அவசியம் இல்லையே?
நாம் கதைக்கு திரும்புவோம். சாபத்தைக் கேட்ட ஆகாபு சினம் கொண்டு எலியாவைக் கொல்லத் திட்டம் தீட்டினான். இதற்கு திட்டமெல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. செக்யூரிட்டியிடம் சொன்னால் சடுதியில் சீவி விடுவார். சரி, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல கடவுள் கதைகளிலும் லாஜிக் பார்க்க கூடாது, விட்டுத் தொலைப்போம்.
ஆண்டவனின் கருணையினால் தப்பிய எலியா பயணம் செய்து யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகே தங்கினாராம். அங்கே ஆண்டவன் காகங்களிடம் உணவு கொடுத்து எலியாவைப் பசியாற்றினாராம். கற்பனை செய்யும் புலவர்கள் கொஞ்சம் காஸ்ட்லியாக யோசிக்கக் கூடாதா? இறகு முளைத்த பெரிய யானை பறந்து வந்து பிரியாணியை சப்ளை செய்தது என்று எழுதினால் என்ன பிரச்சினை வந்து விடும்? ஒரு வேளை பாலைவன ஜோர்டானில் காகங்களைத் தவிர வேறு எதையும் இந்தக் கதை எழுதியவர் பார்க்காதிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
பிறகு அந்த கெரீத்து ஓடை வற்றிப் போனதாம். எலியாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த ஓடை ஏன் வற்றிப் போகவேண்டும்? ஒருவேளை எலியா எதாவது சைடு கேப்பில் பாவம் செய்துவிட்டாரா? அப்படி இருக்காது. ஏற்கனவே எலியா விட்ட சாபத்தில் ஆகாபு ஆளும் பகுதிகளெல்லாம் பஞ்சத்தில் இருக்கும் போது அதில் ஏதோ ஒரு பகுதியாக இந்த ஓடை இருக்கலாம். பாருங்கள், இறையடியார்களுக்கு லாஜிக் மீறல் வந்தால் நாமும் உதவி செய்வோம் என்பதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வற்றிப் போன ஓடையில் கவலையுடன் இருந்த எலியாவிடம் ஆண்டவர், “நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்” என்று கூறினாராம். கைம்பெண் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது எனும் கொடிய வழக்கம் ஏசுவின் காலத்தில் இருந்திருப்பதால்தான் இங்கே கருணைப் பிச்சைக்குரியவராக ஒரு கைம்பெண் வருகிறார்.
கடவுளின் கருணை
கடவுளின் கருணை
எலியாவும் அங்கே போய் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த அந்த ஏழைப் பெண்ணிடம் தண்ணீரும், அப்பமும் கேட்டிருக்கிறார். தண்ணீர் தருவதற்கு தயாராக இருந்த அந்தப் பெண், “உம் ஆண்டவர் மேல் ஆணை. என்னிடம் அப்பம் ஏதும் இல்லை. பானையில் சிறிதளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே உள்ளன. இதோ இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு நானும் என் மகளும் உண்போம். பிறகு உண்பதற்கு வழியில்லாததால் நாங்கள் சாகத்தான் வேண்டும் ” என்று நொந்து போய் சொன்னாராம்.
இங்கே ஒன்றைக் கவனியுங்கள். அந்த பெண் உம் ஆண்டவர் என்றுதான் சொல்லுகிறார், எம் அல்ல. இதிலிருந்தே ஏஜெண்டுகள் தொல்லை தாங்காமல்தான் பாமர மக்கள் கடவுளுக்கு வாழ்வு கொடுக்கிறார்களே அன்றி சொந்த முறையில் அல்ல.
எனினும் எலியா அந்தப் பெண்ணிடம் தனக்கு அப்பம் கொண்டு வந்தால் அவளது ஆப்பச்சட்டியில் மாவு தீரவே தீராது, எண்ணையும் குறையாது என்று ஆசை காட்டுகிறார். அந்தப் பெண்ணும் அப்படியே செய்தபடியால் அடுத்த மழை பெய்யும் வரை அப்பத்திற்கு குறைவில்லாமல் அவரது குடும்பம் உண்டு வாழ்ந்ததாம்.
சரி, அப்பச் சட்டிக்குள், அப்ப மாவுதான் இருக்க வேண்டுமா? பர்கரோ, இறால் பிரியாணியோ, இல்லை சிக்கன் செட்டி நாடோ வைப்பதில் கடவுளுக்கு என்ன செலவு? கொடுத்ததெல்லாம் கொடுத்தவன் கொஞ்சம் காஸ்ட்டிலியான செட்டி நாட்டு ஓட்டலிலிருந்து கொடுக்காமல் அம்மா உணவகத்திலிருந்தா பார்சல் வாங்கி வர வேண்டும்?
சரி, இந்தக் கதையில் இருந்து பெறும் நீதி என்ன?
“என் வார்த்தைக்கு அஞ்சி நடப்போரை நான் கண்ணோக்கிப் பார்ப்பேன் (எசா 66:2) என்ற உறுதிமொழியின்படி மனம் மாறிய அக்கைம்பெண்ணுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதம் எலியா வழியாகக் கிடைத்தது. அதனால் பஞ்சத்திலிருந்து தப்பித்தனர். ஆனால் எலியாவின் பேச்சை ஆண்டவரின் வாக்காக ஏற்க மறுத்து மனம் திருந்தாத ஆகாபு அரசனும் மக்களும் பஞ்சத்தில் வாடினர். கவலையில் மூழ்கினர்.”
இந்த கைம்பெண்ணைப் போன்றவர்கள்தானே ஆகாபு ஆட்சி செய்த நாட்டில் வாழ்ந்த மக்களும். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள், ரூஃபஸ் அவர்களே? ஒரு மன்னனோடு தனிப்பட்ட வாய்க்கால் வரப்பு, வட்டி, குட்டி பிரச்சினை இருந்தால் அதை வைத்து ஒரு சமூகத்தை தண்டிப்பது எப்படி சரியாகும்?
மேலும் எனக்கு ஒரு அப்பம் கொடுத்தால் உழைக்காமல் உங்கள் வீட்டுப் பானையில் அப்ப மாவு கிடைத்துக் கொண்டிருக்கும் என்று சொல்லுவதை எந்த உழைப்பாளி கேட்பான்? எலியா கேட்டால் பஞ்சை பராரிகள் கூட ஏதாவது தங்களால் இயன்ற தானம் கொடுப்பார்கள். ஆனால் அந்த தானத்தை வைத்து அவர்களை தனவந்தன் ஆக்குவேன் என்று எம்எல்எம் ஆட்கள் போல ஏமாற்றுவது பெரும் மோசடியில்லையா?
முக்கியமாக இந்தக் கதையின் நீதி என்னவென்றால் “என் வார்த்தைக்கு அஞ்சி நடப்போரை நான் கண்ணோக்கி பார்ப்பேன், இல்லையேல் காலால் மிதிப்பேன்” என்பதுதான். இதைத்தான் கடப்பாரை மகிமை என்கிறோம். கடவுள் தன்னிடமுள்ள கருணையினால் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கவில்லை. ஒரு தேர்ந்த பாசிஸ்டைப் போல கடப்பாரையைக் கொண்டு அச்சுறுத்தியே பக்தியை ஏற்கச் செய்கிறான். அப்படி தன் வார்த்தையைக் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்று பொய்யான வார்த்தைகள் சொல்லி ஊழல்படுத்தவும் செய்கிறான்.
ஆக ஊழல், பாசிசம் எனும் இரண்டு பக்கங்கள்தான் கடவுள் எனும் நாணயத்தின் ஒளியை பரவச் செய்கின்றன. கண்ணைக் குருடாக்கும் இந்த ஒளியினை மதியால் அழிப்பதுதான் வாழ்க்கைப் பிரச்சினைகளை புரிந்து கொண்டு போராடுவதற்கு வழி ஏற்படுத்தும். பக்தர்கள் யோசிப்பார்களா? vinavu.com

கருத்துகள் இல்லை: