புதன், 19 ஜூன், 2013

அந்த 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடலாம்: தேர்தல் ஆணையம் !

தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் போது அவையின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்ததாக கூறி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வி.சி. சந்திரகுமார், பார்த்த சாரதி, டி.முருகேசன், நல்லதம்பி, செந்தில்குமார், அருள்செல்வன் ஆகியோர் சட்டசபையில் இருந்து 6 மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 6 பேரும் மேல்-சபை தேர்தலில் ஓட்டு போட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய கோரி 6 எம்.எ.ல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து சய்யக் கோரி 6 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாரயாணன் ஆகியோர் விசாரித்து வருகிற 3-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர். இதற்கிடையே மேல்-சபை தேர்தலில் வாக்களிக்க தங்களை அனுமதிக்க கோரி 6 எம்.எல்.ஏ.க்களும் துணை மனு ஒன்றையும் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.


இந்த துணை மனு தொடர்பாக வருகிற 24-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு சட்டசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த நிலையில் மேல்-சபை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை சட்டப் பேரவை செயலகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சஸ்பெண்டு செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதனால் அவர்களுக்கு வாக்குரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவது எப்படி என்பது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

சட்டசபையில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தால் அவர்கள் அவை நடவடிக்கைகளில் மட்டுமே பங்கேற்க முடியாது. சட்டசபைக்கு வெளியே நடைபெறும் நிகழ்வுகள் அனைத்திலும் பங்கேற்க முடியும். இதுகுறித்த வழக்குகளில் பல மாநில ஐகோர்ட்டுகளும் தெளிவாக தீர்ப்பினை வழங்கியுள்ளன.

எனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் சட்டசபைக்கு வெளியே நடைபெறும் வாக்கெடுப்பில் பங்கேற்க தகுதி படைத்தவர்கள். எனவே அவர்களுக்கு மேல் சபை தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு. வாக்களிப்பதில் எந்த வித சிக்கலும் இல்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: