செவ்வாய், 18 ஜூன், 2013

சொத்து குவிப்பு அறிக்கையால் அதிர்ந்தார் ஜெ.,:செல்ல பாண்டியன் பதவி பறிப்பு

தூத்துக்குடி:பல கோடி சொத்துக்களை வாங்கிக் குவித்த புகாரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த செல்ல பாண்டியன், நீக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்ட, அ.தி.மு.க., செயலராக இருந்தவர் செல்ல பாண்டியன்; தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். குவிந்த புகார்: "கட்சியினரை அரவணைத்து செல்வது கிடையாது. தனக்கு வேண்டிய ஒன்றிய செயலர்கள், சிலருடன் சேர்ந்து, மாவட்டத்தில் அரசியல் செய்கிறார். சமீபத்தில், கூட்டுறவு சங்க தேர்தல்களில், தி.மு.க.,வினர் பல பேர், நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு, செல்ல பாண்டியனே காரணம். எனவே, இவர் மாவட்ட செயலராக தொடர்ந்தால், லோக்சபா தேர்தலில், தூத்துக்குடியில் அ.தி.மு.க., வெற்றி பெறுவது கடினம்' என, புகார்கள், கட்சி தலைமைக்கு பறந்தன. கவர்னர் அனுமதி: செல்ல பாண்டியன், 2011 ஜூலை முதல், 2013, மார்ச் 31 வரை, தூத்துக்குடியில், பலகோடி ரூபாய் மதிப்பு வீடு, கட்டடங்களை வாங்கிக் குவித்ததாக, ஆதாரங்களுடன் புகார்கள் சென்றன. சிவகாசி அம்மன்கோவில்பட்டியில், ஒரு தீப்பெட்டி ஆலையை, செல்ல பாண்டியன், விலைக்கு வாங்கியதாகவும் புகார் சென்றது. சொத்து குவிப்பு தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு தொடர, ஒரு அமைப்பினருக்கு, கவர்னர் அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.



பதவி பறிப்பு:

முதல்வர் உத்தரவுப்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார், உளவுத்துறையினர் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்தனர். அதை பார்த்த முதல்வர், அதிர்ந்து போனதாக, கட்சியினர் கூறுகின்றனர்.தொழிலாளர் நலத்துறை மாநாட்டிற்காக, ஜூன் 4ல், ஜெனிவா சென்ற செல்ல பாண்டியன், உடனடியாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். கட்சியினரை அரவணைத்து செல்லாத புகாருடன், சொத்துக் குவிப்பு ஆதாரங்களும் சிக்கியதால், அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் பதவிகள் பறிக்கப்பட்டன.


"கொடுத்தார்... எடுத்தார்...':

இதுகுறித்து, செல்ல பாண்டியனிடம், கேட்டபோது, ""எனக்கு, அமைச்சர் பதவியை, முதல்வர் கொடுத்தார். அவரே, பதவியை விட்டு நீக்கியுள்ளார். என்றென்றும், அம்மாவுக்கு, விசுவாசமாக இருப்பேன்,'' என்றார்.


சண்முகநாதன் "சென்டிமென்ட்!':

தூத்துக்குடி மாவட்ட, அ.தி.மு.க., செயலராகவும், சுற்றுலாத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ள, சண்முகநாதன், ஸ்ரீவைகுண்டம், எம்.எல்.ஏ., ஆக உள்ளார். கிளை, ஒன்றிய செயலர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.சட்டசபை, லோக்சபா தேர்தல் நடப்பதற்கு முன், இவரை, மாவட்ட செயலர் ஆக்கினால், அத்தேர்தல்களில், மாவட்டத்தில் கட்சி அமோக வெற்றி பெறும் என்பது, "சென்டிமென்ட்!'இதன்படி, 2000 ம் ஆண்டிலிருந்து, இதுவரை, மூன்று முறை, மாவட்ட செயலர் பதவி வகித்த இவர், தற்போது, நான்காவது முறையாக, அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தேர்தல் முடிந்து, சில மாதங்களில், பதவி பறிக்கப்படுவது வழக்கம். கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கைத்தறித்துறை, 2011ல், அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார்.


தி.மு.க., "மாஜி' செயலர் :

தூத்துக்குடி, தி.மு.க.,வில், வடக்கு மாவட்ட செயலராக இருந்தவர் செல்ல பாண்டியன். அக்கட்சியின், மண்டல பொறுப்பாளராக இருந்தவரும், தற்போதைய மாவட்ட செயலருமான, பெரியசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2001ல், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர், செயலர், மாநில இணைச் செயலர் பதவிகளை வகித்தார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஒன்றரை ஆண்டுக்கு முன், அறநிலையத் துறை அமைச்சராக இருந்த, சண்முகநாதனிடம் இருந்து, அமைச்சர், மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டு, செல்ல பாண்டியனிடம் வழங்கப்பட்டது. தற்போது, செல்ல பாண்டியனிடம் இருந்து இரு பதவிகளும் பறிக்கப்பட்டு, சண்முகநாதனிடம் வழங்கப்பட்டு உள்ளது.


இரட்டை இலையை முடக்க முகமது ஜான் கடிதம் கொடுத்தது அம்பலம்:

அமைச்சர் முகமது ஜான் நீக்கப்பட்டதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இரட்டை இலை சின்னத்தை முடக்க, கடிதம் கொடுத்தவர் என்ற உண்மை தெரிந்து, கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக, கூறப்படுகிறது.


அதிர்ச்சி:

கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், சாலை விபத்தில் இறந்த அமைச்சர் மரியம்பிச்சைக்கு பதிலாக, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதி, எம்.எல்.ஏ., முகமது ஜான், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக, 2011 ஜூன், 29ம் தேதி நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டு முடிய, 12 நாள் பாக்கியுள்ள நிலையில், முகமது ஜான் நீக்கப்பட்டிருப்பது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இவர் மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் வந்ததன் அடிப்படையில், அமைச்சரவையில் இருந்து, நேற்று நீக்கம் செய்யப்பட்டார். அப்துல் ரகீம் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.வக்பு வாரிய தலைவர் பதவி நியமனம் நடக்க உள்ளது. அதில், இவர் தலையீடு அதிகம் இருப்பதாகவும், ஹஜ் யாத்திரைக்கு, ஏழைகளை விடுத்து, வசதி படைத்தவர்களுக்கு அனுமதி வழங்கியதாகவும் புகார் எழுந்தது.வாணியம்பாடி தொகுதி முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ., காந்தியின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கி வந்ததாகவும், தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஏராளமான புகார்கள், முகமது ஜான் மீது குவிந்தது.ராணிப்பேட்டை தொகுதி, வேலூர் மாநரக மாவட்டத்தில் வருகிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலராக சுமைதாங்கி ஏழுமலை உள்ளார். இவர் தான் நிர்வாகிகள் நியமனம், கூட்டுறவு சங்க தேர்தல் பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டும்.ஆனால், அதிலும் முகமது ஜான் தலையிட்டு, நிர்வாகிகள் நியமனம் செய்வதாக கூறி, ஏராளமானவர்களுக்கு, "சாதகமாக' செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


பேரம்:

விரைவில் வர உள்ள லோக்சபா தேர்தலில், வேலூர் தொகுதிக்கு, எம்.பி., சீட் வாங்கித் தருவதாக பலரிடம், "பேரம்' பேசியதாகவும் புகார் மேலிடம் சென்றது. இதற்கிடையே, ராணிப்பேட்டையை முன்னாள், எம்.எல்.ஏ., சந்திரசேகர் ஆதாரத்துடன் கொடுத்த புகார், மேலிடத்தின் கவனத்திற்கு சென்றது. அதில், 1996ம் ஆண்டு, முத்துசாமி தனியாக, போட்டி அ.தி.மு.க., ஆரம்பித்த போது, இரட்டை இலை சின்னத்தை முடக்கப் பார்த்தார். அப்போது, ராணிப்பேட்டை நகர செயலராக இருந்த முகமது ஜான், முத்துசாமிக்கு ஆதரவாக, இரட்டை இலை முடக்க கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.இதையறிந்த அ.தி.மு.க., மேலிடம், போட்டி அணிக்கு சாதகமாக தேர்தல் கமிஷனுக்கு, "அபிடவிட்டில்' கையொப்பமிட்ட முகமது ஜான் உள்ளிட்ட, 17 பேர் தேர்தல்களில் நிற்க தகுதி இழக்கின்றனர் என குறிப்பிட்டு, "நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழில், 1998 டிசம்பர், 12ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.


குளறுபடிகள்:

உளவுத்துறை மூலம் விசாரணை செய்ததில் இந்த தகவல் உண்மை என தெரிந்தது. இதனால், ஆடிப்போன மேலிடம், லோக்சபா தேர்தலில் ஏதாவது குளறுபடிகள் செய்ய வாய்ப்பிருப்பதாக கருதி, முகமது ஜானை நீக்கியதாக, அ.தி.மு.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், அவர் வகித்து வரும், எம்.எல்.ஏ., பதவிக்கும் விரைவில் ஆபத்து வரும் என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: