திங்கள், 17 ஜூன், 2013

தி.மு.க., ஆட்சியின் சாதனையை சொந்தம் கொண்டாட ஜெயலலிதா முயற்சி

சென்னை:"தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள் நலன் கருதி, முன்னெச்சரிக்கையோடு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக செய்யப்பட்ட ஒரு சாதனைக்கு, ஜெயலலிதா தற்போது சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பின், தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடுவதை எடுத்துக் காட்டி, மேட்டூர் அணையிலிருந்து, ஜூன், 12ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவதைப் போல, இந்த ஆண்டும் திறந்து விடப்படுமா? எனக் கேட்டேன். அதற்கு, ஜெயலலிதா தனது பதிலில், 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில், 6ம் தேதியே குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணை திறக்கப்பட்டது என, கூறி இருக்கிறார்.கடந்த, 2011ம் ஆண்டு மே மாதம், 13ம் தேதி வரை, தமிழகத்தில் தி.மு.க., அரசு நடந்தது. அந்த ஆண்டு, கர்நாடகத்தோடு, தி.மு.க., அரசு சுமுகமாக பேசி நல்லுறவுடன் இருந்த காரணத்தால், மேட்டூர் அணையும் நிரம்பி இருந்தது.


இந்நிலையில், பதவிக்கு வந்த, 20 நாட்களில், மேட்டூர் அணையைத் திறந்ததைப் பற்றி ஏதோ அவருடைய ஆட்சியின் முயற்சியால் தான், அதைச் செய்ததைப் போல ஜெயலலிதா தற்போது தற்பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.கடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகள் தான், உண்மையில் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் ஆண்டுகள். அந்த இரண்டு ஆண்டுகளில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்பட்டது என்பதை ஜெயலலிதா சொல்லியிருக்க வேண்டியது தானே?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: