ஞாயிறு, 6 மே, 2018

இந்த முகங்கள் நினைவிருக்கிறதா உங்களுக்கு ?.. NEETட்டாதே ...


Anitha N Jayaram:  இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவர்கள் குறித்து வாசித்தவர்களுக்கும் கூட மறந்திருக்கலாம். இந்த 16 வயதுப் பெண்ணும் அவர் தாயும் 2016ல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதிகாலை முதல் திகைப்புடனும் பயத்துடனும் போவோர் வருவோரிடம் தகவல் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
தன் மூன்றாவது சுற்று நடைபயிற்சியின் போது ஏதும் அறியாது தடுமாறி நின்று கொண்டிருந்தவர்களை அணுகி விசாரித்தார் சரவணன் என்ற கணினி நிறுவன ஊழியர். அப்போது தான் தெரிந்தது அக்ரி கவுன்சலிங்குக்காக கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைகழகத்தின் அண்ணா அரங்கத்திற்கு வரச்சொல்லி வந்த கடிதத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மாறி சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பது. 8.30 மணி கோயமுத்தூர் கவுன்சலிங்குக்கு 6.30 மணி வாக்கில் சென்னையில் இருக்கிறார்கள்.
1017 மதிப்பெண் எடுத்த அந்தப் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்க, நல்லுள்ளம் கொண்ட அவர் உடனடியாக அவர்கள் இருவரையும் விமானத்தில் கோவை செல்ல ஏற்பாடு செய்துவிட்டு கோவையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தொலைபேசியில் நிலையை விளக்கிச் சொல்லியதோடு நில்லாமல் சக நடைபயிற்சி செய்யும் நண்பர்கள் மூலம் உணவு வரவழைத்து அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினார்.
திருச்சி அருகே உள்ள கிராமத்திலிருந்து வந்த ஸ்வாதி என்ற அந்தப் பிள்ளைக்கு பி.டெக் பயோடெக்னாலஜி பிரிவில் அன்று இடம் கிடைத்தது..
நிற்க..

நீங்கள் பார்க்கும் அந்தப் பிள்ளையின் முகம் தான் தமிழகத்தின் பெரும்பாலான முகம். மெய்யாக நோக்கின் இது தான் தமிழக கிராமத்து மாணவர்களின் நிலை.
இவர்களுக்குத் தான் கல்வி அவசியம் தேவை.
மூட்டை தூக்கும் அப்பாவிற்குப் பிறந்த அனிதாவிற்கும்,
ஆடு மேய்க்கும் அம்மாவிற்குப் பிறந்த ஸ்வாதிக்கும், இது போன்ற இன்னும் பல சரவணன்களுக்கும், சண்முகம்களுக்கும்
தான் இந்த கல்வி அவசியம் தேவை..
சாதியால், பொருளாதாரத்தால் ஒடுக்கப்பட்ட அத்தனை பேருக்கும் தேவை உயர்கல்வி. இவர்களின் வெற்றி ஒரு குடும்பத்தின் மாத்திரமே அல்ல.. அவர்களது பல தலைமுறைகளின் முன்னேற்றத்தை உள்ளடக்கியது. அவர்களுக்கான சமூகப் பொருளாதார விடுதலையைத் தரக் கூடியது.
பல தலைமுறைக்கும் உயிராய் ஓடக்கூடியது இந்த கல்வி.. ஆழ யோசித்தால் புரியும் உங்களுக்கு..
நான் அமர்ந்து எழுதும் இந்த இருக்கையையும்
நீங்கள் அமர்ந்து வாசிக்கும் அந்த இருக்கையையும்
நமக்குத் தந்ததும் தீர்மானித்ததும் அதன்றி வேறென்ன ?
ராஜாஜி குலக் கல்வியை நீட்டினார் அன்று
மோடிஜி கல்விக்கொலையை NEETட்டுகிறார் இன்று
அழிக்கப் பிறந்தவர்கள் ஆளப் பிறந்தவர்களாய் மாறியிருக்கும் இந்த நாட்டில் வாழப் பிறந்தவர்களும் வக்கற்றவர்களாக மாறிப் போகிறதைக் காண்பீர் ...
கல்வி ஒரு வேர்.. ஒரு அடிப்படை..
யாரும் அறியாது அடியில் ஆழமாக அடித்தளம் இட்டவாறே
கோடிக் கிளைகளை பரப்பக்கூடிய ஒரூ மூலம் ..
மரத்திலிருந்து பழம் அதனிலிருந்து புதிய மரங்கள் என
விரிவாகக் கூடிய ஒரு கட்டமைப்பு.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது ?
அரசு இந்த வேரை பலப்படுத்த முனையாது
அதை வெட்டும் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
மக்கள் கருகினால் அரசும் கருகிப் போகும்
என்கிற சங்கிலி எதிர்வினை புரியாமல்
நீரூற்ற வேண்டிய இடத்தில் ஆசிடை ஊற்றிக் கொண்டிருக்கிறது..
இதுவே சமயம்.. இனியும் தாமதித்து உயிர்ப்பலிகளை நீட்டிக்க நாம் அனுமதிக்க முடியாது.. நீட் எனும் அநீதிக்கெதிராக நாம் அனைவரும் பேதங்களை மறந்து, சித்தாந்த வேற்றுமைகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓங்கி உயரக் குரலெழுப்பி, இவற்றிலிருந்து வென்றெழுவோமாக..!!

கருத்துகள் இல்லை: