செவ்வாய், 8 மே, 2018

மோடி, அமித் ஷா, எடியூரப்பாவுக்கு சித்தராமையா .. மன்னிப்பு கேட்காவிடில் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும்’

மோடிக்கு  சித்தராமையா நோட்டீஸ்!‘கர்நாடக அரசு குறித்து அவதூறாக விமர்சித்து வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி, அமித் ஷா, எடியூரப்பா ஆகியோருக்கு முதல்வர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று தாக்கி பிரச்சாரம் செய்துவருகின்றன. பாஜகவைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் அரசை, ஊழல் அரசு என்றும் கமிஷன் அரசு என்றும் விமர்சித்துவருகிறது. பிரதமர் மோடி அண்மையில் பேசியபோது, “முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசை ‘சீத்தா ரூபய்யா சர்க்கார்’ என்று விமர்சனம் செய்தார். அதாவது பணத்துக்காக செயல்படும் ஊழல் அரசு என்ற அர்த்தத்தில் பிரதமர் கருத்து தெரிவித்தார். மேலும் 10 சதவிகிதம் கமிஷன் வாங்கும் அரசு என்று மோடி விமர்சனம் செய்து வருகிறார்.

இதேபோல், அரசுப் பணியில் 10 சதவிகித கமிஷன் பெறப்படுகிறது என்று அமித் ஷாவும் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய விமர்சனங்களுக்கு முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“தனிநபர் விமர்சனத்தைத் தவிர்ப்பது அரசியல் நாகரிகம். ஆனால், அந்த மரபை மீறி பிரதமர் மோடி பேசிவருகிறார். அவரது பதவிக்கு அவர் தரம் தாழ்ந்து பேசுவது அழகல்ல.
பிரதமரின் அரசியல் நாகரிகமற்ற கருத்துகளுக்கும் பொய்களுக்கும் பதில் அளிக்க வேண்டாம் என்றே கருதினேன். ஆனால், அவர் சொல்வது உண்மை என்று நம்பி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. அதற்காகவே பிரதமரின் விமர்சனங்களுக்குப் பதில் அளித்து வருகிறேன். 10 சதவிகித கமிஷன் அரசு என்று மோடி குற்றம்சாட்டி வருகிறார். அதற்கு அவரிடம் ஆதாரம் இருக்கிறதா? பொய் குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி வருகிறார்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தன் மீதான ஊழல் விமர்சனம் தொடர்பாக பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் எடியூரப்பா ஆகியோருக்கு சித்தராமையா சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ‘இந்திய தண்டனை சட்டத்தின் 499, 500, 501 மற்றும் 502 பிரிவுகளின் கீழ் தண்டனைப் பெறும் வகையிலான அவதூறு மற்றும் குற்றங்களை நீங்கள் கூட்டாகச் செய்து வருகிறீர்கள். ஆகையால் நீங்களே இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு, மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உடனடியாக நிபந்தனையற்ற பொது மன்னிப்பைக் கேட்க வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தராமையாவின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பாராட்டுத் தெரிவித்துள்ளார். “சித்தராமையா சரியான நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமர் நீதிமன்றத்துக்குச் சென்று ஆதாரங்களைச் சமர்ப்பித்து தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கட்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: