செவ்வாய், 8 மே, 2018

மணல் இறக்குமதிக்கு கட்டுப்பாடு ... மணல் மாபியாவுக்காக தமிழக அரசு ...

இறக்குமதி மணல்: புதிய அரசாணை வெளியீடு!மின்னம்பலம் :இறக்குமதி மணல் விவகாரத்தில் விதிகளை மீறுவோருக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், விதிகளில் திருத்தங்கள் செய்து புதிய அரசாணையைத் தமிழக அரசு நேற்று (மே 7) வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி தமிழகப் பொதுப்பணித் துறை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலைப் பொதுப்பணித் துறைதான் விற்பனை செய்யும் என்றும், சொந்தப் பயன்பாட்டுக்குக்கூட இறக்குமதி மணலை அனுமதிக்க முடியாது என்றும் கட்டுப்பாடுகள் விதித்து அரசாணை பிறப்பித்தது.
அந்த அரசாணையில், தமிழகத்தில் அனைத்து மணல் விற்பனையையும் பொதுப்பணித் துறை மட்டுமே நடத்த வேண்டும் எனவும், மணல் இறக்குமதி செய்யப்பட்டால் அதைத் தமிழக அரசிடம் அளிக்க வேண்டும்; அரசுதான் அதை விற்பனை செய்யவும் விலை நிர்ணயம் செய்யவும் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சில திருத்தங்களைச் செய்து நேற்று புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், ‘பொதுப்பணித் துறை தவிர வேறு யாருக்கும் பிற நாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க உரிமை இல்லை. இறக்குமதி மணல் விற்பனை செய்யக்கூடிய உரிமை மாநில அரசின் பொதுப்பணித் துறையிடமே இருக்கும். பொதுப்பணித் துறையின் குறிப்பீடுகளை நிறைவு செய்யாத மணலைத் தமிழகத்திலிருந்து கடல் வழியாகவே அப்புறப்படுத்த வேண்டும்.
இறக்குமதி மணலை யாரும் தன்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்லக் கூடாது; வேறு மாநிலத்தில் விற்கக் கூடாது. இறக்குமதி மணலை இருப்பு வைக்கும் உரிமை பொதுப்பணித் துறையிடமே இருக்கும்.
இறக்குமதி மணல் எந்த நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். யார் மணலை இறக்குமதி செய்தாலும் அதைப் பொதுப்பணித் துறைக்கு மட்டுமே விற்க வேண்டும். பொதுப்பணித் துறையின் அனுமதியின்றி இறக்குமதி மணலைத் துறைமுகத்திலிருந்து கிடங்குகளுக்குக் கொண்டுசெல்லக் கூடாது. இந்த விதிகளை மீறுவோருக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை அல்லது 5 லட்ச ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: