சனி, 12 மே, 2018

வாட்ஸ் - அப் மூலம் குழந்தை கடத்தல் வதந்தியை பரப்பியவர் கைது

tamilthehindu :குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவலைப் பரப்பிய கட்டிடத் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனால், சந்தேகத்துக்குரியவர்களைத் தாக்கக்கூடிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தம்புகொட்டான்பாறை கிராமத்தில் காரில் வந்த 5 பேரை குழந்தைக் கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து சரமாரியாக தாக்கினர். அதில், சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி(65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, சமூகவலைதளத்தில் குழந்தைக் கடத்தல் குறித்து தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட எஸ்பி பொன்னி ஆகியோர் நேற்று முன் தினம் எச்சரித்தனர்.


அதன் அடிப்படையில் குழந்தைக் கடத்தல் குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவலைப் பரப்பியதாக. கட்டிடத் தொழிலாளியை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அனக்காவூர் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ் கூறும்போது, “செய்யாறு அடுத்த புரிசை கிராமத்தில் வசிப்பவர் வீரராகவன்(29). கட்டிடத் தொழிலாளி. இவர், சில நாட்களுக்கு முன்பு செய்யாறு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் குழந்தைகளைக் கடத்த வட மாநில கும்பல் வந்திருப்பதாகவும், அவர்கள் மூலம் பல குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வீடியோவில் பதிவு செய்து வாட்ஸ்-அப் மூலம் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் தனது பதிவை அனைவருக்கும் பகிரவும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, அவர் மீது 507, 505(1பி) ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம். குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்திகளை பரப்புவோர் மீது பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவார்கள். சந்தேக நபர் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை பொதுமக்கள் தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கருத்துகள் இல்லை: