சனி, 12 மே, 2018

கே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் பரிந்துரை: கொலிஜியம் கூட்டத்தில் முடிவு

etamil.com :உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய கொலிஜியம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் குழு, உத்தரகண்ட் மாநில தலைமை நீதிபதி ஜோசப் மற்றும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரைப் பரிந்துரை செய்தது. இதில் இந்து மல்ஹோத்ரா பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஜோசப்பின் பரிந்துரையை நிராகரித்தது. இதனால் கொலீஜியம் குழு மற்றும் மத்திய அரசு இடையே கருத்து முரண்பாடு நிலவி வந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில், மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.
கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று கொலிஜியம் கூட்டம் நடந்தது. மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என முடிவெடுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை: