சனி, 12 மே, 2018

வன்புணர்வு: கணவரை கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை

BBC :பாலியல் வன்புணர்வு செய்த கணவரை கொலை செய்ததற்காக இளம்
பெண் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி சூடான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நவுரா ஹுசைனை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவரின் கணவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கணவரின் குடும்பத்தினர் நிதி இழப்பீடு பெற மறுத்ததையடுத்து நவுராவின் தண்டனையை நீதிபதி உறுதி செய்தார்.
16 வயதில் நவுரா ஹுசைனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது அவருக்கு வயது 19.
படிப்பை முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இந்நிலையில், இவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பிப்பெற வேண்டும் என்று மனித உரிமை குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
கணவரை எப்படி கொலை செய்தார்?
திருமணத்துக்கு பிறகு சிறிது நாட்கள் அத்தை வீட்டில் தங்கியிருந்த நவுராவை, அவரது பெற்றோர்கள் மீண்டும் அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

அங்கு சென்ற ஆறு நாட்கள் கழித்து, நவுராவின் கணவர், உறவினர்களின் உதவியோடு அவரை வன்புணர்வு செய்துள்ளார்.
அடுத்த நாள் மீண்டும் வன்புணர்வு செய்ய முயன்ற போது, நவுரா தனது கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதனையடுத்து, நவுராவின் பெற்றோர் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தற்போது ஷரியா சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இச்சட்டப்படி, கணவரின் குடும்பம் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் அல்லது பெண்ணுக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரலாம்.
இந்த வழக்கில் நவுராவின் கணவர் குடும்பம், அவருக்கு மரண தன்டணை வழங்க வேண்டும் என்ற வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: