செவ்வாய், 8 மே, 2018

மன்மோகன் சிங்: இந்திய பொருளாதாரத்தைத் திட்டமிட்டு சிதைத்துவிட்டார்!

மன்மோகன் சிங்
சுகன்யா பழனிச்சாமி - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் சீரழித்து விட்டார் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியிருக்கிறார். கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங்,“பா.ஜ.க ஆட்சியில் வங்கிக் கடன் மோசடிகள் அதிகரித்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.28,416 கோடியாக இருந்த வாராக்கடன் அளவு, 2017ல் 4 மடங்காக அதிகரித்து, ரூ.1.11 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை அமல்படுத்தியது மிகப்பெரிய தவறு. நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. அதுமட்டுமன்றி, கச்சா எண்ணை விலை உயர்வு, கல்வித் தரம், வேலையில்லா திண்டாட்டம் என நாட்டில் பல பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன.
விவசாயிகளும் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால், நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை திட்டமிட்டு சிதைத்துவிட்டார்கள். இதனை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்த சாதனையை 4 ஆண்டுகளில் தவிடுபொடி ஆகிவிட்டது மோடி அரசு’’ எனக் கடுமையாக விலாசினார்.
vikatan.com

கருத்துகள் இல்லை: