புதன், 9 மே, 2018

70 ஆண்டுகளாக திருடும் சில்வர் சீனிவாசன் தாத்தா .. கொள்ளையடிப்பதிலும் நேர்மை- ?

கொள்ளையடிப்பதிலும் நேர்மை- 70 ஆண்டுகளாக திருடும் சில்வர் சீனிவாசன்மாலைமலர் :14 வயதில் இருந்து திருட தொடங்கிய ‘சில்வர்’ சீனிவாசன் 70 ஆண்டுகளாக திருடி வரும் நிலையில் கொள்ளையடிப்பதிலும் தான் நேர்மையை கடை பிடிப்பதாக கூறுகிறார். தொழில்னா ஒரு நேர்மை இருக்கணும்... அது எந்த தொழிலா இருந்தா என்ன? அதனால்தான் கொள்ளையடிப்பதிலும் நான் நேர்மையை கடை பிடிக்கிறேன் என்று தடாலடியாக கூறியுள்ளார். மயிலாப்பூரில் பிடிபட்ட 84 வயது சில்வர் சீனிவாசன்.
கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவருக்கு நிரந்தரமாக தங்குவதற்கு எங்கும் இடம் இல்லை. அதுபோன்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் சீனிவாசன் விரும்பியதில்லை. கண்போன போக்கில் சென்று கால்போன போக்கில் நடந்து சாலை யோரங்களில் தூங்கி எழுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் சீனிவாசன்.
சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றி திரிந்த இவரை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் பார்த்தனர். முதியவராக இருக்கிறாரே? என்று எண்ணி அவரிடம் சென்று பேச்சு கொடுத்தனர்.


அப்போது அவர் தனது இருப்பிடம் பற்றி சரியான தகவலை கூறாததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவரது பெயர் சில்வர் சீனிவாசன் என்பதும் சத்தமில்லாமல், சென்னையை கலக்கிவரும் கொள்ளையர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது தன்னைப் பற்றியும், தனது திருட்டு தொழில் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை போலீசாருடன் பகிர்ந்து கொண்டார்.

14 வயதில் இருந்து திருட தொடங்கி விட்டேன். எங்கெங்கு திருடினேன் என்பதை டைரியில் எழுதி வைத்துக் கொள்வேன். போலீசில் பிடிபட்டதும் மற்ற திருடர்களை போல அய்யா... எனக்கு தெரியாது... என்ன விட்டுடுங்க என்றெல்லாம் காலில் விழாத குறையாக கெஞ்ச மாட்டேன். சட்டென்று குற்றத்தை ஒப்புக் கொள்வேன். ‘‘இதுதான் என்னோட பாலிசி’’ என்று கூறி போலீசாரை தலை சுற்ற வைத்துள்ளார்.

சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கைவரிசை காட்டி இருக்கும் சில்வர் சீனிவாசன் வீடுகளில் தோ‌ஷம் கழிப்பதாக கூறியே நகைகளை அபேஸ் செய்வார். குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது தான் சீனிவாசன் அங்கு சென்று பேச்சு கொடுப்பார். அப்போது வீட்டில் உள்ள தங்க நகைகளை கொண்டு வந்து மொத்தமாக பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போடச் செல்வார்.

எவ்வளவு நகைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் சுருட்டும் பழக்கம் சீனிவாசனுக்கு கிடையாது. ஒரே ஒரு செயினை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி விடுவார். இதனால் யாருக்கும் சந்தேகம் வருவதில்லை.

இதற்கு இவர் கூறும் காரணம், நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கு இதுபோதும் என்பதுதான். காலையில் 4 இட்லி, மதியம் தயிர் சாதம், இரவில் 4 இட்லி இதுதான் என்னோட அன்றாட உணவு என்று தனது தினசரி மெனுவை பட்டியலிட்டுள்ள சீனிவாசன் திருட்டு நகை களை அடகு வைத்து அந்த பணத்தை வைத்து செலவு செய்வார். கையில் இருக்கும் காசு காலியான பின்னரே அடுத்த திருட்டுக்கு செல்வார்.

வேப்பேரி, மாதவரம் பகுதிகளிலும் கைவரிசை காட்டியுள்ள சீனிவாசன் ஆரம்பத்தில் சில்வர் பொருட்களையே அதிகமாக திருடியுள்ளார். இதனாலேயே சில்வர் சீனிவாசன் என்ற பெயரை பெற்றுள்ளார். அதற்கு மதிப்பு குறைந்த பின்னரே தங்க நகைகளை குறிவைக்க தொடங்கியுள்ளார்.

சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட பல போலீஸ் அதிகாரிகளின் பெயரை கூறிய சீனிவாசன், அவங்க காலத்துல இருந்தே நான் திருடுற ஆளாக்கும் என்று கூறியுள்ளார். இவர் குறிப்பிட்ட சில அதிகாரிகள் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் சீனிவாசனின் திருட்டு தொழில் மட்டும் தொடர்ந்து கொண்டே உள்ளது

கருத்துகள் இல்லை: