செவ்வாய், 8 மே, 2018

தீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ நிராகரிப்பு : 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை

Dipak Misra Impeachment, Constitution Bench, Justice AK Sikri.ietamil.com : தீபக் மிஸ்ரா இம்பீச்மென்ட் விவகாரம் தொடர்பாக 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் செவ்வாய்கிழமை விசாரணை நடத்த இருக்கிறது.
தீபக் மிஸ்ரா, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி! இவருக்கு எதிராக கடந்த ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை பாரபட்சமாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒதுக்கீடு செய்வதாக அவர்கள் புகார் கூறினர்.
தீபக் மிஸ்ரா மீது இன்னொரு சர்ச்சையும் வெடித்தது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை தேவையில்லை என தீபக் மிஸ்ரா அமர்வு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளின் ராஜ்யசபா உறுப்பினர்கள் 64 பேர் கையெழுத்து இட்டு, தீபக் மிஸ்ராவுக்கு எதிராக இம்பீச்மென்ட்(தகுதி நீக்கத் தீர்மானம்) நோட்டீஸ் கொடுத்தனர்.

ஆனால் ராஜ்யசபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, ‘இம்பீச்மென்ட் நோட்டீஸில் குறிப்பிட்ட புகார்களில் உண்மைத்தன்மை இல்லை’ என குறிப்பிட்டு நிராகரித்தார். வெங்கையா நாயுடுவின் அந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (மே 7) முறையிட்டனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் சார்பில் கபில்சிபல், மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் அமர்வில் இந்த முறையீடை முன்வைத்தார். தலைமை நீதிபதி அமர்வில் முறையிடக் கூறிய செல்லமேஸ்வர், பின்னர் நாளை (செவ்வாய்கிழமை) வரும்படி தெரிவித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.க்களின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. செவ்வாய்கிழமைக்கான உச்ச நீதிமன்ற அலுவல்கள் தொடர்பான அறிவிப்பில் அது வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர் அந்த அமர்வில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்ற சீனியாரிட்டியில் 6 முதல் 10-வது இடம் வரை இருப்பவர்கள்! தீபக் மிஸ்ராவுக்கு அடுத்தபடியாக 2 முதல் 5 வரையிலான சீனியாரிட்டியில் இருக்கும் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் இந்த அரசியல் சாசன அமர்வில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை நீதிபதிக்கு எதிராக வெளிப்படையாக புகார் வீசியவர்கள் இவர்கள் என்பதும் நினைவு கூறத் தக்கது.
ஏ.கே.சிக்ரி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு செவ்வாய்கிழமை (இன்று) இந்த வழக்கை விசாரிக்கிறது. தலைமை நீதிபதியின் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக துணை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிரான வழக்கு என்பதால், பெரும் எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: