வியாழன், 10 மே, 2018

எழுத்தாளர் சௌபா மகனை கொன்ற குற்றச்சாட்டில் கைது

நான்தான்பா கொன்னேன் : சௌபாமின்னம்பலம: மகனைக் கொன்ற புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் சௌபா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, அவரது தோட்டத்தில் பணியாற்றிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1980களில் மதுரை வட்டாரத்தில் நிகழ்ந்த சமூகக் கொடுமைகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்தவர் பத்திரிகையாளர், எழுத்தாளரான சௌபா என்ற சௌந்திரபாண்டியன். ஜூனியர் விகடனில் மாணவப் பத்திரிகையாளராகத் தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கியவர். உசிலம்பட்டி பகுதியில் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது, பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்வதற்காக எருக்கம் பால் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக அவலங்களை வெளியுலகுக்குத் தெரியவைத்தவர்.
இன்று (மே 10) அவரே நீதிமன்றத்தின் வாசலில் குற்றம்சாட்டப்பட்டு நிற்கிறார்.
சௌபாவின் மகன் விபின் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரைக் கைது செய்துள்ளனர் போலீசார். இந்த விவகாரத்தில், அவரது தோட்டத்தில் பணியாற்றிவந்த பூமி, கனிக்குமார் என்ற கணேசன் ஆகிய இருவர் கைதாகியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக, இன்று (மே 10) மதுரை நீதிமன்றத்திற்கு மூன்று பேரையும் போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, சௌபாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. மாறாக, “ஆமாப்பா, நான்தான்பா எம் மகனைக் கொலை செஞ்சேன்” என்று அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகச் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் காத்திருக்கும் விவரம் அவரிடம் சொல்லப்பட்டது. உடனடியாக, அவர்களைத் தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார் சௌபா. தனது மகனைக் கொன்றது பற்றி அவர்களிடம் தெரிவிக்கிறேன் என்றும், இதனால் ஊடகங்களின் டிஆர்பி அதிகமாகுமென்றும் சிரித்தபடியே தெரிவித்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் நீதிமன்றப் பிரச்சினைகள் வரக்கூடும் என்று அவரது வழக்கறிஞர்கள் மற்றும் நலம்விரும்பிகள் அவரை அமைதிப்படுத்தினர். அவர்களிடம், உடனடியாக ஜாமீன் கேட்க வேண்டாம் என்றும், 90 நாட்கள் தான் சிறையிலேயே கழிப்பதாகவும் கூறியுள்ளார் சௌபா.
என்ன நடந்தது, எப்படி நடந்தது?
எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான சௌபா, ஊடக உலகில் இயங்கிவரும் பலருக்குப் பரிச்சயமானவர். ஒரு எழுத்தாளராகத் தமிழ் வாசகர்கள் பலருக்கு அறிமுகமானவர். இவரது சீவலப்பேரி பாண்டி கதை சினிமாவாகவும் வெளியாகிப் பெயர் பெற்றது.
சௌபாவின் மனைவி லதா பூரணம், கோவில்பட்டியிலுள்ள கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றிவருகிறார். இவர்களது ஒரே மகன் விபின். கருத்து வேறுபாட்டின் காரணமாக, கடந்த 14 ஆண்டுகளாக லதாவும் சௌபாவும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். இதனால், மகன் விபின் இருவரது வீட்டிலும் மாறி மாறித் தங்குவார். சில நாட்களுக்கு முன்பு சௌபாவைப் பார்க்க வந்த விபின், அதன் பிறகு தாய் லதாவைச் சந்திக்கவில்லை.
கடந்த ஒரு வார காலமாக மகனைக் காணாமல் தவித்த லதா, இதுபற்றி சௌபாவிடமும் விசாரித்துள்ளார். அவர் தனக்குத் தெரியாது என்று மறுக்கவே, மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் லதா புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சௌபா மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே, அவரை அழைத்து விசாரித்திருக்கின்றனர். அப்போது, தன் மகனைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
தாய் தந்தை இருவரும் தென் மாவட்டங்களில் வசித்தபோதும், சென்னைக் கல்லூரியொன்றில் படித்தார் விபின். அப்போது, சில நண்பர்களுடன் சேர்ந்து அவர் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் விபினுக்கு சௌபா ஒரு கார் வாங்கித் தந்ததாகவும், அதனை அவர் விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே, சௌபாவிடம் விசாரித்திருக்கின்றனர் போலீசார். அப்போது தனது மகன் குடித்துவிட்டு தினமும் தகராறு செய்ததாகவும், அதனால் அவரை அடித்துக் கொன்றதாகவும் சௌபா வாக்குமூலம் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், தந்தை பெயரிலுள்ள தோட்டத்தைத் தன் பெயருக்கு மாற்ற வேண்டுமென்று விபின் வற்புறுத்தியதாலும், இந்தக் கொலை நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. மதுரையிலுள்ள வீட்டில் கொலை நிகழ்ந்ததாகவும், அதன் பிறகு கொடைக்கானல் சாலை அருகே சௌபாவுக்குச் சொந்தமான தோட்டத்தில் விபின் உடல் எரிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. சௌபாவின் தோட்டத்திற்குச் சென்று, இதுபற்றி விரிவான விசாரணை நடத்தவுள்ளனர் போலீசார். இந்த தோட்டத்தில்தான், தனது பத்திரிகை, எழுத்து மற்றும் சினிமா துறைகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது சௌபாவின் வழக்கம்.

கருத்துகள் இல்லை: