திங்கள், 7 மே, 2018

டி எஸ் பி விஷ்ணுப்பிரியா உயிரிழந்த வழக்கை ஊத்தி மூடிய ... தற்கொலையாம்..

வெப்துனியா :மறைந்த திருச்சங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா கொலை செய்யப்படவில்லை. தற்கொலைதான் செய்து கொண்டார் என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
என்ஜினீயரிங் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக விஷ்ணுப்பிரியா தந்தை ரவி குற்றம்சாட்டியிருந்தார்.
;முதலில் டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டாள். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனவே, இந்த வழக்கு சிபிஐ தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2 வருடங்களாக சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில், விஷ்ணுப்பிரியா மரணம் கொலை அல்ல. அவர் தற்கொலையே செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகள் யாருமில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.<>ஆனால், அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதைத்தான் சிபிஐ கண்டுபிடித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவர் செய்தது தற்கொலைதான் எனக்கூறி இந்த வழக்கை முடித்துள்ளனர். வழக்கம் போல் அவருக்கு அழுத்தம் கொடுத்த உயர் அதிகாரிகள் காப்பாற்றுப்பட்டு விட்டார்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: