திங்கள், 7 மே, 2018

சிறுமி ஆசிபா வழக்கு விசாரணையை பஞ்சாப் கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு


மாலைமலர் :ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. ஜம்மு காஷ்மீரில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், சண்டிகருக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு மீதான விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. காஷ்மீர் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “காஷ்மீரில் சுதந்திரமாக விசாரணை நடக்க மாநில அரசு ஒத்துழைக்கும்” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது. 

வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். சாட்சிகள், வழக்கறிஞர்களுக்கு காஷ்மீர் மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை: