திங்கள், 7 மே, 2018

திருப்பதி கோவிலை கையகப்படுத்தும் முடிவை மோடியரசு கைவிட்டது ... ஆந்திரா மக்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ஆர் எஸ் எஸ் அரசு

திருப்பதி: பின்வாங்கிய மத்திய அரசு!மின்னம்பலம் :திருப்பதி ஏழுமலையான் கோயிலை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்த கடிதத்தை மத்திய தொல்லியல் துறை திரும்பப்பெற்றுள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திருப்பதியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “திருப்பதி வெங்கடாஜலபதியின் முன்பாக ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்களித்து ஏமாற்றிவிட்டார் மோடி. எனவே கர்நாடகாவில் இருக்கும் தெலுங்கு பேசும் மக்கள் மோடியைப் புறக்கணிக்க வேண்டும். அவர் உங்களுக்கும் இதுபோல வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு பிறகு ஏமாற்றிவிடுவார்’’ என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நிர்வாகத்தில் தலையிடும் விதமாய் கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு மத்திய தொல்லியல் துறை அனுப்பியுள்ள கடிதம் ஆந்திரா மக்களிடையே சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தேவஸ்தான அதிகாரிகள் கோயில் சிலைகள்,ஆபரணங்கள்,காணிக்கைகள் போன்ற பொருட்களுக்கு தக்கப் பாதுகாப்பு வழங்கவில்லை ,கோயிலின் கட்டடங்களை தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு உடைத்து மாற்றி அமைக்கின்றனர் என்ற புகாரின் பேரில்தான் திருப்பதி கோவிலின் நிர்வாக விவரங்களைக் கேட்பதாகவும் தொன்மையான திருப்பதி கோயிலை பண்டைய வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களில் சேர்க்கத்தான் கட்டடங்களின் விவரங்களைக் கேட்டதாகவும் தொல்லியல் துறை தரப்பில் கூறப்படுகின்றது.
மத்திய தொல்லியல் துறையின் இந்தக் கடிதத்திற்கு ஆந்திரா அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இதனிடையே தொல்லியல் துறை இயக்குநர் உஷா சர்மா அக்கடிதத்திற்கும் தமக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் தமக்கு தெரியாமலேயே அக்கடிதம் எழுதப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய தொல்லியல் துறை கோயிலை கையகப்படுத்தி கோவிலை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கின்றது என்ற குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள தொல்லியல் துறை நிர்வாக விவரங்களைக் கேட்டு அனுப்பியிருந்த கடிதத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டது.

கருத்துகள் இல்லை: