செவ்வாய், 8 மே, 2018

கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் கைது

கோட்டையை முற்றுகையிட வந்த  அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் கைதுமாலைமலர் :ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை தீர்த்து வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறி இருந்தனர்.
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

இதன்படி சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காகவே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நேற்று மாலையிலேயே அந்தந்த மாவட்டங்களில் திரண்டனர்.
ரெயில் மற்றும் பஸ்களில் புறப்பட்டு சென்னை வர திட்டமிட்டனர். இவர்களை பஸ், ரெயில் நிலையங்களில் வழிமறித்த போலீசார் கைது செய்தனர்.
அதே நேரத்தில் நிர்வாகிகள் பலர் வெளி மாவட்டங்களில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களில் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். இவர்களை எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினரும் கைதானார்கள். சென்னையில் மட்டும் இன்று காலை வரையில் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.



கோயம்பேடு பஸ் நிலையம் அருகே லாட்ஜில் தங்கியிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்களையும் போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர்.

சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டு கோட்டை அருகே சுங்க சாவடியில் சோதனை நடத்திய போலீசார் கார், வேன், பஸ்களில் வந்த 120 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

செங்கல்பட்டு டோல்கேட்டில் மதுரை, புதுக் கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள சமூக நலக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை 9.30 மணி அளவில் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதற்காக பலத்த போலீஸ் கெடுபிடியையும் மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் சேப்பாக்கத்தில் திரண்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை பல்கலைக்கழகம் அருகில் திரண்டவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை கண்டித்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வாலாஜா சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வேனில் ஏற்றி கைது செய்தனர்.

இதன் காரணமாக சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தலைமை செயலகத்தில் இருந்து மெரினா கடற்கரை வரையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்த பலர் இடையில் வழிமறித்தும் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தொடக்கப் பள்ளி ஆசிரியர் பேரவை மாவட்ட துணை செயலாளர் சத்தியபாமா தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஆம்னி பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

சென்னைக்கு வருவதற்குள் அவர்களை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

மதுரையில் இருந்து புறப்பட்ட 150 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈரோட்டை அடுத்த மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்பாபு தலைமையில் 15 பெண்கள் உள்பட 40 பேர் பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னை போராட்டத்துக்கு புறப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 16 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் வழியாக சென்னை சென்ற வெளி மாவட்ட நிர்வாகிகள் 100 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரத்தில் 53 பேரும், விருத்தாசலத்தில் 35 பேரும், பண்ருட்டியில் 10 பேரும், ரெட்டிச்சாவடியில் 47 பேரும், தர்மபுரியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் 11 பேரும், நாமக்கலில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 148 பேரும், கோவை மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் 26 பேரும் கைதானார்கள்.

ஜாக்டோ-ஜியோ போராட்டக்குழு 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஜாக்டோ-ஜியோ கிராப்ட் என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அங்கீகரிக்கப்பட்ட 23 ஆசிரியர் சங்கங்கள், 3 அரசு அலுவலர் சங்கங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பினர் ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமி‌ஷனை ஏற்றுக் கொண்டனர். அதன் அறிக்கைக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். இதனால் அந்த அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: