புதன், 9 மே, 2018

பிரகாஷ் ராஜ் உயிருக்கு இந்துத்வா அமைப்புக்களால் ஆபத்து!

Prakashraj
இந்துத்வ அமைப்புகளால் என் உயிருக்கு ஆபத்து! -
 நடிகர் பிரகாஷ்ராஜ்;
ச.ப.மதிவாணன் நக்கீரன் :பா.ஜ.க. மற்றும் இந்துத்வ அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பிறகு, நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் இந்துத்வ அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். நாட்டில் மதவாத சக்திகள் வேரூன்றி இருப்பதாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைக் கண்டித்து, இந்துத்வ அமைப்பினர் அவரது வாகனத்தின் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், 'கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மதவாத மற்றும் வன்முறையைத் தூண்டும் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்காமல், ஆராய்ந்து வாக்களிக்கவேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும், ‘மோடிக்கு நாட்டை முறையாக ஆட்சி செய்யத் தெரியவில்லை. தேவையில்லாத குழப்பங்களைக் கிளப்பிவிட்டு அதன்மூலம் ஆதாயம் தேடிக்கொள்ள முயற்சிகள் நடக்கின்றன' எனவும் குற்றம்சாட்டினார்.


அதேபோல், 'நான் தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் இந்துத்வ அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறேன். அதனால், என்னைக் கொலைசெய்ய சதி நடக்கிறது. சில இந்துத்வ அமைப்புகளில் இருந்து நேரடியாக கொலைமிரட்டல்களும் வருகின்றன. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என என் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். நான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். ஆனால், எதைக் கண்டும் அஞ்சப்போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: