ஞாயிறு, 6 மே, 2018

மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு! கிருஷ்ணசாமியின் இறப்புக்கு ,,,

மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு!மின்னம்பலம் : கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை மறைவு தெரியாமல் தேர்வெழுதிய மாணவன், தகவலறிந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலைக் கண்டு கதறி அழுதார். இதையடுத்து கிருஷ்ணசாமியின் உடல் இன்று இரவு திருத்துறைப்பூண்டி விளக்குடிக்கு எடுத்து வரப்படுகிறது.
கிருஷ்ணசாமி மறைவுக்கு முதல்வர் உள்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்விற்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்துச் சென்று, விடுதியில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திரு.கிருஷ்ணசாமி அவர்களின் மனைவி திருமதி. பாரதி மகாதேவி அவர்களை நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டேன்.

அப்போது திருமதி. பாரதி மகாதேவி அவர்கள் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தின் மேற்படிப்புச் செலவுகளுக்கு உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையினை ஏற்று, மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்விச் செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தேன். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்
சற்றுமுன் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தாயாரிடமும் மாணவரின் மாமாவிடமும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். கிருஷ்ணசாமி அவர்களின் பிரிவைத் தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்கிட எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். மாணவர் கஸ்தூரி ராமலிங்கத்தின் மேற்படிப்புக்கு எனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சம் வழங்கிட முடிவு செய்துள்ளேன்.
தமிழக பாஜக தலைவர், தமிழிசை
நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதி வருகிறார் என்ற செய்தி மேலும் துயரத்தை தருகிறது. மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக பாஜக சார்பில் எங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருங்காலத்தில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக பாஜக உதவும். மிக துயரமான இந்த நேரத்தில் இந்த மரணத்தையும் வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழக எதிர்கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.
வெளி மாநிலத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலே மாணவர் தந்தை மரணத்திற்கு காரணம் என்றும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக பொதுச்செயலாளர், விஜயகாந்த்
தமிழகத்திலேயே நீட் தேர்வை எழுத அனுமதி கொடுத்திருந்தால் அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் இருந்திருக்கும் அதனால் இதுபோன்ற உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். மத்திய அரசு எதைச்செய்தாலும், சொன்னாலும், தமிழக அரசு தலையாட்டி பொம்மையாக சம்மதம் தெரிவிக்கிறேதே தவிர, தமிழகத்தினுடைய உரிமையை எதிர்த்து கேட்கின்ற தைரியம் தமிழக அரசுக்கு கிடையாது. உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி போதாது, மேற்கொண்டு நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும்
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
இச்சம்பவத்தை கேள்விப்பட்டதுடன், கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் அவர்களோடும், முதலமைச்சர் அலுவலகத்தோடும் தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு முன்னரே கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் நேரிடையாக தலையிட்டு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும் திருத்துறைப்பூண்டியில் வசிக்கும் கிருஷ்ணசாமியின் துணைவியாரை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். மாணவர்கள் மற்றும் குடும்பங்கள் அனுபவித்துள்ள துயரங்கள், மாநில உரிமை, சிபிஎஸ்இ வாரியத்தின் போதாமை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு நீட்டிலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க முன்வர வேண்டும்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்
ஒக்கி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல் படும்பொழுதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் திரு.பினராயி விஜயனிடம் பேசி தமிழர்களின் நன்றியைத் தெரிவித்தேன்.மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை உதவிகள் செய்யும் மக்கள் நீதி மய்யம்.

கருத்துகள் இல்லை: