

ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்கள் வாங்கிக் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சொத்துக் குவிப்பில் கூட்டு சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ‘’ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள்’’ என்று தீர்ப்பளித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 128 சொத்துக்களில் 68 சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
குன்ஹாவின் தீர்ப்பு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கர்நாடக அரசின் மேல்முறையீட்டின் பேரில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பையே உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், மேலும் தனது தீர்ப்பில் வழக்கின் விசாரணை அமைப்பானது சம்பந்தப்பட்ட சொத்துகளின் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
விஜிலென்ஸ் இயக்குநராக இருந்த வெங்கட்ராமன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டியிருப்பது பற்றி தமிழக அரசுக்கு வலியுறுத்தினார். ஜெயலலிதாவின் சொத்துக்களை பொசிஷன் எடுக்குமாறு சில கலெக்டர்களுக்கு கடிதமும் எழுதினார். ஆனால் அதன்பின் அவர் நீண்ட விடுமுறையில் போய்விட்டார். இதன் பின் அந்தப் பொறுப்புக்கு மஞ்சுநாத் வந்தார். இதையடுத்து 2017 மார்ச் மாதம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக விஜிலென்ஸ் இயக்ககத்தில் இருந்து ஒரு உத்தரவு போயிருக்கிறது. ‘’சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயர்களில் ஆறு நிறுவனங்கள் உடையதாகக் காட்டப்பட்டிருக்கும் 68 சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்பதுதான் அந்த உத்தரவு.
"அந்த 68 சொத்துக்களிலும் எவ்வளவு இடங்கள், எங்கெங்கு உள்ளன, அவற்றின் தற்போதைய மதிப்பு எவ்வளவு? அவற்றில் அரசுத் துறை கட்டிடங்கள் கட்டலாமா? வேறு எந்த வகையில் அந்த நிலங்களை அரசு பயன்படுத்தலாம்?” என்ற ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 68 இடங்களையும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்திவருகிறார்கள்.
கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர், பையனூர் பங்களா உட்பட பல்வேறு சொத்துகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், ஜெயலலிதா வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் ரிசர்வ் வங்கியில் உள்ளதால் அவை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆய்வுப் பணிகள் முடிந்ததும் 68 சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு ரூ. 50 கோடி மதிப்பில் நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 7ஆம் தேதி நடைபெற்றிருந்த நிலையில், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேகம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக