செவ்வாய், 8 மே, 2018

அண்ணா அறிவாலயத்தில்’ இன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் மூன்று முக்கிய தீர்மானங்கள்

ietamil.com :காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதி மன்றம் கொடுத்த 6 வார கெடு மார்ச் 29ம் தேதி முடிவடைந்தும், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ‘ஸ்கீம்’ குறித்து விளக்கம் கேட்டு மனு செய்தது. மே 3ம் தேதி வரை காலக்கெடு அளித்தது உச்சநீதிமன்றம். அதன் பிறகு, மீண்டும் மத்திய அரசு அவகாசம் கேட்டதால், மே 8ம் தேதி காவிரி திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘பிரதமரும் மற்ற அமைச்சர்களும் கார்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், வரைவு திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வாங்க முடியவில்லை’ என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்பை பதிவு செய்தது. ‘மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காது’ என கடுமையாக மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியது. இதையடுத்து, மீண்டும் இந்த வழக்கு மே 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இழுபறியாகும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஏப்.1ம் தேதி முதல் திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து  ஆலோசிக்க, திமுக சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘அண்ணா அறிவாலயத்தில்’ இன்று (மே 8) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
திமுக அறிவித்துள்ள இந்தக் கூட்டத்தில் அவர்களின் தோழமை கட்சிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் Live Updates-ஐ அறிய, தொடர்ந்து ஐஇதமிழ்-ல் இணைந்திருங்கள்.
இரவு 07.15 – இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உட்பட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இரங்கல் தீர்மானம்:
மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையான “நீட்”” தேர்வினை எல்லா வகை எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணித்து, வேறு வழியின்றி நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், முன்கூட்டியே முறையாகத் திட்டமிடப்படாத குழப்பத்தின் உச்சகட்டமாக, கேரள மாநிலத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும், சிக்கிம் மாநிலத்திலும் தேர்வு மையங்களை ஒதுக்கி மத்திய இளநிலை பள்ளிக் கழகம் (சி.பி.எஸ்.இ) எதிர்பாராததொரு தாக்குதலை தமிழக மாணவர்கள் மீது தொடுத்து எவராலும் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து விட்டது.  மத்திய அரசின் இந்த துரோகச் செயலுக்கு அ.தி.மு.க. அரசு எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல்,  மத்திய அரசின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்தது.
அந்த துரோகத்தின் விளைவாகவும், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதாலும், சி.பி.எஸ்.இ விதித்த அவமானப்படுத்தும் கெடுபிடிகளாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களும், மாணவ- மாணவிகளும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். நீட் தேர்வு மன உளைச்சலின் காரணமாக திருத்துறைப்பூண்டி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி – சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன் – கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த மாணவி சுவாதியின் தந்தை சீனிவாசன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்ததை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.
இவர்களது துயர மரணத்திற்கும் – அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 1
‘நீட்’ தேவையில்லை எனும் தமிழக மசோதாவுக்கு
உடனே ஒப்புதல் வேண்டும்
தி.மு.க. ஆட்சி காலத்தில், 2006ஆம் ஆண்டில் முறையாகச் சட்டமியற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நுழைவுத்தேர்வினை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிய தமிழ்நாட்டிற்கு, “நீட்”” தேர்விலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும், ஏழரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை ஏளனமாகக் கருதி இழிவுபடுத்திடும் வகையில், தொடர்ந்து தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு மாறாக மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வையும் நடத்தி, இப்போது ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் கட்டாயம் என்று அறிவித்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவமிக்க சர்வாதிகாரப் போக்கை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.
ஒரு போட்டித் தேர்வுக்கு தேவையில்லாத கடுமையான கெடுபிடிகளை தேர்வு மையங்களில் வேண்டுமென்றே நடைமுறைப் படுத்தி, தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அவமானப்படுத்தித் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் சி.பி.எஸ்.இ.க்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு,  மாணவர் உலகம் எப்போதும் கண்டும் கேட்டுமிராத சி.பி.எஸ்.இ. வாரியத்தின் பண்பாடற்ற செயலுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இன்னும் மனித உயிர்களைக் காவு கேட்காமல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீட் விலக்கு மசோதாவிற்கு, அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளையொட்டி மேலும், காலங்கடத்தாமல் உடனடியாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அதற்கான அழுத்தத்தை அதிமுக அரசு கொடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 2
முதலமைச்சர், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை
அழைத்துப் பேசித் தீர்வு காண வேண்டும்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய உயர்வு, ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட நிலுவையில் இருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஜனநாயகத்தில் அடக்குமுறை ஒரு போதும் தீர்வாகாது என்பதையும் அடக்குமுறையே தீர்வுகாண முதன்மைத் தடையாகிவிடும் என்பதையும் அதிமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.  மாநில நிர்வாகம் இயங்குவதை நிறுத்தி மேலும் நிலைகுலைந்து போகாமல் இருக்க, கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென அனைத்துக்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 3
“காவிரி மேலாண்மை வாரியம் – அடுத்தகட்ட நடவடிக்கை
2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு உரிய நீதியை வழங்காமல் அலட்சியப்படுத்திடும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதனைத் திரித்தும் திசை திருப்பும் வகையிலும் வேறு வேறு பொருள்பட அறிவிப்புகளைச் செய்து, ஏறக்குறைய மூன்று மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது மட்டுமின்றி, கர்நாடகத் தேர்தல் கணக்கை மனதில்கொண்டு, பலமுறை “கால அவகாசம்”” கோரும் மனுக்கள் தாக்கல் செய்து, ஒரு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைத் திட்டமிட்டு சவாலுக்கு அழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோரி தமிழகத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் விதத்திலும், தமிழ்நாட்டு விவசாயிகளை வேதனைத் தீயில் தள்ளி, காவிரி மண்டலத்தை வறண்ட பாலைவனப் பிரதேசமாக்கவும் முனையும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – தமிழக விரோத மற்றும் ஜனநாயக விரோதப் போக்கு தொடருமாயின், வருகிற 15-5-2018 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணி அளவில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து  விவாதித்து முடிவெடுப்பதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.
மாலை 05.05 – இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி. ஜவாஹிருல்லா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாலை 05.00 – சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

கருத்துகள் இல்லை: