சனி, 12 மே, 2018

100 நாள் வேலைனதான் பேரு. ஆனா 20 நாள் கூட வேலை தர மாட்டீங்கறாங்க. ஒரு நாளைக்கு 110 ரூபாய்தான்

மின்னம்பலம் :
சிறப்புக் கட்டுரை: வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்குக் காவிரி கிடைக்குமா ? (பாகம் 4)சிறப்புக் கட்டுரை: வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்குக் காவிரி கிடைக்குமா ? (பாகம் 4)
பிரகாசு
பயன்படாத ஊரக வேலை, பயிர்க் காப்பீடு:
வேலையில்லாத மக்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பயனளிக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். "100 நாள் வேலைனதான் பேரு. ஆனா 20 நாள் கூட வேலை தர மாட்டீங்கறாங்க. ஒரு நாளைக்கு 110 ரூபாய்தான் சம்பளமும் தராங்க" என்று ஆதங்கப்படுகிறார் லட்சுமி. "எங்களுக்கு சம்பளம் தர மாதிரி கணக்கு காட்டத்தான் ஒரு நாளுக்கு 110 ரூபாய் கொடுத்து 25 நாள் வேலை தராங்க" என்கிறார் ராஜேந்திரன். 100 நாள் வேலைத் திட்டத்தில் தார் சாலை அமைத்தல் போன்ற பணிகளை உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு, அப்பாவி மக்களுக்கு வேலை தராமல் ஏமாற்றுகிறார்கள் என்கிறார் பொன்னி கைசலாம். அரசாங்கம் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு நிர்ணயித்த ஊதியத் தொகை 150 ரூபாய். ஆனால் நாம் பேசியவரை இந்த இரு மாவட்டங்களிலும் எங்குமே 120 ரூபாய்க்கு மேல் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில்லை. முழுதாக 100 நாட்கள் வேலை அளிப்பதும் இல்லை. இந்த குறைந்தபட்சத் தொகையும், வேலையும் கூட ஊழியர்களுக்குக் கிடைக்காமல் ஊழல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அதேபோல கடந்த ஆண்டு நூறு விழுக்காடு இழப்பு ஏற்பட்டிருந்தாலும் முறையாக பயிர்க் காப்பீடு கிடைக்கவில்லை என்கிறார் தண்டாயுதபாணி. இவர் தனது பத்து ஏக்கருக்கும் சேர்த்து 20,000 ரூபாய் நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தில் பயிர்க் காப்பீடு செய்திருக்கிறார். இவருக்கு மட்டுமில்லை, நாகை மாவட்டத்தில் பலர் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தின் நாகை, 58 பாலையூர், தெத்தி, வடகுடி ஆகிய பகுதிகளின் வருவாய் துறை கணக்கீட்டின் படி கடந்த ஆண்டில் பயிர் செய்யப்பட்டிருந்த சாகுபடி பரப்பு 1,764.07 ஏக்கர்களாகும். ஆனால் நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் போலியான சாகுபடி பரப்புகளை இணைத்து 4,807.88 ஏக்கர்களாகக் கணக்கிட்டுள்ளது.

அதேபோல 100 விழுக்காடு இழப்புக்கு ஏக்கருக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நிறுவனமோ 58 பாலையூரில் 10,580 ரூபாயும், தெத்தியில் 8,395 ரூபாயும், வடகுடியில் 9,665 ரூபாயும், நாகையில் 4,917 ரூபாய் மட்டுமே ஏக்கர் ஒன்றுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மோசடிகள் மூலமாக நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் 2,71,30,398 ரூபாய் இலாபம் அடைந்துள்ளதாக அங்குள்ள விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. ஏப்ரல் 26ஆம் தேதியன்று நாகப்பட்டினத்தில் உள்ள நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். எனவே பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிற விவசாயிகளுக்கு நிவாரணியாக இல்லை.
"காவிரியில் தண்ணீர் வராத நிலையில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பித்தான் கடந்த 50 ஐம்பது வருடங்களுக்கு மேலாக விவசாயம் மேற்கொண்டிருக்கின்றனர். அதிலும் மணல் கொள்ளை, இயற்கை எரிவாயு திட்டங்கள் என விவசாயத்தை அழித்து டெல்டா மண்ணைப் பாலைவனமாக்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமாக இறங்கிவிட்டனர்" என்கிறார் ஆறுபாதி கல்யாணம். "தடுப்பணைகள் கட்டினால் நீரைத் தேக்கி நிலத்தடி நீர் மட்டத்தைக் காக்கலாம். ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் ஆட்சியாளர்கள் எடுக்கவே இல்லை. தடுப்பணைகள் கட்டினால் ஆற்று மணல் கொள்ளைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றுதான் தடுப்பணைகள் கட்ட மறுக்கிறார்கள்" என்கிறார் திருநாங்கூர் இலங்கேஸ்வரன். மேலும், தடுப்பணைகள் கட்டி, அவ்வப்போது நீர்நிலைகள் தூர்வாரப்பட்டிருந்தால் நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
மணல் கொள்ளை:
நன்னிலத்திலோ ஆற்று மணல் கொள்ளை மிக வெளிப்படையாகவே நடந்து வருகிறது. நன்னிலம் தொகுதியில் பரவலாகவே மணல் வளம் அதிகமாக உள்ளது. இங்குள்ள விவசாயிகளிடம் கூடுதல் விலை கொடுத்து வேளாண் நிலங்களை வாங்கி மிகவும் துணிச்சலாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். "ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி 30 அடியில இருந்த நிலத்தடி நீர் இப்போ 150 அடிக்கு மேல போனதுக்கு காரணமே இந்த மணல் கொள்ளைதான்" என்று கொந்தளிக்கிறார் பொன்னி கைசாலம். உள்ளூர் அதிமுக பிரமுகர்கள்தான் இதுபோன்ற மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் நமக்கு ஆதாரப்பூர்வமாக விளக்குகிறார் இவர். ஆனைக்குப்பத்துக்கு 1 கிலோமீட்டர் தொலைவில் 20 ஏக்கர் நிலத்தில் மணல் அள்ளிக் கொண்டிருக்கின்றனர். இதுபோல நன்னிலத்தின் மேலும் சில பகுதிகளிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
பொன்னி கைலாசம் மேலும் கூறுகையில், "ஆத்துலயே மணல் அள்ளக் கூடாதுன நீதிமன்றம் சொல்லுது. ஆனா இவங்க விளை நிலத்துல 20 மீட்டருக்கு மேல தோண்டி மணல் எடுத்திட்டு இருக்காங்க. எவ்ளோ போராட்டம் பண்ணாலும் நிறுத்தவே முடியல. ஆளுங்கட்சிக்காரங்கத்தான் இங்க மணல் அள்ளறாங்க. யாராவது எதிர்த்து கேட்க வந்தாலும் அவங்க ஊருக்கு கோயில் கட்ட பணம் குடுக்கிறேன்ன பேசி முடிச்சிடறாங்க. எதிர்கால சந்ததிகள பத்தி இவங்களுக்கு எந்தக் கவலையும் இல்ல. மக்களைத் திரட்டி நாங்க இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டாம விட மாட்டோம்" என்கிறார் உறுதியாக. அதுமட்டுமின்றி நன்னிலத்தில் இப்போது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான எண்ணெய் கிணறு அமைக்கும் பணியிலும் ஓ.என்.ஜி.சி. ஈடுபட்டுள்ளது. இதற்காக 6000 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு ஒன்றையும் அமைத்துள்ளனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் சரிவடைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிராகவும் இப்பகுதி மக்கள் போராடிக் கொண்டுள்ளனர். மேலும் இப்பகுதிகளில் எடுக்கப்படும் ஆற்று மணல் எரிவாயு கிணறுகளுக்கு விற்கப்படுவதாகவும் பொன்னி கைலாசம் குற்றம்சாட்டுகிறார்.

டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன்:
டெல்டா மண்டலத்தை பெட்ரோலிய மண்டலமாக்கி விவசாயத்தை ஒழித்துக்கட்ட முடிவு எடுத்துதான் காவிரியில் தண்ணீர் விடாமல் ஒன்றிய அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது என்கிறார் ஆறுபாதி கல்யாணம். டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிற போதிலும், இப்பகுதியில் காஷ்மீரைப் போன்றும், வட கிழக்கு மாநிலங்களைப் போன்றும் இராணுவத்தைக் குவித்து மக்களை மிரட்டி ஒடுக்கும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபடத் துவங்கியிருக்கிறது. இதுபோன்ற ராணுவக் குவிப்பு என்பது தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்றிய அரசு மீதான கோபத்தையும், வெறுப்பையும் மேலும் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் பேரிடர் காலங்களில் கூட முந்தைய அரசுகள் ராணுவத்தை அழைத்ததில்லை. ஆனால் இப்போதைய ஆளும் கட்சிக்கு இதை ஒரு அவமானமாகக் கருதும் மனநிலை கூட இல்லை.
பல்வேறு எதிர்ப்புகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியமும், தேவையும் இல்லை என்கிறார் ஆறுபாதி கல்யாணம். "இந்தியாவில் ஒட்டுமொத்தமாகக் கிடைக்கக் கூடிய கச்சா எண்ணெய் வளத்தில் ஒரு விழுக்காடும், எரிவாயுவில் மூன்று விழுக்காடும்தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த மிகக் மிகக் குறைந்த அளவிலான இயற்கை வளங்களை எடுத்து, தமிழ்நாட்டின் வளமான வேளாண் நிலங்களை வீணடிக்க வேண்டாம்" என்று கூறும் இவர் இதற்கான மாற்றுத் திட்டங்களையும் முன்வைக்கிறார். "இந்தியாவுடைய பரப்பளவு 328 மில்லியன் ஹெக்டேர். இதில் 10 விழுக்காடு பரப்பளவில் சோலார் மின்னுற்பத்தி செய்தால் கூட 80 லட்சம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். எனவே மின்சாரத் தேவையைப் பற்றி நாம் கவலைப் பட தேவையில்லை" என்கிறார்.
மேலும், இப்போது தமிழ்நாட்டில் 35 லட்சம் கன மீட்டர் இயற்கை எரிவாயு ஆண்டுக்கு எடுக்கப்படுகிறது. நெடுவாசல் உள்ளிட்ட புதிய எண்ணெய் கிணறுகளையும் சேர்த்து எதிர்காலத்தில் 38 லட்சம் கன மீட்டர் எரிவாயு எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். விவசாய நிலங்களைப் பாழ்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி எடுக்கப்படும் இத்திட்டத்திற்கு மாற்றாகக் கோ-4 (co four) புல் வளர்த்து இயற்கை எரிவாயு பெறலாம். நாட்டின் மொத்த வேளாண் நிலப்பரப்பில் 1 லட்சம் ஹெக்டேரில் கோ-ஃபோர் புல் வளர்த்தால் கூட ஆண்டுக்கு 80 லட்சம் கன மீட்டர் இயற்கை எரிவாயு கிடைக்கும். இவர்களின் எதிர்கால மதிப்பீட்டைக் காட்டிலும் இரு மடங்கு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யலாம் என்று தமிழ்நாட்டின் முதன்மை வன பாதுகாவலராக இருந்த டாக்டர் குமாரவேல் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி கோ-ஃபோர் பயிரிடுவதன் மூலம் விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்று விளக்குகிறார் ஆறுபாதி கல்யாணம்.
மண்ணையும், மக்களையும் காக்கும் உண்மையான அக்கறை கொண்ட ஒரு அரசாக இருந்தால் இதுபோன்ற பாதுகாப்பானத் திட்டங்களைச் செயல்படுத்தியிருப்பார்கள். ஆனால் இவர்களோ பெரு நிறுவனங்கள் வாழ, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்ட துணை போய்க்கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றவாறு விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிப் பெரு நிறுவனங்களுக்கு அளிக்கும் வகையில் நில உரிமைச் சட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை நிறைவேற்றவும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியை அளிக்கும் மாற்றுத் திட்டங்கள் இருக்கும்போது நாசகரத் திட்டங்களை செயல்படுத்தத் துடிப்பது கார்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கிற்காகத்தான் என்பதை மறுத்து நியாயமான காரணம் ஒன்றையாவது இவர்களால் கூறிட இயலுமா?
எனவே தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறுத்துவது அவசியமாக இருக்கிறது. "தமிழ்நாட்டுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் குறைந்தால் கூட 6000 ஏக்கர் பாசனம் பாதிக்கப்படும். உச்ச நீதிமன்றம் இப்போது 17 டி.எம்.சி. வரை குறைத்து வழங்கியுள்ள தீர்ப்பால் மேலும், 1 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கான தண்ணீர் இல்லாமல் போகும்" என்று கூறுகிறார் சாமி நடராஜன். டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க காவிரியில் தற்போது உச்ச மன்றம் இறுதித் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ள 177.25 டி.எம்.சி. தண்ணீர் போதாது என்றாலும், அதையாவது தற்போதைக்கு உறுதியாக கிடைக்கச் செய்வதற்கான உறுதியை ஏற்படுத்த வேண்டும்.
மேலாண்மை வாரியம் ஒன்றே தீர்வு:
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க காவிரியில் தண்ணீர் அளிப்பதைத் தவிர வேறு திட்டங்களோ அல்லது முயற்சிகளோ நீண்டகாலப் பலனை அளிக்காது. நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்து வரும் ஆபத்தானப் போக்கை உணர்ந்தால் காவிரி நீரின் அவசியத்தை நம்மால் புரிந்துகொள்ள இயலும். ஆனால் "தமிழ்நாட்டில் 20 டி.எம்.சி. நிலத்தடி நீர் இருப்பதாகவும், அதில் 10 டி.எம்.சியை பாசனத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறுகிறது. எந்த ஆய்வின் அடிப்படையில் இப்படி நீதிமன்றம் கூறுகிறது நமக்குத் தெரியவில்லை. நமக்கு மட்டும் இந்தக் கருத்தைக் கூறிய நீதிமன்றம் கர்நாடகாவை எதிலும் கேள்விக்குட்படுத்தவில்லை" என்கிறார் சாமி நடராஜன்.
கர்நாடகாவில் நிலவும் அரசியல் எதிர்ப்புகளின் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், உரியப் பங்கீட்டில் தண்ணீர் வழங்கவும் ஒன்றிய அரசு தயங்குகிறது என்பதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மேலும், தமிழ்நாட்டில் காவிரி நீர் பெருமளவில் கடலில் கலந்து வீணாகிறது என்ற ஒரு பொதுவான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. "உண்மையில் தமிழ்நாட்டு கடலில் கலக்கின்ற காவிரி நீரின் அளவு ஆண்டுக்கு 20 டி.எம்.சி.தான். ஆனால் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் தண்ணீரில் ஆண்டுக்கு 2000 டி.எம்.சி. நீர் வீணாகிக் கடலில் கலந்து கொண்டிருக்கிறது" என்கிறார் ஆறுபாதி கல்யாணம்.
கர்நாடகம் காவிரியிலிருந்து கேட்கும் அதிகபட்ச தண்ணீரின் அளவு 465 டி.எம்.சி. இப்போது காவிரியில் கர்நாடகா பெற்று வரும் நீரைக் கழித்து விட்டுப் பார்த்தால் அவர்களின் தேவையை விட சுமார் பத்து மடங்கு தண்ணீர் அங்குக் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. அதில் 200 டி.எம்.சி.யை பாதுகாத்துக் கொண்டால் கூட அவர்களின் தேவை பூர்த்தியாகி விடும். தமிழ்நாட்டின் தேவையை காவிரிலியிருந்து பெற்றுக் கொள்ளலாம். இரு மாநில மக்களுக்கும் இடையில் நிலவும் தேவையற்ற சர்ச்சைகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து விடலாம். ஆனால் எந்தவொரு காரணமுமின்றி 70 ஆண்டுகளாக இப்பிரச்னையை தேசியக் கட்சிகள் நீட்டித்து வருகின்றன. இந்தக் தேசியக் கட்சிகள் தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி பேசுவதுதான் நமக்கு வேடிக்கையாக இருக்கிறது.
தேவையைப் பூர்த்தி செய்வதிலும், மாற்றுத் தீர்வை நோக்கிப் பயணிப்பதிலும் இந்தியாவிற்கு தமிழ்நாடு பலமுறை வழிகாட்டியிருக்கிறது. இந்திய ஒன்றியத்தால் தமிழ்நாட்டுக்குப் பயன் இல்லை, ஆபத்துதான் நிறைந்திருக்கிறது, எனவே இந்திய ஒன்றியத்துடனான தமிழ்நாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ்நாட்டில் வெளிப்படையாக எழத் தொடங்கியுள்ளன. இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையை போக்கிக் காவிரி வாரியம் அமைத்து உரியத் தண்ணீரை திறந்து விடுவது மட்டுமே தமிழ்நாட்டில் தற்போது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைக்கும்.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்குக் காவிரி கிடைக்குமா? - பாகம் 1
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்குக் காவிரி கிடைக்குமா? - பாகம் 2
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக்குக் காவிரி கிடைக்குமா? - பாகம் 3
மின்னஞ்சல் முகவரி: feedback@minnambalam.com

கருத்துகள் இல்லை: