செவ்வாய், 8 மே, 2018

மாணவர்களுக்கு கைகொடுக்காத அரசு நீட் பயிற்சி MBBS seat, you need just 5% in physics, 20% in biology

கை கொடுக்காத நீட் பயிற்சி!மின்னம்பலம்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசு அளித்த இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களால் நீட் தேர்வில் ஒருசில கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடிந்தது.
இதுகுறித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளனர். அதில் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.
“கேள்வித்தாளின் ஒரு பகுதியான உயிரியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஓரளவுக்கு பதிலளிக்க முடிந்தது; ஆனால் இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் பாதிக்குக்கூட எங்களால் பதிலளிக்க முடியவில்லை; என்னால் 20 சதவிகிதம் மட்டுமே பதிலளிக்க முடிந்தது” என ஈரோடு அரசுப் பள்ளியில் படித்து கோயமுத்தூரில் நீட் தேர்வு எழுதிய தனுஸ்ரீ கூறினார்.

“இயற்பியலில் உள்ள பெரும்பாலான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன; ஆனால் தேர்வுக்குத் தயாராவதற்கும், படித்தவற்றை ஒருமுறை திருப்பிப்பார்ப்பதற்கும் நேரம் இருந்திருந்தால், தேர்வைச் சிறிது சிறப்பாக செய்திருக்க முடியும்” என கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவன் கூறினார்.
பயிற்சி மையத்தில் படிப்பதற்காகப் பல மெட்டீரியல்கள் கொடுக்கப்பட்டன. ஆசிரியர்கள் விரிவான முறையில் விளக்கம் அளித்திருந்தார்கள். என்ராலும், இவை அனைத்தும் கடைசி நேரத்தில்தான் மாணவர்களுக்குக் கிடைத்தன; ஆசிரியர்களுக்கும் அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கப் போதுமான நேரம் இல்லை, மாணவர்களுக்கும் படித்ததைத் திருப்பிப்பார்ப்பதற்கு நேரம் இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
“நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த ஆண்டு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் எங்களுக்குப் பயனுள்ளதாக இல்லை. அதனால் இவை அனைத்தும் பயனற்றது என கூற முடியாது. இந்தப் பயிற்சிக்குச் சென்றதால்தான் ஏதோ சில கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்கவாவது முடிந்தது” என பாரதி என்ற மாணவி கூறினார்.
”டாக்டர் ஆக வேண்டும் என்ற எனது லட்சியம் தற்போது கனவாக மாறிவிட்டது. இந்தப் பயிற்சி, தேர்வு முழுவதும் சும்மா உட்கார்ந்திருப்பதைக் குறைந்திருக்கிறது. அவ்வளவுதான்” என தனுஸ்ரீ கூறினார்.
மருத்துவ சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் மாணவர்கள் வேறு படிப்புக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்துவிட்டனர். பாரதி என்ற மாணவி வேளாண் துறை படிக்க விண்ணப்பிக்கப் போவதாகவும், தனுஸ்ரீ பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ”இலவச நீட் பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டதால், அவர்களால் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் இந்தாண்டு கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும்.
தற்போது நடைபெற்ற நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெறுவதற்கு 72,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 8,600 பேர் முழு பயிற்சி பெற விரும்பினர். அதில் 3,154 பேர் மட்டுமே தங்கியிருந்து படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு நீட் பயிற்சியைத் தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நீட் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 50,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதில் நன்கு படிக்கும் 10,000 மாணவர்களுக்குத் தங்கியிருந்து படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்” என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: