புதன், 9 மே, 2018

கட்டாய ஆன்லைன் கலந்தாய்வு ... வங்கி கணக்கு இல்லாத வறியமாணவர்கள் எதிர்காலம் ...?

ஆன்லைன் கலந்தாய்வு: வங்கிக் கணக்கு இல்லாதவர்கள்?மின்னம்பலம்: வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு எவ்வாறு விண்ணப்பிக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் மாணவர் சேர்க்கையை, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வுமான சி.வி.என்.பி.எழிலரசன் மற்றும் வழக்கறிஞர் பொன்பாண்டி ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சேஷ சாயி அடங்கிய அமர்வு முன்பு மே 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது இது தொடர்பாக, உயர் கல்வித் துறை செயலாளரும், அண்ணா பல்கலைக்கழகமும் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 9 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், தமிழக அரசின் உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொறியியல் கலந்தாய்வுக்காக மாணவர்களும், பெற்றோரும் சென்னை வர வேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
“ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது கட்டணத்தை டெபிட் கார்டு,கிரேடிட் கார்டு, பயன்படுத்தி இணைய வழி மூலமாக மட்டுமே செலுத்தமுடியும் என்பதால் கிராமப்புற மாணவர்களுக்கு இது சிரமமாக இருக்கும்” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் பலர் வங்கிக் கணக்கு இல்லாதவர்களாகத்தான் உள்ளார்கள். இந்நிலையில் வங்கிக் கணக்கு இல்லாத விண்ணப்பதாரர்கள் எவ்வாறு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கம் , டிடி அல்லது பே ஆர்டர் மூலம் செலுத்த முடியுமா என்பது குறித்து நாளை அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இதுதவிர ஆன்லைன் விண்ணப்ப முறையில் விண்ணப்பப் படிவம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பொறியியல் படிப்பைப் படிக்க முடியாதா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்ந்தெடுத்த கல்லூரியை மாற்றுவது குறித்த கேள்விக்கு , ஆன்லைனில் கல்லூரியை தேர்ந்தெடுத்த மாணவர்கள் அக்கல்லூரியை மூன்று நாட்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: