செவ்வாய், 8 மே, 2018

மத்திய அரசை நம்பினால் காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட கிடைக்காது - தமிழக அரசு வாதம்

மாலைமலர் :காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், வரைவு செயல்திட்டத்தை 14-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தாமதம் செய்தபடி உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு 6 வாரம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்தது. இந்த நிலையில் காவிரி வழக்கு விசாரணை கடந்த 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போதும் கர்நாடக தேர்தலை காரணம் காண்பித்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. எனவே 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்டது. இதற்கு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா கண்டனம் தெரிவித்தார்.

அதோடு தமிழ்நாட்டுக்கு ஏப்ரல், மே மாதத்திற்குரிய அளவின்படி 4 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு வெளியான அடுத்த ஓரிரு மணிநேரத்துக்குள் அதை ஏற்க முடியாது என்று கர்நாடகா அறிவித்தது. எங்கள் குடிநீருக்கே தண்ணீர் இல்லை. எப்படி தமிழ் நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

நேற்று, கர்நாடக அரசு சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் “மழை பற்றாக்குறை நீடிப்பதால் கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.


கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அடுத்த 2 மணி நேரத்தில் தமிழக அரசு சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “முதலில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட வேண்டும். மேலும் 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து மத்திய அரசும் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், “ஸ்கீம் பற்றிய வரைவு திட்டம் இறுதி கட்ட நிலையில் உள்ளது. இன் னும் 10 நாட்களுக்குள் அது தாக்கல் செய்யப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணிக்கு காவிரி வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது கர்நாடக அரசு வக்கீல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து தமிழக அரசு வக்கீல் வாதாடுகையில், “மத்திய அரசை நம்பினால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. தமிழக அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது” என்றார்.

இதையடுத்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சில வேண்டுகோளை விடுத்தார். அவர் கூறியதாவது:-

கர்நாடக தேர்தல் காரணமாக வரைவு திட்டம் குறித்து எங்களால் எந்த இறுதி முடிவையும் எடுக்க இயலவில்லை. காவிரி வரைவு திட்டத்தை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டுமானால் 10 நாட்கள் அவகாசம் வேண்டும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டி உள்ளது. எனவே 14-ந்தேதி வரையாவது இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு வழக்கறிஞரின் வாதத்திற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தீர்ப்ப அமல்படுத்த வில்லை என மத்திய அரசு சொல்வது பதிலா? என அவர் கேள்வி எழுப்பினார்.

தீர்ப்பை அமல்படுத்தாததும் நீதிமன்ற அவமதிப்பே என கூறிய சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 14-ந்தேதி வரைவு திட்டத்தை மத்திய அரசு கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “14-ந்தேதி மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி காவிரி பிரச்சினை குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் இன்று அவர் அது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்பது 14-ந்தேதிதான் தெரியும். மத்திய அரசு கர்நாடகா தேர்தலை காரணம் காண்பித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக என்ன முடிவு எடுத்தாலும் அது கர்நாடக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் மத்திய அரசு மிக சாதுரியமாக செயல்பட்டு வழக்கு விசாரணையை 14-ந்தேதிக்கு கொண்டு சென்றுவிட்டது.

14-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வரும் நிலையில் மறுநாள் 15-ந்தேதி கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: