புதுடில்லி: நாட்டில் புதிதாக, 20 ஐ.ஐ.டி.,க்கள் அமைக்க வகை செய்யும்
மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை
கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில்,
பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள, சில முக்கிய மசோதாக்களுக்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில்
புதிதாக, 20 ஐ.ஐ.டி.,க்களை துவக்கவும், ஐ.ஐ.டி.,க்களுக்கு தன்னாட்சி
அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும், மசோதாவுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யும், 128 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த
செலவில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 35 சதவீதத்தை, சம்பந்தப்பட்ட மாநில
அரசுகளும், மீதமுள்ள 15 சதவீதத்தை, தொழில் நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ளும்.
அடுத்ததாக, தெருவோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. "தெருவோர வியாபாரிகள் கட்டுப்பாடு மற்றும்
வாழ்வாதார பாதுகாப்பு சட்டம்' என்ற, இந்த சட்ட மசோதா அமலுக்கு வந்தால், 18
வயதிற்கு மேற்பட்ட, தெருவோர வியாபாரிகள் அனைவரும் உள்ளூர்
நிர்வாகத்தினரிடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். பதிவு செய்யப்பட்ட
உடன் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை பெற்றவர்கள்,
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், வியாபாரம் செய்யலாம். நெடுஞ்சாலை
திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும்
வகையிலும், அதிகப்படியான செலவை தவிர்க்கும் வகையிலும், நெடுஞ்சாலை திட்டப்
பணிகள் குறித்த, மாதிரி ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், அமைச்சரவை ஒப்புதல்
அளித்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், முன்பேர
வர்த்தக ஒழுங்குமுறை திருத்த சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து
முடிவு எடுப்பது, ஒத்தி வைக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக